ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ, முஸ்லிம்கள் சந்தேகிப்பது போன்று அவர் முஸ்லிம்களுக்கு எதிரானவரல்ல. சுயநல அரசியல்வாதிகளினாலே அவர் முஸ்லிம் களுக்கெதிரானவர் என பிரசாரம் செய்யப்பட்டுள்ளது. அவர் முஸ்லிம் களுக்கோ அல்லது வேறோர் இனத்துக்கோ துரோகம் இழைப்பவர் அல்ல என எதிர்வரும் பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் பொதுஜன பெரமுன கட்சியில் களமிறங்கவுள்ள வேட்பாளர் தொழிலதிபர் ஏ.எல்.எம்.பாரிஸ் தெரிவித்தார்.
கண்டி – மடவளையில் தனக்களிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார். மடவளை ஹப்புகஸ்தென்னயைச் சேர்ந்த தொழிலதிபர் எம்.இஸட்.எம்.அஸ்ரியின் இல்லத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில் அவர் தொடர்ந்தும் உரைநிகழ்த்துகையில் தெரிவித்ததாவது,
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவுக்கும் எனக்கும் நீண்டகால உறவு இருக்கிறது. அந்த உறவின் அடிப்படையில் அவரைப்பற்றி நான் நன்கு புரிந்துவைத்துள்ளேன். அவர் முஸ்லிம் சமூகத்திற்கு உரிய தேவைகளை நிறைவேற்றுவார் என்பதில் நம்பிக்கை இருக்கிறது. முஸ்லிம் சமூகம் எதிர்வரும் பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சிக்கு ஆதரவளிப்பதன் மூலம் எமக்குரிய பாதுகாப்பினையும் உரிமைகளையும் பெற்றுக்கொள்ள முடியும். பல தசாப்த காலமாக குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சியினை ஆதரித்துவரும் எமது சமூகம் இன்றுவரை தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளவில்லை. பிரச்சினை களுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளவில்லை. எனவே, புதிய அரசியல் கலாசாரத்தில் நாம் இணைந்துகொள்ளவேண்டும் என்றார்.
நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினரும், அகில இலங்கை அரபு மத்ரஸாக்களின் ஒன்றிய தலைவரும், மடவளை ஜாமியுல் கைராத் ஜும்ஆ பள்ளிவாசலின் முன்னாள் தலைவருமான மெளலவி எம்.எச்.ஏ.புர்கான் உரையாற்றுகையில், முஸ்லிம் சமூகத்தின்பால் ஜனாதிபதி மற்றும் பெரும்பான்மை மக்கள் கொண்டுள்ள சந்தேகங்களை களையும் பொறுப்பு பொதுஜன பெரமுன வேட்பாளர் பாரிஸுக்கே இருக்கிறது என்றார்.
நிகழ்வில் யட்டிநுவர பிரதேச சபை உறுப்பினர் வஸீர் முக்தார் மற்றும் பொதுஜன பெரமுன கண்டி மாவட்ட இணைப்பாளர் அஸ்ஹர் என்போரும் உரையாற்றினர்.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்