அடிப்படைவாத கட்சிகளின் பிடிக்குள் சிக்காது அரசாங்கம் அமைக்க வேண்டும்
நீதி, மனித, உரிமைகள் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர்
அடிப்படைவாத சிறிய கட்சிகளின் பிடிக்குள் சிக்கிவிடாமல் தனிக்கட்சியாக அரசாங்கம் அமைக்கத் தேவையான சக்தியை பொதுத் தேர்தலில் பெறவேண்டும். அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் போன்று நாங்கள் ஒருபோதும் வெளிநாட்டு சக்திகளின் தேவைக்கேற்ற முறையில் செயற்படமாட்டோமென நீதி, மனித உரிமைகள், சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
வெலிமட பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
தேர்தலில் நாங்கள் மாத்திரம் வெற்றிபெறவில்லை. நாடும் வெற்றிபெற்றது. பாதுகாப்பற்ற நிலையிலிருந்த நாடு பாதுகாப்பான நாடாகத் தற்போது மாறியிருக்கின்றது. பெளத்த தர்மத்துக்கும் பாதுகாப்பற்ற நிலையே இருந்தது. கோத்தாபய ராஜபக் ஷ வெற்றிபெற்றிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும் என்று நினைத்துப்பார்க்கவேண்டும். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ மக்களுக்கும் நாட்டுக்கும் முன்னுதாரணமாக பொதுச்சொத்துக்கள் வீண் விரயமாகாமல் பாரிய அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார்.
அத்துடன் அடுத்த வருடம் மார்ச் 3ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படும்.ஏப்ரல் இறுதியில் பொதுத் தேர்தல் இடம்பெறலாம். அதனால் நாங்கள் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டோமென சும்மா இருந்துவிடமுடியாது. அதனையும்விட பாரிய பொறுப்பு தற்போது எங்களுக்கு இருக்கின்றது. மிகவும் கஷ்டத்துக்கு மத்தியில் பெற்றுக்கொண்டுள்ள அரசாங்கத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அடிப்படைவாத சிறிய கட்சிகளின் பிடிக்குள் சிக்கிவிடாமல் நாங்கள் தனி அரசியல் கட்சியாக இருந்து அரசாங்கம் செய்யவேண்டும். நம் நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லது இடம்பெறாமல் சூழ்ந்திருந்த மேகங்கள் தற்போது விலகிச்சென்றுள்ளன. அதனால் மீண்டும் ஒளிவர வேண்டிய நேரம் வந்துள்ளது. அத்துடன் உங்கள் பொருளாதாரம் சக்திபெறவேண்டும். அதற்காக நம் நாட்டு விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் வெளிநாடுகளிலிருந்து கிழங்கு, மா போன்றவற்றை இறக்குமதி செய்வதை நிறுத்தவிருக்கின்றோம். அது மாத்திரமின்றி எமது நாட்டில் உற்பத்தி செய்யும் அனைத்துவகையான பொருட்களையும் இறக்குமதி செய்வதை நிறுத்தவேண்டும்.
மேலும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ நாட்டை முன்னேற்ற நிலைக்கு கொண்டுசெல்ல நடவடிக்கை எடுத்துவருகின்றார். அதற்கு சர்வதேச ரீதியில் எமக்கு உதவிகள் கிடைக்கப்பெறுகின்றன. என்றாலும் நாங்கள் ஒருபோதும் சர்வதேசத்துக்கு அடிபணிந்து செல்லமாட்டோம். ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் சர்வதேசத்துக்கு அடிபணிந்தது. வெளிநாட்டு சக்திகளுக்கு முன்னால் தலைகுனிந்திருந்தது. ஆனால் ஜனாதிபதியோ அரசாங்கமோ சர்வதேசத்துக்கு முன்னாலோ அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு முன்னாலோ அல்லது சர்வதேச சக்திகளுக்கு முன்னால் ஒருபோதும் தலை சாய்க்கமாட்டார்கள். இது எமது நாட்டுக்கு கெளரவமாகும். அத்துடன் வெளிநாட்டு சக்திகளுக்கு தேவையான முறையில் செயற்படும் அரசாங்கத்தை தோற்கடிக்கவேண்டும் என்பதே கடந்த தேர்தலின்போது மக்க ளுக்குத் தேவையாக இருந்தது. அதனால் இந்த அரசாங்கம் வெளிநாட்டு சக்திகளுக்குத் தேவையான முறையில் செயற்படாமல் உறுதியாக தீர்மானங்களை மேற்கொள்ளும் அரசாங்கமாகும். அதன் மூலம் தேசத்தின் மதிப்பை மேலோங்கச்செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது என்றார்.-Vidivelli
- எம்.ஆர்.எம்.வஸீம்