மாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்துடன் தொடர்புபட்டதாக கூறப்படும் சந்தேக நபர்களை பொலிஸில் கையளிக்க தவறியமை சம்பந்தமாக வாக்குமூலம் வழங்குவதற்காக எதிர்வரும் 8ஆம் திகதி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு வருமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.
தேசிய ஐக்கிய முன்னணி நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், மாவனல்லை பிரதேசத்தில் புத்தர் சிலையை சேதப்படுத்தியதாக கூறப்படும் சந்தேக நபர்களை பொலிஸில் ஒப்படைப்பதாக தெரிவித்தும் அதனை செய்யத்தவறியமை தொடர்பாக வாக்கு மூலம் ஒன்றை பெற்றுக் கொள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு எதிர்வரும் 8 ஆம் திகதி வருமாறு அழைப்பு வந்திருக்கின்றது. அன்றைய தினம் நிச்சயமாக அங்குசென்று வாக்குமூலம் வழங்கத் தயாராக இருக்கின்றேன். உண்மையை தெரிவிக்க நான் ஒருபோதும் அச்சப்பட்டதில்லை.
அத்துடன் தேரர் ஒருவர் எனக்கெதிராக பொலிஸில் செய்திருந்த முறைப்பாட்டுக்கமைய கடந்தவாரம் குற்றப்புலனாய்வு பிரிவினர் இரண்டு தினங்கள் என்னிடம் விசாரணை மேற்கொண்டிருந்தனர். குறிப்பாக கடந்த 2014 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சென்றிருந்தவேளை விகடன் சஞ்சிகைக்கு நான் அளித்த பேட்டி தொடர்பாகவும் நான் மேல் மாகாண ஆளுநராக இருந்தபோது புவக்பிட்டி தமிழ் பாடசாலை ஆசிரியர்கள் 16 பேருக்கு இடமாற்றம் வழங்கியமை, ஏப்ரல் தாக்குதல் சம்பவத்துக்கு பின்னர் முஸ்லிம் பள்ளிவாசல்களை இராணுவத்தினர் மோப்ப நாய்களைக்கொண்டு சோதனை நடத்தியபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தமை, டாக்டர் ஷாபி விவகாரமாக விசாரணை மேற்கொண்டுவந்த குருணாகல் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் வழக்கு விசாரணைகளை மேற்கொண்டுவந்த நீதிபதி தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாகவும் விசாரணை நடத்தினர்.
பொலிஸில் யாராவது முறைப்பாடு ஒன்றை தெரிவித்தால் அது தொடர்பில் விசாரணை மேற்கொள்வது சாதாரண விடயமாகும். பொலிஸார் அதனை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் தேரர்கள் முறைப்பாடு செய்ததுடன் அது தொடர்பில் உடனடியாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்கின்றனர். ஆனால் நாங்கள் சில தேரர்களுக்கு எதிராக பல முறைப்பாடுகளை தெரிவித்திருக்கின்றோம். இதுவரை எதனையும் பொலிஸார் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை.
மட்டக்களப்பு பிரதேசத்தில் தேரர் ஒருவர் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு செயற்பட்டு வருவதை சமூக வலைத்தளங்கள் ஊடாக காண்கின்றோம். பொலிஸாருக்கு முன்னிலையிலே அருட்தந்தை ஒருவரை மிகவும் மோசமான முறையில் திட்டுகின்றார். ஆனால் பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அதேபோன்று ஒரு பொது மகன் மீது கன்னத்தில் அறைவதை பார்க்கின்றோம். இந்த தேரருக்கு எதிராக இதற்கு முன்னரும் முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்றார்.-Vidivelli
- எம்.ஆர்.எம்.வஸீம்