2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி என்பது இலங்கையில் மாத்திரமல்ல , உலகத்தில் யாராலும் மறக்க முடியாதவொரு நாளாகும். இலங்கையில் சுமார் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களை காவு கொண்ட, ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோரை காணாமல் ஆக்கிய சுனாமி பேரலை ஏற்பட்டு இன்றுடன் 15 வருடங்கள் பூர்த்தியாகின்றன.
2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் உயிரிழந்த மக்களை நினைவு கூரும்முகமாக கடந்த 2005 ஆம் ஆண்டு அமைச்சரவையில் மேற்கொண்ட தீர்மானத்தின் மூலம் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி தேசிய பாதுகாப்பு தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 26 ஆம் திகதி தேசிய பாதுகாப்பு தினத்தில் சுனாமியில் உயிரிழந்த மக்கள் நாடளாவிய ரீதியில் நினைவு கூரப்படுகின்றனர்.
அதற்கமைய பிரதான நினைவுகூரல் நிகழ்வு முப்படையினர், பொலிஸார் மற்றும் பொதுமக்களின் பங்குபற்றலுடன் காலி – தெல்வத்த சுனாமி நினைவு தூபிக்கருகில் இன்று காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இன்றைய தினம் காலை 9.25 மணிமுதல் 9.27 மணிவரை சுனாமி உட்பட வெவ்வேறு அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் முகமாக நாடளாவிய ரீதியில் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.
அனைத்து அரச திணைக்களங்கள், தனியார் நிறுவனங்கள், வழிபாட்டுத்தலங்கள் என்பவற்றில் இவ்வாறு மௌன அஞ்சலி செலுத்தப்படும்.
அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் சர்வமத வழிபாடுகள் இடம்பெறவுள்ளதோடு, உயிரிழந்த மக்களின் சடலங்கள் புதைக்கப்பட்டுள்ள இடங்களிலும் அவர்களது குடியிருப்புக்கள் உள்ள இடங்களிலும், சுனாமியின் போது புகையிரத விபத்துக்கள் ஏற்பட்ட இடங்களிலும் நினைவுகூரல் நிகழ்வினை மாவட்ட ரீதியில் முன்னெடுப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
நினைவுகூரல் மாத்திரமின்றி சுனாமி உள்ளிட்ட ஏனைய ஏதேனுமொரு அனர்த்தங்கள் ஏற்படும்பட்சத்தில் அதிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக 25 மாவட்டங்களிலுமுள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையங்கள் ஊடாக விஷேட பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன. அத்தோடு பொதுமக்களுக்கு இயற்கை அனர்த்தங்கள் தொடர்பிலான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.-Vidivelli