தேசத்தின் முன்­னேற்­றத்­திற்­காக அய­ராது உழைத்­தவர் கலா­நிதி ரி.பி. ஜாயா

0 1,691

இலங்­கையின் தேசிய வீரரும், கல்­வி­மானும், சிறந்த இரா­ஜ­தந்­தி­ரியும், முன்னாள் அமைச்­ச­ரு­மான கலா­நிதி ரி. பி. ஜாயாவின் 130 ஆவது பிறந்த தினம் இன்று (01.01.2020) ஆகும். அதனை முன்­னிட்டு இக் கட்­டுரை பிர­சு­ர­மா­கி­றது.

இலங்­கையின் சுதந்­திரப் போராட்ட முன்­னோ­டி­களில் ஒரு­வ­ரா­கவும், இந்­நாட்டின் தேசிய வீரர்­களில் ஒரு­வ­ரா­கவும் மாத்­தி­ர­மல்­லாமல் இரு­பதாம் நூற்­றாண்டில் இந்­நாட்டு முஸ்­லிம்­களின் சமூக, கல்வி மறு­ம­லர்ச்­சிக்கு அய­ராது உழைத்து அடித்­த­ள­மிட்­ட­வர்­களில் ஒரு­வ­ரா­கவும் திகழ்­பவர் மறைந்த ரி.பி.ஜாயா ஆவார்.

இவர் இந்­நாட்டு முஸ்­லிம்­களில் மலாயர் சமூ­கத்தைச் சேர்ந்­த­வ­ராக இருந்­த­போ­திலும் கூட முழு முஸ்லிம் சமூ­கத்தின் முன்­னேற்­றத்­திற்­காக மாத்­தி­ர­மல்­லாமல் நாட்டில் வாழும் சகல இன மக்­க­ளதும் மேம்­பாட்­டுக்­கா­கவும் உழைத்தார். அதே­நேரம் இந்த நாடு பல்­லின மக்கள் வாழும் தேசம் என்­பதை எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் அவர் மறந்து செயற்­ப­ட­வில்லை. அவர் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான ஒற்­று­மைக்கும் சக­வாழ்வு மற்றும் நல்­லி­ணக்­கத்­திற்கு முன்­னு­தா­ரணம் மிக்­க­வ­ராக விளங்­கு­கின்றார்.

துவான் புகார்தீன் ஜாயா 1890 ஜன­வரி முதலாம் திகதி கண்டி மாவட்­டத்­தி­லுள்ள கல­கெ­த­ரவில் பிறந்தார். பொலிஸ் சார்ஜன்ட் காசிம் ஜாயா மற்றும் நோனா காசிம் தம்­ப­தி­யி­ன­ருக்கு மக­னாகப் பிறந்த இவர் சிறு­ப­ரா­யத்தில் இருந்த போது, இவ­ரது தந்­தைக்கு குரு­நா­க­லுக்கு இட­மாற்றம் கிடைத்­தது. அதனால் ஜாயாவின் தந்தை தம் குடும்பம் சகிதம் குரு­நா­க­லுக்கு சென்று வசித்தார். இவ்­வா­றான சூழலில் ஜாயா ஆரம்பக் கல்­விக்­காக குரு­நாகல் அங்­கி­லிக்கன் பாட­சா­லையில் சேர்க்­கப்­பட்டார். அவ­ரது பெற்றோர் ஜாயா­வுக்கு சிறு­ப­ரா­யத்­தி­லேயே அல் குர்­ஆ­னியக் கல்­வியை அளிக்கத் தவ­ற­வில்லை.

குரு­நா­கலில் வாழ்ந்த உமர் லெப்பை ஆலி­மிடம் சிறுவன் ஜாயா சேர்க்­கப்­பட்டான். ஜாயாவும் குர்­ஆனை அதிக ஆர்­வத்­தோடு கற்றார்.
இச்­சந்­தர்ப்­பத்தில் ஜாயாவின் தந்தை கொழும்­புக்கு இட­மாற்­றப்­பட்டார். இச்­ச­மயம் ஜாயா கண்டி சென் போல்ஸ் வித்­தி­யா­ல­யத்தில் கற்றுக் கொண்­டி­ருந்தார். ஜாயாவின் குடும்­பமே கொழும்­புக்கு இடம்­பெ­யர்ந்­தது. இவ்­வே­ளையில் ஜாயா­வுக்கு விஷேட கல்வி புலமைப் பரிசில் கிடைத்­தது. அதற்­கேற்ப அவர் 1904 இல் கொழும்பு முகத்­து­வாரம் சென் தோமஸ் கல்­லூ­ரியில் இணைந்தார். ஜாயா சிறு­ப­ரா­யத்­தி­லேயே கல்­வியில் அதி திற­மையை வெளிப்­ப­டுத்­தி­யதன் விளை­வாக அவ­ருக்கு மூன்றாம், ஆறாம் வகுப்­புக்­களில் இரட்டை வகுப்­பேற்­றமும் கிடைக்கப் பெற்­றது.

இவ்­வா­றான நிலையில் 1906 இல் கேம்­பிரிட்ஜ் கனிஷ்ட பரீட்­சையில் தோற்றி தெரி­வான இவர், கணித பாடத்­திற்­கான ஜே.ஏ.சி. மெண்டிஸ் புலமைப் பரி­சிலைப் வென்றார். அதனைத் தொடர்ந்து 1909 இல் பல்­க­லைக்­க­ழகப் புல­மைப்­ப­ரிசில் பரீட்­சை­யிலும் சித்­தி­ய­டைந்தார்.

ஆசி­ரியத் தொழிலில் பிர­வேசம்

ரி.பி. ஜாயா 1910 ஜன­வரி மாதம் கண்டி தர்­ம­ராஜ கல்­லூ­ரியில் உத­வி­யா­சி­ரி­ய­ராக இணைந்தார். அங்கு பணி­யாற்றிக் கொண்­டி­ருந்த ஜாயா­வுக்கு சொற்ப காலத்தில் அதா­வது அதே வருடம் மே மாதம் மொறட்­டுவ பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்­லூ­ரிக்கு இட­மாற்றம் கிடைத்­தது. அங்கு சுமார் ஏழு வரு­டங்கள் ஆசி­ரி­ய­ராகக் கட­மை­யாற்­றிய ஜாயா, 1917 இல் கொழும்பு ஆனந்தா கல்­லூ­ரிக்கு இட­மாற்றம் பெற்று ஆசி­ரி­ய­ராகப் பணி­யாற்­றினார்.

ஜாயா ஆசி­ரியர் தொழிலில் இணைந்­த­தோடு கல்வி கற்­பதை நிறுத்­தி­வி­ட­வில்லை.தொடர்ந்தும் உயர் கல்­வியை மேற்­கொண்டார்.ஆங்­கிலம், லத்தீன், கிரேக்கம், வர­லாறு மற்றும் கணிதப் பாடங்­க­ளுக்­கான இடை­நிலைப் பரீட்­சையில் சித்தி பெற்று லண்டன் கலைப்­பட்­ட­தா­ரி­யானார். அத்­தோடு சட்டக் கல்­லூ­ரியில் இணைந்தும் கற்றார்.

இக்­காலப் பகு­தி­யில்தான் அதா­வது 1921 இல்­ இவர் கொழும்பு ஸாஹிறாக் கல்­லூ­ரியின் அதி­ப­ராகப் பத­வி­யேற்றார். அன்று தொடக்கம் சுமார் 27 வரு­டங்கள் அங்கு அதி­ப­ராகக் கட­மை­யாற்­றிய இவர், ஸாஹி­றாவை சகல துறை­க­ளிலும் முன்­னேற்­று­வ­தற்­காக இர­வு­ – பகல் பாராது அய­ராது உழைத்தார். இவர் இக்­கல்­லூ­ரியின் அதி­ப­ராகப் பத­வி­யேற்கும் போது ஸாஹி­றாவின் மாணவர் எண்­ணிக்கை ஐம்­ப­தா­கவே காணப்­பட்­டது.

அந்­த­ள­வுக்கு கொழும்பு மக்கள் கல்­வியில் பின்­ன­டைந்து காணப்­பட்­டனர்.கல்­வியின் முக்­கி­யத்­து­வத்தை மக்­க­ளுக்கு எடுத்துக் கூறி ஜாயா முன்­னெ­டுத்த வேலைத்­திட்­டங்­களின் பய­னாக கல்வி கற்கும் மாண­வர்­களின் எண்­ணிக்கை சொற்ப காலத்தில் சுமார் ஆயிரம் வரை உயர்ந்­தது. அத்­தோடு அவர் நின்று விட­வில்லை. கல்­வியின் முக்­கி­யத்­து­வத்தை நாட்டின் ஏனைய பிர­தேச முஸ்­லிம்­க­ளுக்கும் எடுத்­துக்­கூ­றவும் அவர்கள் மத்­தியில் கல்­வியின் மீதான ஆர்­வத்­தையும் ஏற்­ப­டுத்­தவும் அவர் தவ­ற­வில்லை.

இதன் விளை­வாக கொழும்பில் மாத்­திரம் காணப்­பட்ட ஸாஹிறாக் கல்­லூரி நாட்டின் ஏனைய பிர­தே­சங்­க­ளிலும் ஆரம்­பிக்­கப்­படும் நிலை­மையை சொற்ப காலத்தில் ஏற்­ப­டுத்­தினார்.

அர­சியல் பிர­வேசம்

இதே­கா­லப்­ப­கு­தியில் டொனமூர் அர­சி­ய­ல­மைப்பின் கீழ் உரு­வாக்­கப்­பட்ட அரச பேர­வைக்­கான தேர்தல் 1931 இல் நடை­பெற்­றது. அத்­தேர்­தலில் இவர் கொழும்பு மத்­திய தொகு­தியில் போட்­டி­யிட்டார். ஆனால் இதே­தொ­கு­தியில் இந்­நாட்டின் தொழிற்­சங்கத் தலை­வ­ராக விளங்­கிய ஏ. ஈ. குண­சிங்க போட்­டி­யிட்டு வெற்றி பெற்றார். அதன் பின்னர் 1936 ஆம் ஆண்டில் நடந்த தேர்­தலில் போட்­டி­யிட்டும் ஜாயா தோல்­வி­யுற்றார்.

ஆனாலும் அவர் நிய­மன உறுப்­பி­ன­ராக அரச பேர­வைக்கு தெரி­வானார். இப்­பே­ர­வையில் இவர் கல்வி நிறை­வேற்றுக் குழு உறுப்­பி­ன­ராக நிய­மிக்­கப்­பட்டார். இப்­ப­தவிக் காலத்தில் அரச பேர­வையில் தன் சக உறுப்­பி­ன­ராக இருந்த சேர் ராசிக் பரீத்­துடன் இணைந்து முஸ்லிம் பிர­தே­சங்­களின் கல்வி மேம்­பாட்டின் நிமித்தம் பாட­சா­லை­களை அமைத்தார். குறிப்­பாக புத்­தளம், தர்­கா­நகர், கம்­பளை, மாத்­தளை, கொழும்பு – வேகந்த ஆகிய இடங்­களில் ஸாஹிராக் கல்­லூ­ரி­களை ஆரம்­பித்தார். இது முஸ்­லிம்கள் கல்­வியின் மீது கவனம் செலுத்தும் நிலை­மையை ஏற்­ப­டுத்­தி­யது. அதே­நேரம் ஆசி­ரி­யர்­க­ளுக்­கான ஓய்­வூ­தியத் திட்­டத்தைத் தொடங்கி வைத்­த­வரும் இவ­ரே­யாவார்.

தேசப்­பற்றின் வெளிப்­பாடு

நாட்டில் சக­வாழ்வு, நல்­லி­ணக்கம், தேசிய ஒற்­றுமை என்­ப­வற்­றிலும் இவர் அதிக அக்­கறை செலுத்­தினார்.

இந்­த­வ­கையில் 1944 ஆம் ஆண்டில் இலங்­கைக்­கான சுதந்­திரம் தொடர்­பான யோசனை அரச பிர­தி­நி­திகள் சபையில் முன்­வைக்­கப்­பட்­டது. அச்­ச­மயம் கலா­நிதி ஜாயா முஸ்­லிம்­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் பிர­தி­நி­தி­யாக இருந்தார். அப்­போது அவர் பிர­தி­நி­திகள் சபையில் ஆற்­றிய உரை இந்­நாட்டு வர­லாற்றில் அழியாத் தடம்­ப­தித்­துள்­ளது. அந்த உரையில் ஜாயா, “முஸ்லிம் மக்­க­ளுக்கும் பிரச்­சி­னை­களும் துய­ரங்­களும் உள்­ளன. ஆனால் அவற்றை முன்­வைப்­ப­தற்­கான தருணம் இது­வல்ல. ஏனைய எல்­லா­வற்­றையும் விட தாய்­நாட்டின் சுதந்­தி­ரமே முதன்­மை­யா­னது.

நாம் சுதந்­தி­ரத்­திற்குப் பின்னர் எங்­க­ளது மூத்த சகோ­த­ரர்­க­ளான சிங்­கள மக்­க­ளோடு அவற்றைக் கலந்­து­ரை­யாடித் தீர்த்துக் கொள்ள முடியும். நாடு பூராவும் சென்று எல்லா முஸ்லிம் அமைப்­புக்­க­ளு­டனும் முஸ்லிம் முக்­கி­யஸ்­தர்­க­ளோடும் கலந்­து­ரை­யா­டினேன். பிர­தி­நி­திகள் சபையின் ஏனைய சகோ­தர உறுப்­பி­னர்­க­ளோடும் கலந்­து­ரை­யாடி முழு­மை­யான உடன்­பாட்­டுடன் தான் இதனை இங்கு மொழி­கின்றேன்.

இந்த இக்­கட்­டான நிலையில் முஸ்­லிம்கள் சார்­பாக எந்­த­வொரு நிபந்­த­னை­யையும் நாம் முன்­வைக்­க­வில்லை. தாய்­நாட்டின் சுதந்­திரம் தொடர்­பான போராட்­டத்தில் முன்­ன­ணியில் நிற்க வேண்­டி­யது முஸ்­லிம்­களின் முக்­கிய பொறுப்­பாகும். அதற்­காக எவ்­வ­ளவு தூரம் பய­ணிக்­கவும் முஸ்­லிம்கள் தயார். எல்லா பலன்­க­ளையும், எல்லா பயன்­க­ளையும், எல்லா அதிஷ்ட நிலை­க­ளையும் தாய் நாட்டின் சுதந்­தி­ரத்­திற்­காக அர்ப்­ப­ணிக்­கவும் அவர்கள் தயா­ராக உள்­ளனர்” என்று உரக்கச் சொன்னார்.

இச்­ச­மயம் சபையில் இருந்த பிர­தி­நி­திகள் ஜாயாவின் நிலைப்­பாட்டைப் பெரிதும் வர­வேற்­றனர். குறிப்­பாக எஸ்.டப்­ளியூ.ஆர்.டி பண்­டா­ர­நா­யக்கா, ‘ஜாயாவின் நிலைப்­பா­டா­னது எமது சுதந்­தி­ரப்­போ­ராட்­டத்­தையும் தேசிய ஒற்­று­மை­யையும் யதார்த்த நிலைக்கு மாற்றத் துணை­பு­ரிந்­துள்­ளது’ என்றார்.

இதே­வேளை சோல்­பரி யாப்பின் கீழ் பொதுத்­தேர்­தலை எதிர்­கொள்­ள­வென தேசியக் கட்­சியின் தேவை 1946களில் உண­ரப்­பட்­டது. இவ்­வா­றான பின்­ன­ணியில் 1946 செப்­டம்பர் 06 ஆம் திகதி அன்­றைய முக்­கிய அர­சியல் அமைப்­புக்­க­ளாக விளங்­கிய தேசிய காங்­கிரஸ், சிங்­கள மகா சபை, அகில இலங்கை முஸ்லிம் லீக், சோனக சங்கம் என்­ப­வற்றின் பிர­தி­நி­தி­களும் தமிழ் மற்றும் பறங்­கிய சமூ­கங்­களைச் சேர்ந்த முக்­கி­யஸ்­தர்­களும் அல்­பிரட் கிரசென்ட் பாம் கோட்டில் ஒன்று கூடினர். அச்­ச­மயம் எல்லா அமைப்­புக்­க­ளையும் ஒன்­றி­ணைத்து ஒரு தேசியக் கட்சி அமைக்­கப்­பட வேண்டும் என்ற யோச­னையை எஸ். நடேசன் முன்­வைத்தார். அந்த யோச­னையை கலா­நிதி ஜாயா வழி­மொ­ழிந்தார். அத­ன­டிப்­ப­டையில் ஐக்­கிய தேசியக் கட்சி உரு­வா­னது.

முத­லா­வது தொழில் அமைச்சர்

இவ்­வாறு சக­வாழ்­வுடன் கூடிய தேசிய சிந்­த­னையில் செயற்­பட்ட கலா­நிதி ஜாயா 1947 ஆம் ஆண்டு நடை­பெற்ற பொதுத்­தேர்­தலில் கொழும்பில் போட்­டி­யிட்டு இரண்­டா­வது உறுப்­பி­ன­ராகத் தெரி­வானார்.

அத­னூ­டாக சுதந்­திர இலங்­கையின் 14 பேர் கொண்ட முத­லா­வது அமைச்­ச­ர­வையில் சமூக சேவைகள் மற்றும் தொழில் அமைச்­ச­ராக அவர் நிய­மிக்­கப்­பட்டார். 1950 ஆம் ஆண்டில் தமது அமைச்சு பதவியையும், பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜிநாமா செய்து விட்டு பாகிஸ்தானுக்கான இலங்கையின் உயர் ஸ்தானிகராக நியமனம் பெற்றார். இவரே பாகிஸ்தானுக்கான இலங்கையின் முதலாவது உயர்ஸ்தானிகராவார்.

சாதாரண ஆசிரியராகப் பொதுவாழ்வை ஆரம்பித்த ஜாயா ஒரு கல்வியியலாளராகவும், அரசியல்வாதியாகவும், இராஜதந்திரியாகவும் மாத்திரமல்லாமல் முஸ்லிம் சமூகத் தலைவராகவும் இருந்து நாட்டுக்கு அளப்பறிய சேவையாற்றி வந்தார். இவ்வாறான நிலையில் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக மக்கா சென்றிருந்த கலாநிதி ஜாயா, 1960 மே 31 ஆம் திகதி மதீனாவில் காலமானார். அன்னாரின் ஜனாஸா அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.

அவர் ஆற்றிய சேவைகள் இந்நாட்டின் வரலாற்றில் அழியாத் தடம் பதித்துள்ளன. அதிலும் அவரது சகவாழ்வு நல்லிணக்கத்துடன் கூடிய தேசிய ஒற்றுமைச் சிந்தனையும் செயற்பாடுகளும் இன்றும் எல்லோராலும் நினைவு கூரப்படக் கூடியனவாக உள்ளன.-Vidivelli

  • மர்லின் மரிக்கார்

Leave A Reply

Your email address will not be published.