நாட்டில் 7 மாகாணங்களைச் சேர்ந்த 13 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடும் மழை, வெள்ளம், மண்சரிவுகள் உட்பட காலநிலை அனர்த்தங்களால் 18840 குடும்பங்களைச் சேர்ந்த 64.608 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பதுளை, மொனராகலை, மட்டக்களப்பு அம்பாறை, கண்டி, நுவரெலியா, மாத்தளை, அம்பாந்தோட்டை, குருணாகல், புத்தளம், கேகாலை, அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களே இவ்வாறு பாதிக்கப் பட்டுள்ளார்கள். இதேவேளை இந்த இயற்கை அனர்த்தங்களினால் அகதிகளாகியுள்ள 5,255 குடும்பங்களைச் சேர்ந்த 17,766 பேர் பாதுகாப்பாக 132 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
கடும் மழை மற்றும் வெள்ள அனர்த்தத்தினால் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த மக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். புத்தளம் மாவட்டத்தில் மாத்திரம் 2,273 குடும்பங்களைச் சேர்ந்த 7974 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
மேலும் அம்பாறை மாவட்டத்தில் 1633 குடும்பங்களைச் சேர்ந்த 5690 பேரும் அநுராதபுர மாவட்டத்தில் 1272 குடும்பங்களைச் சேர்ந்த 4341 பேரும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 829 குடும்பங்களைச் சேர்ந்த 3362 பேரும் மொனராகலை மாவட்டத்தில் 973 குடும்பங்களைச் சேர்ந்த 3350 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1043 குடும்பங்களைச் சேர்நத 3293 பேரும் பதுளை மாவட்டத்தில் 650 குடும்பங்களைச் சேர்ந்த 2565 பேரும் பொலன்னறுவை மாவட்டத்தில் 776 குடும்பங்களைச் சேர்ந்த 2371 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 484 குடும்பங்களைச் சேர்ந்த 1592 பேரும் குருணாகல் மாவட்டத்தில் 311 குடும்பங்களைச் சேர்ந்த 939 பேரும் நுவரெலிய மாவட்டத்தில் 115 குடும்பங்களைச் சேர்ந்த 389 பேரும் கண்டி மாவட்டத்தில் 93 குடும்பங்களைச் சேர்ந்த 347 பேரும் மற்றும் கேகாலை மாவட்டத்தில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 25 பேரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என அனர்த்த முகாமைத்துவ தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலைமை காரணமாக 62 வீடுகள் முழுமையாகவும் 1463 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக ஏற்படும் அனர்த்தங்களிலிருந்து மக்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக எச்சரிக்கையுடன் இருக்குமாறும் வேண்டியுள்ளார்.
ராஜாங்கன, கலாவெவ, தம்போவ, இனிகிமிடிய, அங்கமுவ, தெதுறுஓய, அம்பகொலவெவ, ரம்புக்கன் ஓய, லுணுகம்வெஹர, கிம்முல்வானவெவ, வெஹரகல, முருதவெல, உடவளவ, போவதென்ன, பராக்கிரம சமுத்திரம் உட்பட பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. மகாவலி கங்கையின் நீர் மட்டம் சடுதியாக உயர்வடைந்துள்ளதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வேண்டப்பட்டுள்ளனர்.
வெள்ள அபாயத்தில் சிக்குண்ட மக்களை மீட்கும் பணிகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள கடற்படையின் 25 குழுக்கள் களத்தில் இறக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ நேற்று வட மத்திய மாகாணத்தின் அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவைப் பகுதிகளுக்கு விஜயம் செய்தார். பாதிக்கப்பட்ட மக்களைப் பார்வையிட்டார். அநுராதபுரம் ஜனாதிபதி மாளிகையில் கூட்டம் ஒன்றினையும் நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அரசியல் பிரமுகர்களுக்கும் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினார். பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாக நிவாரணங்களை வழங்குமாறு உத்தரவிட்டார்.
எமது நாடு இயற்கை அனர்த்தங்களால் குறிப்பாக வெள்ளம், மண்சரிவுகளால் அடிக்கடி பாதிக்கப்பட்டு வருகிறது. இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டதன் பின்பு நிவாரணங்கள் வழங்குவதும் நஷ்டஈடு வழங்குவதும் வழமையாக இடம்பெற்று வருகிறது.
அரசாங்கம் இவ்வாறான செயற்பாடுகளைத் தவிர்த்து இயற்கை அனர்த்தத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக நிரந்தர திட்டங்கள் வகுக்கவேண்டும். வெள்ள அபாயத்தைத் தவிர்த்து மழைநீரை விவசாயத்துக்குப் பயன்படுத்தும் வகையில் புதிதாக நீர்த்தேக்கங்களையும் குளங்களையும் அமைக்க முடியும். இந்நீரை வரண்ட பிரதேச விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கும் திட்டங்களும் முன்னெடுக்கப்படலாம். இது பாரிய திட்டம். பெருந்தொகை நிதி தேவைப்படலாம். என்றாலும் இவ்வாறான திட்டங்களை ஆரம்பிப்பதன் மூலம் நாட்டின் உணவு உற்பத்தியிலும் மின்வலு உற்பத்திகளிலும் நாம் தன்னிறைவு பெறமுடியும்.
புதிய அரசாங்கமும் புதிய ஜனாதிபதியும் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.-Vidivelli