இனங்களை மையப்படுத்திய கட்சிகள் அனைத்தையும் இல்லாதொழிப்பதன் மூலமே ஒற்றுமையை ஏற்படுத்தலாம்
பொதுஜன பெரமுன கட்சி அமைப்பாளர் பி.எச்.பியசேன
இந்நாட்டில் இனங்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள கட்சிகள் அனைத்தையும் இல்லாதொழிப்பதன் மூலமே இலங்கையில் உள்ள அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடனும் நிம்மதியுடனும் வாழ முடியும் என முன்னாள் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பொதுஜன பெரமுன கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளருமான பி.எச்.பியசேன தெரிவித்தார்.
சமகால அரசியல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிக்கும்போதே அவர் இக்கருத்தினைத் தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த காலத்தில் தமிழ் மக்கள் இந்நாட்டில் பல்வேறான துன்பங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். இழக்க முடியாத பல்வேறானவற்றையெல்லாம் இழந்திருக்கின்றார்கள். அதுபோன்று அண்மையில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகத்தினரும் பல்வேறான இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளதுடன், சொல்லொணா துயரங்களையும் அனுபவித்து வருகின்றனர்.
இவற்றுக்கெல்லாம் இந்நாட்டில் உள்ள ஜாதிக் கட்சியே மூல காரணமாகும். இவ்வாறான ஜாதிக் கட்சிகளை நாம் ஆதரிக்கக் கூடாது.
மக்கள் இவ்வாறான கட்சிகளை ஆதரிக்காது எம்மதியிலிருந்து விரட்டியடிக்கும் பட்சத்தில் தேசியத்துவத்துடன் நாம் இணைந்து செயற்படும்போது நாம் அனைவரும் நிம்மதியாக இந்நாட்டில் வாழ முடியும்.
சுதந்திர தினத்தின்போது தேசிய கீதத்தினை தமிழில் பாட முடியாதென்று ஒரு வதந்தியினை ஒரு தரப்பினர் பரப்பி வருகின்றனர். அரசாங்கம் அவ்வாறான எந்தவொரு முடிவினையும் எடுக்கவில்லை என மிகத் தெளிவாக சொல்லியிருக்கின்றது. இவ்வாறான குழப்பமுடைய கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பி மக்களின் மனங்களை குழப்பும் முயற்சியில் சில தீய சக்திகள் முனைந்து கொண்டிருக்கின்றன. தற்போதுள்ள ஆட்சியாளர்கள் மீது வெறுப்பினை ஏற்படுத்துவதற்காக சூழ்ச்சிக்காரர்களின் சதிச் செயற்பாடாகவே இது உள்ளது.
பல முனைகளிலும் இருந்து இவ்வாட்சியில் வெறுப்பினை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தீய சக்திகள் முயன்று கொண்டிருக்கின்றன. இவ்வாறான சக்திகளின் வலைகளில் மக்கள் வீழ்ந்து விடாமல் தெளிவாக இருக்க வேண்டும்.
இலங்கை நாட்டில் உள்ள தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் ஒரு தாய் பிள்ளைகள் போல் நிம்மதியாகவும் மகிழ்வாகவும் வாழ வேண்டுமாக இருந்தால் இந்நாட்டில் சாதி மத பேதங்களை உண்டு பண்ணக்கூடிய கருத்துக்களைத் தெரிவிக்கும் கட்சிகளும், பாகுபாடுகளையும் பேதங்களையும் தூண்டி உணர்வுகளை மேலோங்கச் செய்து பிணக்குகளை ஏற்படுத்தக் கூடிய கட்சிகள் எம்மத்தியில் இருந்து இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்றார்.-Vidivelli
- எம்.ஏ.றமீஸ்