ஈரான் படைத் தளபதி கொலை விவகாரம்: ஈரான்- அமெரிக்கா முறுகல் நிலை தீவிரம்
மத்திய கிழக்கில் பதற்ற நிலை; போர் மூளும் அபாயம்
ஈரானின் குத்ஸ் படையணியின் தளபதி ஜெனரல் காசிம் சுலைமானி, அமெரிக்காவின் வான் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து இருநாடுகளிடையே முறுகல் நிலை தீவிரமடைந்துள்ளதுடன் மத்திய கிழக்கில் போர் மூளும் அபாயத்தையும் தோற்றுவித்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுப்போமென ஈரான் எச்சரித்துள்ள நிலையில், அவ்வாறு ஏதேனும் தாக்குதல்கள் நடந்தால் ஈரானிலுள்ள 52 இலக்குகள் மீது தாக்குவோம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள ஈரான் தயாராக உள்ளதாக ஈரானிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அப்பாஸ் மூஸாவி தெரிவித்துள்ளார். நாம் எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளத் தயார். அமைதியாக இருக்கமாட்டோம். போருக்குச் செல்ல நாம் விரும்பவில்லை. ஆனால் அதற்குத் தயாராகவே இருக்கிறோம் என்றும் மூஸாவி கூறியிருக்கிறார்.
இதற்கிடையில் குறித்த தாக்குதலில் கொல்லப்பட்ட காசிம் சுலைமானியின் ஜனாஸா நேற்று தெஹ்ரானில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஈரானின் 52 இடங்களை குறிவைத்துள்ளோம், அழித்துவிடுவோம்: ட்ரம்ப் எச்சரிக்கை
அமெரிக்க மக்கள் மீது தாக்குதல் நடத்தினால், ஈரானின் 52 முக்கியமான இடங்களை நாங்கள் குறிவைத்துள்ளோம், அதிவேகமாக செயற்பட்டு அழித்துவிடுவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈராக்கிலுள்ள அமெரிக்க இராணுவ நிலைமீது கடந்த வாரம் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில், அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் பாதுகாப்புப் படை வீரர் உயிரிழந்தார். அந்தத் தாக்குதலை, ஈரான் ஆதரவு பெற்ற கதாயிப் ஹிஸ்புல்லா படையினர் நடத்தினர். இதற்குப் பதிலடியாகவே அந்தப் படையினர் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 25 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து காபூலிலுள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பு ஏராளமான ஹிஸ்புல்லா ஆதரவுப் போராட்டக்காரர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அலுவலகத்தைச் சூறையாடினர்.
அதற்குப் பதிலடியாக வெள்ளிக்கிழமை பக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்க இராணுவம் ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி காசிம் சுலைமானி, ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை இராணுவப்படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸும் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதல் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவின் பேரில் தற்காப்பு நடவடிக்கைக்காகவே நடாத்தப்பட்டதாக அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பெண்டகன் தெரிவித்தது.
இந்த தாக்குதல் குறித்து ஆவேசமாக பேட்டியளித்த ஈரான் அரசு, “அமெரிக்கா தனது தீவிரமான முட்டாள்தனத்தால், ஆபத்தை பெரிதாக்கி இருக்கிறது. இந்த தாக்குதலுக்கு நாங்கள் நிச்சயம் பதிலடி தருவோம், பழிக்குப்பழிவாங்குவோம்” எனச் சூளுரைத்தது.
இதற்கிடையே, ஈராக்கின் தலைநகர் பக்தாதிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அருகே நேற்றிரவு இரு ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டன. குறிப்பாக அமெரிக்க இராணுவம் குவிக்கப்பட்டுள்ள அல்-பாலத் விமானத் தளத்தை நோக்கி இந்த ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டன. ஆனால், அமெரிக்க இராணுவ வீரர்களுக்கு எந்தவிதத்திலும் காயம் ஏற்படவில்லை.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் ஈரானுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்து பதிவிட்டார். அதில் ” ஈரானில் 52 முக்கியமான இடங்களை அமெரிக்கா குறிவைத்துள்ளது. அமெரிக்கர்களைத் தாக்கினாலோ அல்லது அமெரிக்க சொத்துக்களை சேதப்படுத்தினாலோ ஈரானிய கலாசாரத்துக்கும், ஈரானுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த 52 இடங்களை அதிவேகமாக செயற்பட்டு அழித்துவிடுவோம். அமெரிக்காவுக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் அளிக்காதீர்கள்” என எச்சரிக்கை விடுத்தார்
பதற்றத்தை தணிக்க சவூதி அரேபியா முயற்சி
ஈரான் இராணுவத் தளபதி காசிம் சுலைமானியை ஏவுகணைத் தாக்குதல் மூலம் கொலை செய்யும் முன் எங்களிடம் அமெரிக்கா ஆலோசிக்கவில்லை என்று சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.
வளைகுடா பகுதியிலும், மேற்காசியாவிலும் அதிகரித்துவரும் பதற்றத்தைத் தணிக்கும் பொருட்டு ஈரானிடமும், அமெரிக்காவிடமும் சவூதி அரேபியா சமாதானப் பேச்சு நடத்தி வருகிறது.
ஈரான் எந்தப் பதில் நடவடிக்கையையும் அமெரிக்காவுக்கு எதிராக எடுத்தால், அதில் அதிகமாகப் பாதிக்கப்படக்கூடியது சவூதி அரேபியா என்பதால், தற்போது சமாதான நடவடிக்கையில் அந்நாடு இறங்கியுள்ளது.
அதுமட்டுமல்லாமல், ஈரானின் படைத்தளபதி காசிம் சுலைமானி கொல்லப்படுவதற்கு முன், தங்களிடம் அமெரிக்கா எந்தவிதமான ஆலோசனையும் செய்யவில்லை என்றும் சவூதி அரேபியா விளக்கமளித்துள்ளது.
வளைகுடா பகுதியில் அதிகரித்து வரும் பதற்றத்தைத் தணிக்கும் வகையில், சவூதி அரேபிய மன்னர் சல்மான், ஈராக் அதிபர் பர்ஹம் சல்லேஹ்வை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதன்பின் ஈராக் பிரதமர் அதெல் அப்தல் மஹ்தியிடமும் சவூதி மன்னர் சல்மான் தொலைபேசியில் சமாதானம் பேசியுள்ளார்.
இப்போதுள்ள சூழலில் அமைதி காப்பதே நிலைமையை மோசமடையாமல் இருக்கச்செய்யும் என்று சவூதி அரேபிய மன்னர் சல்மான் வலியுறுத்தியதாக சவூதி அரேபியா அரசு தெரிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் மன்னர் சல்மான், தனது சகோதரரும் துணை பாதுகாப்பு அமைச்சருமான காலித் பின் சல்மானை அமெரிக்காவுக்கும், லண்டனுக்கும் அனுப்ப முடிவு செய்துள்ளார். வெள்ளை மாளிகையில் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளை சந்தித்து சவூதி அரேபிய மன்னரின் இளைய சகோதரர் காலித் பின் சல்மான் சமாதானப் பேச்சு நடத்த உள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவுக்கு மிகவும் நட்பு நாடுகளாக சவூதி அரேபியாவும்,ஐக்கிய அரபு அமீரகமும் இருந்து வருகின்றன. அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுக்க ஈரான் எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதில் சவூதி அரேபியா கடுமையாகப் பாதிக்கப்படும் என்பதால் சமாதான விஷயத்தில் சவூதி தீவிரமாக இறங்கியுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் சவூதி எண்ணெய் நிறுவனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப்பின் சவூதி அரேபியாவும், ஐக்கிய அரபு அமீரகமும் ஈரானுடன் இணக்கமாகச் செல்லவும், எந்தவிதமான முரண்பாடும் இல்லாமல் தவிர்த்து வருகின்றன.
ஒருவேளை, ஈரான் ஆதரவுப் படைகள் வளைகுடா நாடுகளிலுள்ள அமெரிக்கத் தளங்களையும், ஹர்முஸ் நீர் வழித்தடங்களிலும் தாக்குதல் நடத்தும் திறன் கொண்டவை. அவ்வாறு நடந்தால் சவூதி அரேபியாவின் எண்ணெய் வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்பதால், பதற்றம் அதிகரிக்கவிடாமல் சமாதானத்தை ஏற்படுத்துவதில் சவூதி அரேபியா ஈடுபட்டு வருகிறது.
இதேவேளை, இந்த முறுகல் நிலை தொடர்பில், கட்டார் வெளிவிவகார அமைச்சரும் ஈரானுக்கு விஜயம் செய்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
3000 இராணுவத்தினரை அனுப்புகிறது அமெரிக்கா
ஈரானுடன் மோதல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து சுமார் 3,000க்கும் அதிகமான இராணுவ வீரர்களை மத்திய கிழக்குப் பகுதிகளுக்கு அமெரிக்கா அனுப்பவுள்ளது.
ஈரான் இராணுவத் தளபதி சுலைமானி அமெரிக்கப் படையால் கொல்லப்பட்டது முதல் ஈரான் – அமெரிக்கா இடையே மோதல் அதிகரித்து வருகிறது. அமெரிக்கா இதற்காக நிச்சயம் பழிவாங்கப்படும் என்று ஈரான் சபதமேற்றுள்ளது.
பதற்றம் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து மத்திய கிழக்குப் பகுதிகளில் கூடுதல் படைகளை அமெரிக்கா அனுப்பவுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் தரப்பில், “அமெரிக்கா மக்களை மிரட்ட ஈரான் திட்டமிட்டிருக்கிறது. எனவே மத்திய கிழக்குப் பகுதிகளில் 3,000 வீரர்கள் கூடுதலாக அனுப்பப்பட உள்ளனர். இது பாதுகாப்புக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் இதயம் காயப்பட்டிருக்கிறது: ஹசன் ரூஹானி
ஈரானின் இதயம் காயப்பட்டிருக்கிறது என்றும் அமெரிக்கா தனது கொடூர குற்றத்திற்காக பழிவாங்கப்படுமென ஈரான் நாட்டு அதிபர் ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார்.
சுலைமானி கொல்லப்பட்டது குறித்து ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி கூறும்போது, “அமெரிக்காவின் இந்தக் கொடூர குற்றத்திற்கு ஈரான் போன்ற சிறந்த நாடும் அதன் பிராந்தியத்திலுள்ள பிற நாடுகளும் பழிவாங்கும் என்பதில் சந்தேகமில்லை. அமெரிக்கா தனது குற்ற நடவடிக்கையால் ஈரானின் இதயத்தை காயப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கொடுமைகளுக்கு எதிராக நிற்கவும், இஸ்லாமிய மதிப்புகளை பாதுகாக்கவும் ஈரான் தனது உறுதியை இரட்டிப்பாக்கியுள்ளது.
அமெரிக்காவின் இந்தக் கோழைத்தனமான செயல் அதன் விரக்தி மற்றும் பலவீனத்தின் மற்றொரு அறிகுறியாகும். அமெரிக்கா அதன் செயலுக்கு நிச்சயம் பழிவாங்கப்படும்”என்றும் தெரிவித்தார்.-Vidivelli