பாகிஸ்தான் முன்னாள் அதிபரும், ஓய்வுபெற்ற ராணுவ ஜெனரலுமான பர்வேஸ் முஷாரபுக்கு தேசத்துரோக வழக்கில், சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளன. இந்தக் கேள்விகள் சமூக ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளிலும் வலம் வரத் தொடங்கியுள்ளன.
பர்வேஸ் முஷாரபுக்கு சிறப்பு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ள நிலையில், பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும், முஷாரபுக்கு ஆதரவாக யார் வழக்காடப் போகிறார்கள்? இதுகுறித்து சில பாகிஸ்தான் சட்ட நிபுணர்கள் மற்றும் அரசு அதிகாரிகளிடம் கருத்துகளைக் கேட்க பி.பி.சி. முயற்சி மேற்கொண்டது.
2007 நவம்பர் 3ஆம் தேதி நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்தது, நாட்டில் அரசியல் சாசனத்தை முடக்கியது ஆகியவை தொடர்பான வழக்கு ஓய்வுபெற்ற ஜெனரல் பர்வேஸ் முஷாரப் மீது தொடரப்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. பாகிஸ்தான் அரசியல் சட்டத்தின் 6ஆவது பிரிவின் கீழ் அவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
பர்வேஸ் முஷாரபுக்கும், பாகிஸ்தான் அரசுக்கும் இப்போது என்ன வாய்ப்புகள் உள்ளன?
முன்னாள் ராணுவ ஜெனரலுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கில் அரசு வாதாடும் என்று பாகிஸ்தான் அட்டர்னி ஜெனரல் அன்வர் மன்சூர் கான் கூறினார்.
மரண தண்டனையை நிறுத்த நீதிமன்றம் இறுதி முடிவு எடுத்துவிட்டால், அதை அமுல்படுத்துவதைத் தடுக்க சட்டமொன்றை உருவாக்க நாடாளுமன்றத்துக்கு அதிகாரமுள்ளது என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.
சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டுமானால், குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் 30 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் ”சரணடைய” வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
அரசியல் சாசன விவகாரங்கள் மற்றும் குற்றவியல் வழக்குகளைக் கையாளும் அம்ஜத் ஷா, அரசியல் சாசனத்தை மீறிய வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள பர்வேஸ் முஷாரப், சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதற்காக 2016இல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். எனவே இந்த சூழ்நிலையில், முஷாரபுக்கும், வழக்கமான முறையில் மேல்முறையீடு செய்பவருக்கும் இடையில் வித்தியாசமுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
தீர்ப்பு விவரங்கள் அளிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் பர்வேஸ் முஷாரப் மேல்முறையீடு செய்யாவிட்டால், சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானதாக இருக்குமென்று அம்ஜத் ஷா தெரிவித்தார்.
இந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதா என்று அவரிடம் கேட்டதற்கு, மனுதாரருக்கு ஆதரவாக நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்தால், அதற்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்ததாக வரலாறு இல்லை என்று அவர் கூறினார்.
பர்வேஸ் முஷாரபுக்கு எதிராக முக்கியத்துவமான தேசத்துரோக வழக்கை பாகிஸ்தான் மத்திய அரசுதான் தொடர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை செயலர் மூலம் வழக்கு தொடரப்பட்டது. மத்திய அரசு எடுத்த அந்த முடிவு சரியானதே என்று சிறப்பு நீதிமன்றமும் ஒப்புதல் அளித்துள்ளது.
பர்வேஸ் முஷாரப் மரண தண்டனையை நிறுத்த முடியுமா?
முன்னாள் ராணுவ சர்வாதிகாரி பர்வேஸ் முஷாரபுக்கு எதிரான, அரசியல் சாசனத்தை மீறிய வழக்கை இப்போதைய அரசு சரியாகக் கையாளவில்லை என்று முன்னாள் அட்டர்னி ஜெனரல் இர்பான் காதிர் கூறினார்.
சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு வருவதற்கு முன்னதாக, எப்போது விரும்பியிருந்தாலும் இந்த வழக்கை மத்திய அரசு திரும்பப் பெற்றிருக்க முடியும். வழக்கு தொடர்ந்தவர் அதைத் திரும்பப்பெற சட்டத்தில் இடமுள்ளது. ஆனால் அரசு அவ்வாறு செய்யவில்லை.
மனுதாரரின் வேலையை நீதிமன்றங்கள் செய்ய முடியாது என்றார் அவர்.
மரண தண்டனையை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்து, அந்த உத்தரவை நிறைவேற்றக் கூடாதென்று அட்டர்னி ஜெனரல் கருத்து தெரிவித்தால், அதன்மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமென்று பி.பி.சியிடம் அவர் தெரிவித்தார்.
நீதிமன்றத் தீர்ப்பு குறையுள்ளதாக இருந்தால், அந்தத் தீர்ப்பை அமுல்படுத்தாமல் நிறுத்துவதற்கு நாடாளுமன்றத்தில் சட்டம் உருவாக்குவதற்கு உலகில் பல உதாரணங்கள் உள்ளன என்று இர்பான் காத்ரி குறிப்பிட்டார்.
நீதித்துறையும், சட்டவமைப்பும் நேருக்கு நேர் உரசும் சூழ்நிலை ஏற்பட்டால், சட்டம் உருவாக்குபவர்களின் கருத்துக்குத்தான் முக்கியத்துவமளிக்கப்படும் என்றும், நீதித்துறை முடிவுகளை ‘நாடாளுமன்றம் உருவாக்கும் சட்டத்தின்’ மூலம் ரத்து செய்யலாம் என்றும் இர்பான் காதிர் கூறினார்.
அரசியல் சாசனத்தை மீறுபவர் தாய் நாட்டில் தேசதுரோகியா?
பாகிஸ்தான் அரசியல் சாசனத்தின் ஆறாவது பிரிவின்படி, 1956 மார்ச் 23க்குப் பிறகு, அரசியல் சாசனத்தை மீறும் அல்லது அதற்கு எதிரான சதியில் ஈடுபடக்கூடிய ஒருவர், தேசத்துரோக குற்றம் செய்தவராகக் கருதப்பட்டு, அவருக்கு ஆயுள் சிறை அல்லது மரண தண்டனை விதிக்கப்படலாம்.
இருந்தபோதிலும், முன்னாள் ராணுவத் தளபதி பர்வேஸ் முஷாரபுக்கு எதிராக தேசத்துரோக வழக்கு விசாரணையை தொடங்க, தாம் அட்டர்னி ஜெனரலாக இருந்த வரையில் அனுமதிக்கவில்லை என்று இர்பான் காத்ரி தெரிவித்தார்.
முன்னாள் ராணுவத் தளபதி அரசியல் சாசனத்தை மீறியுள்ளார் என்றாலும், இதுபோன்ற அனைத்து நிகழ்வுகளும் தேசத்துரோக பிரிவில் வராது என்று முன்னாள் தலைமை நீதிபதி ஜாவத் எஸ். கவாஜா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்விடம் தாம் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முஷாரப் பாகிஸ்தான் வராமல் மேல்முறையீடு செய்ய முடியுமா?
கிரிமினல் வழக்குகளில், குற்றவாளி 30 நாட்களுக்குள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்.
முஷாரப் நேரில் ஆஜராகாமல் அவருக்கு நீதிமன்றத்தில் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்க முடியும் என்றால், அவர் வராமல் அந்த முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஏன் மேல்முறையீடு செய்ய முடியாது என்று பஞ்சாப் மாகாண கூடுதல் அட்வகேட் ஜெனரல் பைசல் சௌத்ரி கேள்வி எழுப்பியுள்ளார்.
எ
ன்.ஏ.பி. வழக்குகளில், குற்றஞ்சாட்டப்பட்டவர் இல்லாமல் தீர்ப்புகள் அளிக்கப்படுகின்றன. ஆனால் இது அடிப்படை மனித உரிமை மீறல் என்று உச்ச நீதிமன்றமும் கூறியுள்ளது.
இதற்கு மாறாக, சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக அட்டர்னி ஜெனரல் அன்வர் மன்சூர் அறிவித்துள்ளார். அரசியல் சட்டப்படியான அனைத்து அம்சங்களும் கணக்கில் கொள்ளப்படவில்லை என்பதால் மேல்முறையீடு செய்யப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் பர்வேஸ் முஷாரபுக்கு ஆதரவாக வாதாடப் போவது யார்?
பர்வேஸ் முஷாரபின் வழக்கறிஞராக இருந்துள்ள அட்டர்னி ஜெனரல் அன்வர் மன்சூர், சிறப்பு நீதிமன்றத்தில் அவருக்கு ஆதரவாக வாதாடினார். இப்போது உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்புக்கு எதிராக மனுதாரர் சார்பில் பாகிஸ்தான் முதன்மை சட்ட அதிகாரியாக வாதாடி வருகிறார்.
இந்த முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடப் போவதாக, முன்னாள் ராணுவத் தளபதிகள் சிலரின் வழக்கறிஞர்களும் அறிவித்துள்ளனர். ஆனால் முஷாரப் தரப்பில் ஆஜராக சிறப்பு நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வார்களா அல்லது முஷாரபின் வழக்கறிஞர்கள் அப்பீல் செய்வார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
அட்டர்னி ஜெனரலின் செயற்பாடு குறித்து ஆளுங்கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
ராணுவ முதன்மை ஜெனரல் குவாமர் ஜாவித் பஜ்வா, பதவி நீடிப்பு வழக்கை உச்சநீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் கையாண்டவிதம் குறித்து, கட்சியின் சில தலைவர்களுக்கு வருத்தமுள்ளது என்று, வெளியில் பெயர் தெரிவிக்க விரும்பாத ஆளுங்கட்சியின் முன்னணி உறுப்பினர் ஒருவர் பி.பி.சியிடம் தெரிவித்தார்.
அதுகுறித்த நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றத்தில் முறையாக முன்வைக்காததால் பாகிஸ்தான் டெஹ்ரீக்- – இன்சாப் மற்றும் அதன் தோழமைக் கட்சிகளுக்கு சங்கடமான சூழ்நிலை ஏற்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.
கைபர் பகதுன்கவாவில் ராணுவம் மூலம் தடுப்புக் காவல் மையங்கள் நடத்துவது குறித்து பெஷாவர் உயர் நீதிமன்றமளித்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சரியாகக் கையாளவில்லை என்று கட்சியின் சில தலைவர்கள் வருத்தம் கொண்டிருப்பதாக ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.-Vidivelli
- ஷாஜாத் மாலிக்
நன்றி: பிபிசி