13ஆவது திருத்தத்தில் சில ஏற்பாடுகள் நடைமுறைக்கு சாத்தியமற்றவை
ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்களிடம் ஜனாதிபதி எடுத்துரைப்பு
அரசியல் தீர்வுகள் மக்களுக்கான பொருளாதார அபிவிருத்தியுடன் இணைந்து செல்லவேண்டும். 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை எடுத்துக் கொண்டால், அதிலுள்ள சில ஏற்பாடுகள் நடைமுறைக்கு சாத்தியமற்றவையென ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவுக்கும் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: நெதர்லாந்தின் தூதுவர் தஞ்சா கோங்க்ரிஜ்ப், இத்தாலி தூதரகத்தின் பிரதித் தலைவர் அலெக்ரா பைஸ்ட்ரோச்சி, ருமேனியாவின் தூதுவர் கலாநிதி விக்டர் சியுஜ்தியா, பிரான்சின் தூதுவர் எரிக் லாவெர்டு மற்றும் ஜெர்மனியின் தூதுவர் ஜோன் ரோட் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
அபிவிருத்தி மற்றும் அதிகாரப் பகிர்வு சந்திப்பில் கலந்து கொண்டிருந்த தூதுக்குழுவினர் அபிவிருத்தி மற்றும் அதிகாரப் பகிர்வு குறித்து அறிந்துகொள்வதில் ஆர்வமாக இருந்தனர். இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ,
“அரசியல் தீர்வுகள் மக்களுக்கான பொருளாதார அபிவிருத்தியுடன் இணைந்துசெல்ல வேண்டும். உதாரணமாக 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை எடுத்துக் கொண்டால், அதிலுள்ள சில ஏற்பாடுகள் நடைமுறை சாத்தியமற்றவை. அதற்குப் பதிலாக அரசியல்வாதிகள் மாற்றுத் தீர்வுகள் குறித்து சிந்திக்க வேண்டும்.
பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைகளிடம் ஒப்படைக்கப்பட்டால், அது பொலிஸ் பணிகளை அரசியல்மயமாக்குவதற்கு வழிவகுக்கும். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பதவிகளுக்கு குறித்த மாகாணங்களுக்குள் அடங்கும் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை நியமிப்பது நடைமுறை சாத்தியமானது. இது மொழித்திறன் மற்றும் கலாசார வேறுபாடுகளால் எழும் சிக்கல்களைத் தீர்க்கும்” என்று குறிப்பிட்டார்.
முதலீட்டுக்கான மையமாக இலங்கையைப் பார்க்கவும்
இந்த சந்திப்பின்போது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ, முதலீட்டுக்கான ஒரு மையம் என்ற வகையில் இலங்கையை சாதகமாகப் பார்க்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட அனைத்து நாடுகளிடமும் கேட்டுக் கொள்வதாகத் தெரிவித்தார்.
இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை
இலங்கையின் நடுநிலை வெளிநாட்டுக் கொள்கைபற்றி விளக்கிய ஜனாதிபதி கோத்தாபய, “இலங்கை போன்ற சிறிய நாடுகளை உலகின் ஏனைய பகுதிகளைப் போலவே அதே வேகத்தில் அபிவிருத்தி செய்வதற்கும் நகர்த்துவதற்கும் உதவுவது பிராந்திய மேலாதிக்கத்தை முறியடிப்பதற்கான சிறந்த வழியாகும்” என்று தெரிவித்தார்.
இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது நம்பிக்கை வைக்கலாம்
ஒரு நம்பகமான மற்றும் நீண்டகாலப் பங்காளர் என்ற வகையில் இலங்கை, ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். எனவே, ஐரோப்பிய ஒன்றிய பங்காளர்களுடன் நம்பிக்கையை கட்டியெழுப்புவதில் நேர்மையானதும் வினைத்திறனானதுமான நிர்வாகம் முக்கிய அங்கமாகும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
விவசாயத்துறை
இலங்கையின் விவசாயத்துறையைப் பாதிக்கும் ஒரு முக்கிய சவால் காலநிலையாகும். எனவே, பச்சைவீடு போன்ற முறைகள் எவ்வாறு உதவக்கூடும் என்பதை இலங்கை கண்டறிய வேண்டும். இரசாயன உரத்திலிருந்து சேதன உரங்களுக்கு இலங்கை செல்ல வேண்டியது அவசியமாகும்.
இது வித்தியாசமான சந்தை வாய்ப்புகளை ஈர்க்கக் கூடியதாக அமையும். மேலும், இரசாயன உரங்கள் மற்றும் கிருமிநாசினிகள் புற்றுநோய்க்கு ஒரு முக்கிய காரணியாகவுள்ள அதேநேரம், எமது நீர் நிலைகளை மாசுபடுத்துவதாகவும் இருப்பதால் இந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும்.
நெதர்லாந்து தூதுவர் கோங்க்க்ரிஜ்ப், சேதன விவசாயம் தொடர்பாக இலங்கையில் ஏற்கனவே நெதர்லாந்து அரசு ஆரம்பித்துள்ள ஒருங்கிணைந்த நிகழ்ச்சித்திட்டங்கள் பற்றி விளக்கினார். இந்த மாற்றம் வெற்றியளிக்க விவசாயிகளுக்கு நிர்வாகத்துறை அதிகாரிகளின் ஆதரவு தேவையென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஊவா மாகாணத்தில் பெண் விவசாயிகளுக்காக இத்தாலிய அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு வாசனைத் திரவிய விவசாய திட்டம் குறித்து இத்தாலிய தூதுவர் குறிப்பிட்டார். தற்போது சுமார் 400 விவசாயிகள் இந்த திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதிக்கு பாராட்டு
ஊழலை ஒழிப்பதற்கும், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கும், தொழிற்றிறன் மற்றும் தகுதிக்கு வெகுமதி அளிப்பதற்குமான ஜனாதிபதியின் அர்ப்பணிப்பு குறித்து தூதுக்குழுவினர் மிகவும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.-Vidivelli