இலங்கையின் தேசிய கீதத்தை, அடுத்த சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் பாடுவதற்குத் தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் உறுதிப்படுத்தியுள்ளார். நாட்டின் தேசிய கீதம் என்பது ஒன்று எனவும், அதனை இரண்டாக பிளவுபடுத்த முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
தேசிய கீதத்தை இரண்டு மொழிகளில் பாடினால், இரண்டு இனங்கள் என்ற பொருளை வெளிப்படுத்தும். இலங்கையில் சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய மூவினத்தவர்களும் ஒரே இனம் என்ற அடிப்படையிலேயே அரசாங்கம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இதற்கிடையில் புதிய அரசாங்கத்தின் இந்தத் தீர்மானத்தை பலரும் கண்டித்துள்ளனர். தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாட முடியாது என்ற அறிவிப்பைத் தாம் வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
‘‘ இலங்கையில் சிங்கள மொழி எவ்வாறு அரசகரும மொழியாகக் காணப்படுகின்றதோ, அதேபோன்று தமிழ் மொழியும் அரசகரும மொழியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந் நிலையில், சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்ற அறிவிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. சிங்கள மக்கள் வாக்களித்து விட்டார்கள் என்பதற்காக, நாட்டை சிங்கள மயப்படுத்துவது கண்டிக்கத்தக்கது‘‘ என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைகலநாதன் ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கிறார்.
முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசனும் அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தை பலமாக எதிர்த்து வருகிறார். ‘‘ 2020 ஆம் ஆண்டு சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதம், தமிழ் மொழியில் பாட மறுப்பு தெரிவிக்கப்பட்டமையானது, தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டிற்கு பாரிய பாதிப்பான விடயம்‘‘ என அவர் தனது டுவிட்டரில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோன்று தேசிய கீதத்தைத் தமிழ் மொழியில் பாட முடியாது என்ற இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தை வன்மையாகக் கண்டிப்பதாக மக்கள் விடுதலை முன்னணியும் தெரிவித்துள்ளது.
‘‘தேசிய கீதம் இலங்கை அரசியலமைப்பில் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. தேசிய கீதத்தைச் சிங்கள மொழியில் மாத்திரம் பாடுவது என்ற தீர்மானமானது, நாட்டிலுள்ள இனங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்தும் ஒரு விடயம். இந்த தீர்மானமானது, இன நல்லிணக்கத்திற்கோ அல்லது மத நல்லிணக்கத்திற்கோ சாதகமான ஒன்றல்ல‘‘ என மக்கள் விடுதலை முன்னணியின் செயற்குழு உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ராமலிங்கம் சந்திரசேகரன் கூறியிருக்கிறார்.
அந்த வகையில் அரசாங்கம் தேசிய கீதம் தொடர்பான தனது தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியமாகும். 2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தின் திட்டத்திற்கமைய 2016 முதல் வந்த சுதந்திர தினங்களில் இரு மொழிகளிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்ட நிலையில் எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி இடம்பெறவுள்ள சுதந்திர தினத்தில் சிங்கள மொழியில் மாத்திரம் இசைக்கப்படவுள்ளமையானது நல்லிணக்கம் தொடர்பான புதிய அரசாங்கத்தின் நிலைப்பாடுகளை கேள்விக்குள்ளாக்கியுள்ளதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடலாம் என 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பு சட்டத்தில் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் இதனை ஒரு சர்ச்சைக்குரிய விடயமாக தொடர்ந்தும் கருதுவது ஆரோக்கியமானதல்ல.
அந்த வகையில் தமிழ் மொழிக்கு உரிய அந்தஸ்தை வழங்குவதற்காகவும் இந்த நாட்டிலுள்ள தமிழ் பேசும் மக்களை கெளரவிக்கும் வகையிலும் எதிர்வரும் சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதத்தை தமிழிலும் பாடுவதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்க வேண்டும். இதற்கு ஒரு மாத கால அவகாசம் உள்ள நிலையில் அரசாங்கம் தனது முன்னைய தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.-Vidivelli