காதிகள் சபைக்கு (Board of Quazis) கடந்த ஒன்றரை வருட காலமாக செயலாளர் ஒருவர் நியமிக்கப்படாமையால் காதிகள் சபையின் சேவையைப் பெற்றுக்கொள்ளச் செல்லும் முஸ்லிம்கள் பல அசெளகரியங்களை எதிர்கொள்வதாகவும், சேவைகள் தாமதத்துக்கு உட்படுவதாகவும் முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகள் புகார் தெரிவித்துள்ளன.
இதேவேளை காதிகள் சபைக்கு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர் ஒருவர் பதிவாளர் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்டும் அவரும் இதுவரை தனது கடமையைப் பொறுப்பேற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. பதிவாளர் திணைக்களம் கடந்த அக்டோபர் மாதம் இந்நியமனக் கடிதத்தை வழங்கியுள்ளது.
ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக காதிகள் சபைக்கு செயலாளர் ஒருவர் நியமிக்கப்படாது அப்பதவி வெற்றிடமாக இருப்பது தொடர்பில் காதி நீதிவான்கள் மன்றம் முன்னாள் நீதியமைச்சர் தலதா அத்துகோரளவின் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தது.
காதி நீதிமன்றங்கள், காதி நீதிபதிகள் தொடர்பான பணிகளை முன்னெடுக்கும் காதிகள் சபைக்கு உடனடியாக முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என காதி நீதிவான்கள் மன்றமும், முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன.
அத்தோடு காதிகள் சபை காரியாலயம் கொழும்பு ஹல்ஸ்டோர்ப்பில் சிறியதோர் அறையில் இயங்கி வருவதால் இடப்பற்றாக்குறை நிலவுவதும் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது. நாடெங்கும் சேவையிலுள்ள 60 க்கும் மேற்பட்ட காதி நீதிபதிகள் மாதாந்தம் அனுப்பி வைக்கும் தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்கு கோவைகளை களஞ்சியப்படுத்துவதற்கு ஆவணக்காப்பகம் ஒன்று இல்லாமையால் காதிகள் சபைக் காரியாலயம் வழக்கு கோவைகளால் நிரப்பியுள்ளது. நிலைமையினை சமாளிக்க முடியாமையால் தீர்ப்பு வழங்கப்பட்ட காதி நீதிவான்களின் வழக்கு கோவைகளைப் பெற்றுக்கொள்வதை காதிகள் சபை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்