யெமனில், சவூதி அரேபியாவின் தலைமையில் நடைபெற்று வருகின்ற போருக்கு அமெரிக்கா வழங்கி வரும் ஆதரவை திரும்பப் பெறுவதற்கான முயற்சி ஒன்றை அமெரிக்க செனட் அவை முன்னெடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு பலத்த அடியாக இந்த முயற்சி பார்க்கப்படுகிறது,
சவூதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியின் கொலை பற்றி டிரம்ப் தெரிவித்த கருத்துகளை பல அமெரிக்க செனட் அவை உறுப்பினர்கள் விரும்பவில்லை.
யெமனின் நிலைமையை மிகவும் மோசமாக்கும் என்பதால், இந்த மசோதாவுக்கு செனட் அவை உறுப்பினர்கள் ஆதரவு அளிக்கக்கூடாது என்று வெளியுறவு செயலாளர் மைக் பாம்பேயோவும், பாதுகாப்புத்துறை செயலாளர் ஜிம் மேத்திஸும் வலியுறுத்தியுள்ளனர். இருப்பினும், இரு கட்சிகளும் கொண்டு வரும் முன்மொழிவாக இதனை எடுத்துச் செல்ல செனட் அவை உறுப்பினர்கள் 63:37 என்ற அளவில் வாக்களித்து ஆதரவு அளித்துள்ளனர்.
கடந்த ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி துருக்கியின் இஸ்தான்புல்லில் இருக்கும் சவூதி துணைத் தூதரகத்திற்கு சென்ற அமெரிக்க வாழ் சவூதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொல்லப்பட்டார். அதன் பின்னர், சவூதி அரேபியா மீதான விமர்சனங்கள் அதிகரித்தன.
இந்த கொலையை செய்ய சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் ஆணையிட்டுள்ளார் என்று அமெரிக்க உளவுத்துறை (சிஐஏ) நம்புவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், சிஐஏ உறுதியான முடிவுக்கு வரவில்லை என்று கூறி இந்த கருத்தை அதிபர் டிரம்ப் நிராகரித்துள்ளார்.
சவூதி அரேபியா இன்றியமையாத நட்பு நாடு என்று தெரிவித்திருக்கும் டிரம்ப், சவூதி அரசின் தலைமைக்கு எதிராக தடைகள் விதிப்பதற்கு எழுந்த கோரிக்கைகளை ஏற்கவில்லை.
சவூதி அரேபியாவோடு கொண்டிருக்கும் உறவுகள் பற்றிய இரகசிய விசாரணை அமர்வில் சிஐஏ இயக்குநர் ஜினா ஹாஸ்பல் பங்கேற்கவில்லை என்பதால் செனட் அவை உறுப்பினர்கள் கோபமடைந்துள்ளனர்.
கஷோக்ஜியின் கொலை தொடர்பான ஓடியோ பதிவு என துருக்கி கூறுவதை ஹாஸ்பல் கேட்டுள்ளார். இந்த வழக்கின் சான்றுகளை அவர் ஆய்வு செய்துள்ளார். ஹாஸ்பல் பங்கேற்காதது பற்றி கருத்து தெரிவித்த செனட் அவை உறுப்பினர் ஒருவர் “இது மூடிமறைக்கும் செயல்” என்று கூறியுள்ளார்.
மனித உரிமை மீறல்கள் மற்றும் யெமனில் கற்பனை செய்ய முடியாத அளவுக்கான மனிதாபிமான பேரழிவு ஆகியவற்றை உருவாக்கியுள்ள சவூதி அரேபியாவுக்கு எதிரான சமிக்ஞையை அனுப்ப வேண்டிய நேரமிது என்று ஜனநாயக கட்சியின் செனட் அவை உறுப்பினர் பாப் மெனெண்டெஸ் கூறியுள்ளார்.
செனட் அவையின் வெளியுறவு குழுவின் தலைவரான குடியரசு கட்சியை சேர்ந்த செனட் அவை உறுப்பினர் பாப் கோர்கெர், “இங்கு சிக்கல் உள்ளது. சவூதி அரேபியா நமது நட்பு நாடு. ஓரளவு முக்கியமான நாடு. ஆனால், அந்நாட்டு பட்டத்து இளவரசரோ வரம்பு மீறுகிறவராக இருக்கிறார்” என்கிறார்.
யெமனில் சவூதிக்கு அளிக்கும் ஆதரவைத் திரும்பப் பெறுவதற்கு ஆதரவாக செனட் அவை தீர்மானம் நிறைவேற்றிவிட்டாலும், மக்கள் பிரதிநிதிகள் அவையில் இந்த தீர்மானம் தோற்கடிக்கப்படலாம். ஆனால், புத்தாண்டில் பிரதிநிதிகள் அவையில் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை பெறுகிறது என்பதால் அப்போது இது நிறைவேற்றப்படும் வாய்ப்பும் உள்ளது.
-Vidivelli