தொப்பி, ஹிஜாப் அணிந்து எடுத்த புகைப்படங்களை நிராகரிக்கின்றனர்
ஆட்பதிவு திணைக்களத்திடம் உலமா சபை முறைப்பாடு
தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ள ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்துக்கு செல்லும் முஸ்லிம் ஆண்களின் தொப்பியுடனான புகைப்படங்களையும், முஸ்லிம் பெண்களின் தலையை மறைத்துள்ள ஹிஜாபுடனான புகைப்படங்களையும் ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்கள அதிகாரிகள் நிராகரிப்பதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபைக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதனையடுத்து இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்துக்கு முறைப்பாடு செய்துள்ளது.
இதேவேளை தேசிய அடையாள அட்டைக்கான புகைப்படங்கள் எடுப்பதற்கு அனுமதி பெற்றுள்ள புகைப்பட நிலையங்கள் (ஸ்டூடியோக்கள்) முஸ்லிம் ஆண்கள் தொப்பி மற்றும் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்திருந்தால் புகைப்படம் எடுப்பதற்கு மறுப்புத்தெரிவிப்பதாகவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை முறைப்பாடு செய்துள்ளது. ஸ்டூடியோக்கள் ஆண்கள் தொப்பியை அல்லது முஸ்லிம் பெண்கள் தலையை மூடியுள்ள ஹிஜாபை கழற்றினால் மாத்திரமே புகைப்படம் எடுக்க முடியும் எனத் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் முஸ்லிம் ஆண்கள் தொப்பி அணிந்து தேசிய அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுப்பதற்கும் முஸ்லிம் பெண்கள் தலையை மூடி ஹிஜாப் அணிந்து புகைப்படம் எடுப்பதற்கும் சட்ட ரீதியாக அனுமதி வழங்கியுள்ள நிலையில் ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்கள அதிகாரிகளும், புகைப்பட நிலையங்களும் தாம் நினைத்தவாறு செயற்படுவது முஸ்லிம்களை பல்வேறு அசெளகரியங்களுக்கு உட்படுத்தியுள்ளது என அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் பொதுச்செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாரக் தெரிவித்தார்.
முஸ்லிம்களின் சட்டரீதியான உரிமைகள் சவாலுக்குட்படுத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். கலாசார அமைச்சும் ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களமும் இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றார்.
ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் சுற்றுநிருபம்
ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம். பணிப்பாளர், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் எனக் குறிப்பிட்டு 2011.09.19 ஆம் திகதி 01/ஆ/மா.ச/45 எனும் இலக்கமிட்டு சுற்றுநிருபம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளது. அதன் பிரதிகள் செயலாளர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், நிறைவேற்று அதிகாரிகள், அனைத்து பணிப்பாளர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சுற்றுநிருபம் இவ்வாறு தெரிவிக்கிறது
இதன் பின்பு தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ள புகைப்படம் எடுக்கும் போது முஸ்லிம் சமய உலமாக்கள், போதகர்கள், சமயத்தை பயிலும் மாணவர்கள் அத்தோடு ஏனைய முஸ்லிம் ஆண்கள் தலையை மூடி தொப்பி அணிவதற்கு அனுமதியளிக்கப்படுகிறது. தொப்பி அணியும் போது தலை மாத்திரம் மறைக்கப்பட்டிருக்க வேண்டும். நெற்றி மறையாதிருக்க வேண்டும்.
பெண்கள் பர்தா அணியும் உரிமைக்குத்தடையில்லை. ஆனால் காதுகள் தெளிவாகத் தெரிய வேண்டும். பல்வேறு முஸ்லிம் சமய அமைப்புகளின் வேண்டுகோளின்படி இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சுற்றுநிருபம் அப்போதைய ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்கள ஆணைாளர் நாயகம் ஜகத்.பி.விஜேவீரவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இச்சுற்றுநிருபம் 2011 ஆம் ஆண்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை அப்போதைய பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோத்தாபய ராஜபக் ஷவுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்பே வெளியிடப்பட்டதாகவும் தானும் கலந்துரையாடலில் பங்கு கொண்டதாகவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கண்டி மாவட்ட கிளையின் தலைவர் மெளலவி எச்.ஒமர்தீன் தெரிவித்தார்.
அண்மையில் தனது மகனது தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ள ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்துக்குச் சென்றபோது அங்குள்ள பெண் அதிகாரி மகனின் தொப்பியுடனான புகைப்படத்தை நிராகரித்ததாகவும் அவர் தெரிவித்தார். பின்பு பல்வேறு தெளிவுகளை வழங்கி இறுதியில் 2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் சுற்றுநிருபத்தைக் காட்டியதனை அடுத்து மன்னிப்புக்கோரியதுடன் தொப்பி அணிந்திருந்த மகனின் புகைப்படத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்தார். ஆனால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து செல்லும் பாமர விண்ணப்பதாரிகளின் விண்ணப்பங்கள் தொப்பி, பர்தா அணிந்த காரணத்தினால் நிராகரிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்