2020 ஹஜ் யாத்திரை: கோட்டா பகிர்வு ஏற்பாடுகள் குறித்து பிரதமருக்கு அறிக்கை
விரைவில் கையளிப்பு என்கிறது ஹஜ் தூதுக்குழு
2020 ஆம் ஆண்டுக்கான ஹஜ் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக சவூதி அரேபியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு நாடு திரும்பியுள்ள ஹஜ் தூதுக்குழு ஹஜ் கோட்டா பகிர்வு மற்றும் ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பில் தனது அறிக்கையை இரண்டொரு தினங்களில் பிரதமரும் கலாசார அமைச்சருமான மஹிந்த ராஜபக் ஷவிடம் கையளிக்கத் திட்டமிட்டுள்ளது.
2020 வருடத்துக்கு இலங்கைக்கு 3500 ஹஜ் கோட்டா கிடைத்துள்ளதாகவும் ஹஜ் கோட்டா பகிர்வில் புதிய முறை கையாளுவதற்கு திட்டமிட்டப்பட்டுள்ளதாகவும் ஹஜ் தூதுக்குழுவின் தலைவர் மர்ஜான் பளீல் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில் ‘ஹஜ்’ தூதுக்குழுவின் அறிக்கை இவ்வாறான சிபாரிசுகளை உள்ளடக்கியதாகவே இருக்கும். ஹஜ் ஏற்பாடுகளில் ஊழல்களற்ற சிறந்த சேவை வழங்கப்பட வேண்டும். நியாயமான முறையில் கோட்டா பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே பிரதமரும் இருக்கிறார். இவ்வகையான ஆலோசனைகளையே அவர் எமக்கு வழங்கியிருக்கிறார்.
இலங்கைக்கு இம்முறை ஒரே தடவையில் 3500 ஹஜ் கோட்டா சவூதி ஹஜ் அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது. நாம் மேலும் மேலதிக கோட்டா வேண்டியிருக்கிறோம். 2020இல் அதிக எண்ணிக்கையானோர் ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்பதே எமது இலக்காகும்.
மேலதிக ஹஜ் கோட்டா வழங்கும்போது ரமழான் மாதத்துக்கு முன்பே வழங்கப்பட வேண்டும். அவ்வாறெனிலே எம்மால் மேலதிக கோட்டா தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்பதை விளக்கியிருக்கிறோம் என்றார்.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்