கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் உப அதிபரும் Center for Excellence இன் பணிப்பாளருமான அஷ்ஷேய்க் ஏ. எம். மிஹ்ழார் இந்தோனேசியத் தலைநகரான ஜகார்த்தாவில் 2019 டிசெம்பர் 17-–19 ஆம் திகதி வரை இடம்பெற்ற பௌத்த-முஸ்லிம் உறவு தொடர்பான செயலமர்வில் கலந்துரையாடப்பட்ட விடயங்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறார்.
q: பல்வேறு சமயங்கள் வாழும் தெற்காசிய, தென்கிழக்காசிய பிராந்தியத்தில் பௌத்த முஸ்லிம் உறவை மையப்படுத்தி இந்தோனேசியா ஜகார்த்தாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசெம்பர் 17 முதல் 19 ஆம் திகதி வரை இடம்பெற்ற மாநாடும், செயலமர்வும் எவ்வாறான அடைவுகளை இலக்காகக் கொண்டு அமைந்தன?
பௌத்த முஸ்லிம் உறவை மேம்படுத்தும் நோக்கில் செயலமர்வின் பிரதான இலக்குகளாக பின்வரும் இரு விடயங்கள் கவனத்திற்கொள்ளப்பட்டன.
1. தெற்காசிய, தென்கிழக்காசிய பிராந்தியத்தில் குறிப்பாக பௌத்த-முஸ்லிம் உறவிலும் ஏனைய சமய உறவுகளிலும் காணப்படும் பிரதான போக்குகளின் நடப்பு நிலவரங்கள் பற்றி பரிசீலனை செய்தல்.
2. சமயத் தலைவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் இடையே பரஸ்பர ஆக்க பூர்வமான கூட்டுறவை ஏற்படுத்துவதன் மூலம் தேசிய, பிராந்திய மட்டங்களில் பிரதான சமூக விவகாரங்களை கையாள்வதற்கு வழிகோலுதலும் முக்கிய நோக்காகும். இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, மியன்மார், இலங்கை போன்ற நாடுகளில் பன்மைத்துவத்தின் தோற்றப்பாட்டை மக்களது சமய, கலாசார, இன விவகாரங்களில் தெளிவாக காணலாம். ஆங்காங்கே சில முரண்பாடுகள் காணப்பட்டபோதும் வேற்றுமையில் ஒற்றுமையைப் பலப்படுத்தும் அம்சங்களை இனங்கண்டு நடைமுறை சாத்தியமான செயல்திட்டங்களை பரிந்துரைப்பதற்கான பரந்தளவிலான சந்தர்ப்பம் இச்செயலமர்வுகளில் பங்குபற்றியவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டு தெற்காசிய, தென்கிழக்காசிய பிராந்தியத்தில் சமயங்களிடையே பதற்றநிலை அவதானிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு துன்பியல் நிகழ்வை தொடர்ந்து வெறுப்பு பேச்சு, வன்முறைகளைத் தூண்டும் நிகழ்வுகள் பரவலாக இடம்பெற்ற நிலையில் பதற்றநிலை மேலும் அதிகரித்தது. இப்பிராந்தியத்தில் குறிப்பிட்ட சில சமயங்களுக்கு எதிரான உணர்வு வலுப்பெற்றது. இவ்வாறான நிலைமை ஒரு நாட்டில் தோன்றினாலும் பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளிலும் அதன் அதிர்வலைகளை பிரதிபலித்தன. சமூக வலைத்தளங்களூடாக போலிச்செய்திகள், வதந்திகள் பரப்பப்பட்டு சமூகங்களிடையே நம்பிக்கையற்ற நிலை உருவானது. இவ்வாறான நிலையில் மக்களிடையே சமாதான சகவாழ்வை, நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை பற்றி சிந்தித்து செயற்படுவதற்கான ஊக்குவிப்பை, உந்துதலை ஜகார்த்தா செயலமர்வு வழங்கும் என்பது ஏற்பாட்டாளர்களின் எதிர்பார்ப்பாகும்.
q: முரண்பாடுகளை தவிர்த்து பல்லின சமூகங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த வழிகாட்டிய ஜகார்த்தா மாநாட்டையும் செயலமர்வையும் வடிவமைத்த பிரதான ஏற்பாட்டாளர்களை பற்றி குறிப்பிடுவதாயின்……
வியன்னாவை தலைமையகமாக கொண்டுள்ள சமயங்கள், கலாசாரங்கள் இடையிலான கலந்துரையாடல்களுக்கான மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் சர்வதேச மத்திய நிலையம் (KAICIID), இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான நிறுவனம் (OIC) இந்தோனேசியாவை தளமாகக் கொண்ட குஸ்தூரியன் வலைப்பின்னல் அமைப்பு நாகரிகங்களிலான கலந்துரையாடல் ஒத்துழைப்புக்கான மத்திய நிலையம் என்பன இச்செயலமர்வை வெற்றிகரமாக நடத்துவதற்கு பங்களித்தன.
q:பௌத்த-முஸ்லிம் உறவை மையப்படுத்திய இத்தகைய செயலமர்வு இதற்கு முன்னரும் இடம்பெற்றுள்ளதா?
ஆம். 2017 ஆம் ஆண்டு தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் முதலாவது செயலமர்வு இடம்பெற்றது. இதனை வியன்னாவை தலைமையகமாக கொண்டுள்ள சமயங்கள், கலாசாரங்கள் இடையிலான கலந்துரையாடல்களுக்கான மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் சர்வதேச மத்திய நிலையமும் (KAICIID), இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான நிறுவனம் (OIC) என்பன இச்செயலமர்வை வெற்றிகரமாக நடத்துவதற்கு பங்களித்தன. முதலாவது செயலமர்வின் போது மியன்மார் விவகாரம் பலரதும் கவனத்தை ஈர்த்தது. அதன் விளைவாக (KAICIID) கைசீட் அமைப்பு மியன்மாரில் சமாதானத்தை நிலை நிறுத்துவதற்காக Peaceful Myanmar Initiative என்ற முன்னெடுப்பு ஆரம்பிக்கப்பட்டது.
கைசீட் நிறுவனத்தின் பயிற்றுவிப்புக்கான பணிப்பாளராக கடமையாற்றும் இலங்கையரான கலாநிதி சபியுல்லாஹ் மன்சூர் 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற செயலமர்வுகளில் முக்கிய வளவாளராக விளங்கியமை குறிப்பிடத்தக்கது.
q:ஜகார்த்தா செயலமர்வின்போது முக்கியமான பேசுபொருளாக அமைந்த விடயங்களென எவற்றை குறிப்பிடுவீர்கள்?
1. வெறுப்புணர்வை மற்றும் வன்முறையை தூண்டும் நடத்தைகளையும் சமூக ஊடகங்களில் அவற்றின் தாக்கத்தையும் எவ்வாறு எதிர்கொள்வது என்ற சமகால விவகாரம் கலந்துரையாடப்பட்டது.
2. அனைவரது புனிதத் தளங்களும் பாதுகாக்கப்படுவதன் அவசியம் உணர்த்தப்பட்டது.
அதுமட்டுமன்றி சமய நம்பிக்கைகளை பின்பற்றுவதற்கான சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
3. யாவருக்கும் சமயக்கல்வி : சமயப் பெரும்பான்மை, சிறுபான்மை என்ற பாரபட்சமின்றி அனைவரும் தமது சமய நம்பிக்கைகளுக்கு ஏற்ப சமயக்கல்வியைப் பெறுவதற்கான அனைத்துத் தேவைகளும் முறையாக நிறைவேற்றிக் கொடுக்கப்பட வேண்டியதன் கடப்பாடு உணர்த்தப்பட்டது. மலேசிய பாராளுமன்ற உறுப்பினரான கலாநிதி அஸ்மான், தாய்லாந்து செனட்டரான அனுசாசனா போன்ற அரசியல் பிரமுகர்கள் இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான நிறுவனம் (OIC) அமைப்பின் தஃவா கலந்துரையாடல் பிரிவின் பணிப்பாளரான கலாநிதி பசீர் அன்சாரி பல முக்கியஸ்தர்கள் தமது துறைசார்ந்த அனுபவங்களை இச்செயலமர்வின்போது பகிர்ந்துகொண்டனர். முகநூல் உட்பட சமூக வலைத்தளங்களூடாக சமாதானத்துக்கு குந்தகம் விளைவிக்கும் வெறுப்பு பேச்சு போன்ற நவீன சவால்களை எதிர்கொள்வதற்கு ஒவ்வொரு அரசாங்கமும் மேற்கொள்ளும் அண்மைக்கால நடவடிக்கைகள் மற்றும் நாடுவாரியான கருத்துபகிர்வுகள் செயலமர்வில் பங்குபற்றியவர்களை புதிய தீர்வுகளின் பால் சிந்திக்க தூண்டின. மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டிஆரச்சி, இலங்கையின் பாதுகாப்பு அமைச்சில் சமய தீவிரவாதம், வன்முறை, பயங்கரவாதம் என்பனவற்றை தடுப்பதற்கும் முறியடிப்பதற்குமான தேசிய வேலைத்திட்டத்தின் தலைவராக விளங்குவதால் ஈஸ்டர் தாக்குதலின் பின்னரான அவரது பார்வைகளும் பதிவுகளும் முக்கியத்துவம் பெற்றன. பேராசிரியர் ல்மோருவே பியரத்ன தேரர் உட்பட அங்கு பங்குபற்றிய இலங்கையைச் சேர்ந்த பெரும்பான்மை சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் வரலாறு நெடுகிலும் இலங்கை முஸ்லிம்கள் நாட்டில் அமைதியையும் சமாதான சகவாழ்வையும் பேணி நாட்டின் அபிவிருத்திக்கு உறுதுணையாக இன்றுவரை பங்காற்றி வருவதை நினைவுகூர்ந்தனர்.
q:ஜகார்த்தா செயலமர்வின்போது சமூகத்திற்கு பயன்பெறக்கூடிய தீர்மானங்கள் எதுவும் மேற்கொள்ளப்பட்டனவா?
செயலமர்வில் பங்குபற்றிய ஐந்து நாடுகளின் அரச பிரதிநிதிகளும், சமயத் தலைவர்களும் மூன்று நாட்களாக கலந்துரையாடிய பல்வேறு விடயங்களிலும் காணப்பட்ட பொதுவான அம்சங்களை தொகுத்து, இறுதிநாள் அமர்வின் போது கலாநிதி அம்ஜத் சலீம் ஜகார்த்தா பிரகடனத்தில் உள்ளடங்கவேண்டிய செயற்திட்டங்களை முன்மொழிந்து கலந்துரையாடினார். இதன்போது நம்பிக்கை, இனத்துவம், கலாசாரம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட அடையாள அரசியல், அநீதி என்பன இப்பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் வன்முறை முரண்பாடுகளுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் இட்டுச் சென்ற பிரதான காரணிகளாக அமைந்துள்ளதை அங்கு பங்குபற்றியோர் ஏற்றுக்கொண்டனர். அத்துடன் தெற்காசிய, தென்கிழக்காசிய பிராந்தியத்தில் பின்வரும் விடயங்கள் குறித்து கவனம் செலுத்தவேண்டியதன் முக்கியத்துவத்தையும் உணர்ந்துள்ளனர்.
1. சமய உட்பிரிவுகளிடையேயும், சமயங்களிடையேயும் கலந்துரையாடலை மேற்கொள்வதற்குரிய முன்னேற்றகரமான புதிய சூழலை உருவாக்கக்கூடிய நிகழ்ச்சி நிரல் ஒழுங்கமைக்கப்படவேண்டியுள்ளது. இப்பிராந்தியத்தையும், இப்பிராந்திய நாடுகளிலும் பொதுவான விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட சமயப் பன்மைத்துவத்தை புரிந்துகொள்ளக்கூடிய நிலையை உருவாக்கும் விதத்தில் அனைத்து சமயத்தவர்களும் கூட்டாக செயற்பட வேண்டும்.
2. அனைவரையும் உள்வாங்கக்கூடிய தன்மை உருவாக வேண்டும். இதற்காக இளைஞர்கள், பெண்கள், வலது குறைந்தோர் போன்றவர்களுக்கு உரிய இடத்தையும் வலைப்பின்னலையும் ஏற்படுத்திக் கொடுப்பது வரவேற்கத்தக்கது.
3. இப்பிராந்திய சமூகங்களிடையே காணப்படும் அச்சம், சந்தேகம், அவநம்பிக்கை என்பன களையப்பட்டு அதற்குப் பகரமாக நம்பிக்கை, நட்புறவு, பரஸ்பர சமூக உறவாடல் என்பவற்றை பலப்படுத்தல் வேண்டும். மேற்குறிப்பிட்ட விடயங்கள் உட்பட செயலமர்வில் கலந்துரையாடப்பட்ட பல விடயங்களில் பங்குபற்றியோரிடையே உடன்பாடு காணப்பட்டது. ஜகார்த்தா செயலமர்வில் பங்குபற்றிய தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடிய அரச தரப்பு கொள்கை வகுப்பாளர்களிடம் பலவிடயங்கள் கோரிக்கையாக நினைவூட்டப்பட்டன.
அவர்களின் எதிர்கால செயற்றிட்டங்களின் போது பின்வரும் விடயங்கள் குறித்து கவனத்திற்கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
1. சிறுபான்மை சமூகங்களுக்கெதிரான நடவடிக்கைகள் உட்பட ஏனைய சமய நம்பிக்கைகளை அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக தவறாக பயன்படுத்தப்படுவதை முறையாக கையாளக்கூடிய நிலையான முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
2. வழிபாட்டுத் தளங்கள், ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த பாரம்பரிய தளங்கள் என்பன அங்கீகரிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு பாதுகாக்கப்படவேண்டும். சமாதானம் நல்லிணக்கத்துக்காக அப்புனித இடங்களை பயன்படுத்த வழிபாட்டாளர்களுக்கு அனுமதிப்பதும் இன்றியமையாதது.
3. கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை மீறாத வகையில் வெறுப்பு பேச்சு, வன்முறையைத் தூண்டல் போன்ற விடயங்கள் குற்றச் செயலாக கருதப்பட்டு அது தொடர்பான சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டியுள்ளது.
4. சமயங்களின் உட்பிரிவுகளிடையேயும், சமயங்களிடையேயும் கலந்துரையாடலை ஊக்குவிக்க வேண்டியுள்ளது. அரச அலுவலர்களிடையேயும், கொள்கை வகுப்பாளர் களிடையேயும் சமய நம்பிக்கை தொடர்பான நம்பிக்கைகளை மேம்படுத்தும் வகையில் சமயத் தலைவர்களுடனும், சமய நிறுவனங்களுடனும் கலந்துரையாடலை முன்னெடுப்பர்.
5. பாடசாலைகளிலும், சமய நிறுவனங்களிலும் சர்வதேச தன்மை வாய்ந்த பொதுவான விழுமியங்களை கற்பிக்கக்கூடிய விதத்தில் சமயத்தலைவர்களுடன் கொள்கை வகுப்பாளர்கள் நெருங்கி ஒத்துழைப்பாக செயல்படுவர்.
மேலும் இச்செயலமர்வில் பங்குபற்றிய சமயத் தலைவர்களிடம் பின்வரும் விடயங்கள் குறித்து கவனம் செலுத்தவேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது :
1. சமய உட்பிரிவுகளிடையேயும் சமயங்களிடையேயும் கலந்துரையாடும் பண்பை பலப்படுத்தும் விதத்தில் அனைத்து சமூகங்களையும் அனுசரித்து நடைமுறை சாத்தியமான விதத்தில் செயற்பட வேண்டும்.
2. சிந்திக்கும் முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக உடன்பாட்டு சிந்தனையை வளர்க்கும் விதத்தில் நேர்மறையான விளக்கங்களை முன்வைத்தல் அவசியமாகும்.
3. ஒற்றுமை, நீதி, சூழல் பாதுகாப்பு, நல்லிணக்கம் என்பவற்றை ஏற்படுத்தும் விதத்தில் அனைத்து சமயங்களையும் உள்ளடக்கிய வழிபாடு மற்றும் கலந்துரையாடலுக்கான ஒரு பிரத்தியேக தினத்தை வரையறுத்தல் சிறப்பாக அமையும். ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்ட சமயங்களிடையேயான நல்லிணக்க வாரத்துடன் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் விதத்தில் இந்நாள் அமையலாம்.
4. வெறுப்பு பேச்சை விட்டு தவிர்ந்து கொள்ளும் விடயத்தில் சமயத் தலைவர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும். எவரேனும் பிறரை புண்படுத்தும் மொழியை பயன்படுத்தும் சந்தர்ப்பங்களில் முறையாக பொதுத்தளத்தில் அவர்களை ஆற்றுப்படுத்தும் விதத்தில் வழிகாட்டல்களை வழங்க வேண்டும்.
5. கட்டமைப்பு ரீதியான மாற்றங்களை ஏற்படுத்தும் விதத்தில் சமயத் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்களுடன் உற்சாகமாக கூட்டாக செயல்படுவது சிறந்த நடைமுறையாக அமையும்.
q: இலங்கையில் பௌத்த-முஸ்லிம் உறவை வலுப்படுத்தும் கூட்டு செயல்பாடுகளை மேற்கொள்வது தொடர்பாக இலங்கைப் பிரதிநிதிகளிடம் எவ்வாறான புரிந்துணர்வும், தீர்மானமும் காணப்படுவதாக கருதுகிறீர்கள்?
ஜகார்த்தா செயலமர்வில் கொள்கை வகுப்பாளர்களை பிரதிநிதித்துவப்படுத்திய புத்தசாசன அமைச்சின் பிரதம உள்ளக கணக்காய்வாளர் கமகே விமல், பாதுகாப்பு அமைச்சைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டிஆரச்சி, பௌத்த சமயத் தலைவர்களான கலாநிதி திவுலபெலெஸ்ஸே விமலானந்த தேரர், பேராசிரியர் வல்மோருவே பியரத்ன தேரர் ஆகியோர் முஸ்லிம் பிரதிநிதிகளுடன் கூட்டாக சமாதான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான தமது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளனர். தமது உயர் பதவிநிலைகளூடாக 2020 ஆம் ஆண்டு ஆற்றவுள்ள அவர்களது பணிகளில் சமாதான சகவாழ்வு, சமய நல்லிணக்கம் என்பவற்றை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கும் இடம் ஒதுக்கப்படலாம் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. இச்செயலமர்வைத் தொடர்ந்து அங்கு பங்குபற்றிய இலங்கையர்களிடையே கொழும்பில் சில சந்திப்புகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இச்செயலமர்வில் பங்குபற்றிய முஸ்லிம் சமயத் தலைவர்களான அஷ்ஷேய்க் எஸ். எச். எம். பழீல், அஷ்ஷேய்க் அர்கம் நூர் ஆமித், அஷ்ஷேய்க் ஏ. எம். மிஹ்ழார் ஆகியோர் கல்வித் துறையில் கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வகையில் பல்கலைக்கழக விரிவுரையாளரான கலாநிதி திவுலபெலெஸ்ஸ விமலானந்த தேரருடன் இணைந்து மேற்கொள்ள முடியுமான கல்வி செயற்திட்டங்களில் ஒன்றாக தாம் கடமையாற்றுகின்ற கல்வி நிறுவனங்களுக்கும் பௌத்த கல்வி நிறுவனங்களுக்கும் இடையில் கல்விசார் பரிமாற்றங்கள் களவிஜயங்களை மேற்கொள்வதன்மூலம் இரு தரப்பு உறவை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக இனங்கண்டுள்ளனர். அவ்வாறே வெறுப்பு பேச்சைக் கட்டுப்படுத்தி பன்மைத்துவத்தை ஊக்குவிப்பதற்கான வழிவகைகளை ஆராயும் கொள்கை வகுப்பாளர்களுக்கான மூன்று நாள் செயலமர்வு குறித்து பிரேரிக்கப்பட்டுள்ளது. சமய வழிபாட்டுத் தளங்கள் தொடர்பான தப்பபிப்பிராயத்தை களைந்து சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் தேசிய நல்லிணக்கத் தினம் மற்றும் நல்லிணக்க உரைகள் முன்மொழியப்பட்டுள்ளன. மாணவர் மத்தியில் இலங்கையில் உள்ள ஆன்மீக முதுசங்களைக் கொண்ட பாரம்பரிய தளங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் களவிஜயங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தெற்காசியாவிலும், தென்கிழக்கு ஆசியாவிலும் சமயங்களிடையேயான கலந்துரையாடலில் காணப்படும் சிறந்த நடைமுறைகளை பிரதிபலிக்கும் கண்காட்சி இப்பிராந்தியத்தில் உள்ள சமாதான செயற்பாட்டாளர்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் அவற்றிலிருந்து சிறந்த நடைமுறைகளை கற்றுக்கொள்ளவும் வாய்ப்பாக அமையுமென கருதப்படுகிறது. இச்செயலமர்வில் தீர்மானிக்கப்பட்ட செயற்திட்டங்களை கைசீட் நிறுவனத்துடன் ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளை கைசீட் அமைப்பின் இலங்கை உறுப்பினர்களான அஷ்ஷேய்க் ஏ. எம். மிஹ்ழார் மற்றும் தேசிய சமாதானப் பேரவையைச் சேர்ந்த நிஷந்த குமார் ஆகியோர் மேற்கொள்வர்.
q: இலங்கையில் சமூகங்களிடையே சமாதான சகவாழ்வைக் கட்டியெழுப்புவதற்காக சமாதான கல்வியை மக்கள் மயப்படுத்த வியன்னாவிலுள்ள கைசீட் (KAICIID) நிறுவனத்தின் பங்களிப்பு எவ்வாறு அமைந்துள்ளது?
கைசீட் (KAICIID) நிறுவனத்தின் பயிற்சிநெறியை பூர்த்தி செய்த சர்வதேச உறுப்பினர்களூடாக அவர்கள் வாழும் நாடுகளில் சமாதான திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றன. உதாரணத்திற்கு 2019 ஒக்டோபர் 29 ஆம் திகதி தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களிடையே சமயங்களிடையிலான கலந்துரையாடலும் பன்மைத்துவமும் என்ற தொனிப்பொருளில் கலாநிதி ரமீஸ் அபூபக்கர் நடாத்திய செயலமர்வை குறிப்பிடலாம். கல்கந்தே தம்மானந்த தேரர், திருமதி ஹொம், சுவாமி சிடாகாஷானந்த, அஷ்ஷேய்க் ஏ. எம். மிஹ்ழார், கலாநிதி ரமீஸ் அபூபக்கர், நிஷாந்த குமார, கலாநிதி தீகல்லே மஹிந்த தேரர், விலியம் ப்ரேம்குமார் எபநேசர் ஜோசப் பாதிரியார் ஆகியோர் வியன்னாவிலுள்ள கைசீட் நிறுவனத்தின் சமாதானம், கலந்துரையாடல் குறித்த பாடநெறியை பூர்த்தி செய்த உறுப்பினர்களாவர். இதுவரை 2015 முதல் 2019 வரை 59 நாடுகளைச் சேர்ந்த 279 பேர் கைசீட் நிறுவனத்தின் சமாதானம் கலந்துரையாடல் பற்றிய பாடநெறியை பூர்த்திசெய்துள்ளதுடன் கலை, கலாசாரம், சமயம், ஆய்வு சார்ந்த செயற்திட்டங்களை அமுல்படுத்தியுள்ளனர். சர்வதேச ரீதியில் நிலைபேறான சமாதானத்துக்காக கலந்துரையாடலை முக்கிய ஊடகமாக பயன்படுத்துகின்ற கைசீட் (KAICIID) நிறுவனம் கடந்த காலங்களில் மத்திய ஆபிரிக்க குடியரசு, மியன்மார், நைஜீரியா, அரபு பிராந்தியத்தில் குறிப்பாக ஈராக், சிரியா போன்ற நாடுகளில் கூடிய கரிசனையுடன் தனது ஆக்கபூர்வமான பணிகளை ஆற்றி வருகிறது. இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலை தொடர்ந்து இலங்கை குறித்தும் அதனது சமாதான சகவாழ்வுக்கான செயற்திட்டங்களை அமுல்படுத்துவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வகையில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் கொழும்பில் சினமன் கிரேன்ட் ஹொட்டலில் கைசீட் அமைப்பின் இலங்கை உறுப்பினர்களின் வலைப்பின்னல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு கலாநிதி சபியுல்லாஹ் மன்சூர் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்வின்போது சமாதானத்தை கட்டியெழுப்பும் சமயக் கலந்துரையாடலில் ஆர்வமுள்ள சமய நிறுவனங்களின் பிரதிநிதிகள் சிலரும் கலந்துகொண்டனர். கைசீட் நிறுவனத்தின் இலங்கைக்கான செயற்திட்டங்களில் ஓர் அம்சமாக எதிர்வரும் மார்ச்- ஏப்ரல் காலப்பகுதியில் சமாதானம், சமய கலந்துரை யாடலுக்கான மாநாடொன்று இடம்பெறவுள்ளது.
இது தொடர்பான பூர்வாங்க ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக சமாதான செயற்பாட்டாளரான சுசித் அபேவிக்ரம இத்துறையில் ஆர்வமும் ஈடுபாடும் உள்ள நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் பற்றிய விபரங்களை திரட்டி வருகிறார். இளைஞர், யுவதிகளை சமயக் கலந்துரையாடல் துறையில் ஈடுபடுத்துவதற்கு ஊக்குவிக்கும் செயலமர்வுகள் குறித்தும் கவனத்திற் கொள்ளப்பட்டுள்ளது. கைசீட் நிறுவனத்தின் பணிகளுள் கைசீட் நிறுவனத்தின் இணையத் தளம் ஊடாக சமாதானக் கல்வி தொடர்பான ஆக்கங்களையும் காணொளிகளையும் ஒன்லைன் பாடநெறிகளையும் பற்றி kaiciid.org என்ற இணையத்தளத்தினூடாக மேலும் அறிந்துகொள்ளலாம்.-Vidivelli
- நேர்காணல் : யாழ் அஸீம்