உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதல் மற்றும் மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி குற்றவாளிகளுக்கு எதிர்வரும் 2020 மார்ச் மாதம் பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்பு தண்டனை வழங்கப்படவேண்டும். இந்தச் சவாலை நான் அரசாங்கத்திற்கு விடுக்கிறேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டி ஆராச்சி தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக் காரியாலயம் சிறிகொத்தவில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,
ஜனாதிபதித் தேர்தலின் போது இந்த அரசாங்கத்தின் பங்காளர்கள் தாம் பதவிக்கு வந்து 24 மணித்தியாலயங்களுக்குள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்ட குற்றவாளிகளுக்கும் மத்திய வங்கி பிணைமுறி ஊழலுடன் தொடர்புபட்ட குற்றவாளிகளுக்கும் தண்டனை வழங்கப்படும் என்று உறுதியளித்தார்கள். மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் ஒரு மாதகாலம் கடந்துவிட்ட நிலையில் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை தற்போதைய அரசாங்கம் உடனடியாக நிறைவேற்றவேண்டும். இல்லையேல் எதிர்வரும் பொதுத்தேர்தலில் மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள்.
பாராளுமன்ற தெரிவுக்குழு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் வாக்குமூலங்களைப் பதிவுசெய்து அறிக்கையையும் கையளித்துள்ளது. இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் புதிய அரசாங்கம் தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருவது காலத்தை வீணே கடத்துவதாகும் என்றார்.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ. பரீல்