இலங்கை வரலாற்றில் முஸ்லிம்கள் தம் திறமை, ஆளுமைகள் மூலம் தடம்பதித்துள்ளனர். அவர்களுள் யாழ்ப்பாணத்தில் பிறந்து வாழ்ந்து மறைந்த முஸ்லிம் மூத்த அறிஞர் பெருமக்கள் நாட்டுக்கும், சமூகத்துக்கும் ஆற்றிய பங்களிப்புகள் குறித்து சிறியதொரு பார்வை இங்கு தொகுத்து தரப்பட்டுள்ளது.
துருக்கித்தொப்பி வீரர் அட்வகேட் எம்.சீ. அப்துல் காதர் (1875 – 1946)
02.09.1875 இல் யாழ்ப்பாணம் சோனகத்தெருவில் பிறந்த எம்.சீ. அப்துல் காதர் மெட்ராஸ் பிரசிடென்ஸியில் கல்வி கற்று பட்டதாரியாகி இலங்கை முஸ்லிம்களில் முதன் முதலாகப் பட்டதாரியாகிய பெருமையினைப் பெறுகின்றார். தொடர்ந்து சட்டத்துறை பயின்று 1904 இல் இலங்கை முஸ்லிம்களில் முதலாவது நியாயவாதி (அட்வகேட்) யாகிய புகழையும் பெற்றார். கொழும்பில் சட்டத்தொழில் புரிந்தார்.
1905 ஆம் ஆண்டு மே மாதம் 02 ஆம் திகதி மேன்முறையீட்டு வழக்கு ஒன்றில் பிரதம நீதியரசர் சேர். சீ.பீ. லெயார்ட் முன்னிலையில் தனது வழமையான உடையணிந்து துருக்கித் தொப்பியுடன் பிரசன்னமாகியிருந்தார். நீதியரசர் லெயார்ட், நீதிமன்றத்திற்கு மரியாதை செலுத்துவதற்காக துருக்கித் தொப்பியை அல்லது சப்பாத்தைக் கழற்றுமாறு பணித்தார். அட்வகேட் அப்துல்காதர் துருக்கித் தொப்பி அணிவது நீதிமன்றத்துக்குச் செலுத்தும் இஸ்லாமிய மரியாதை என்றும், காலணிகளைக் கழற்றச்சொல்வது தர்க்கமற்ற கூற்று என்றும் வாதிட்டு நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார். 1905 செப்டெம்பர் 19 இல் உயர்நீதிமன்றம், நீதிமன்றத்துக்கு துருக்கித்தொப்பி அணிந்து வருவதைத் தடை செய்து சட்டம் கொண்டு வந்தது.
1905 டிசம்பர் 31 இல் மருதானை பள்ளிவாசல் முன்றலில் இச்சட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டனக் கூட்டம் இடம்பெற்றது. இறுதியில் இவ்விடயம் பிரித்தானிய அரசுக்கு மேன்முறையீடு செய்யப்பட்டது. இதனை ஆராய்ந்த பிரித்தானிய அரசு, முஸ்லிம்கள் நீதிமன்றத்திற்கு துருக்கித் தொப்பி அணிந்து செல்வதற்கான அனுமதியை குடியேற்ற நாட்டுச் செயலாளர் மூலம் அறிவித்தது. இதன் மூலம் துருக்கித் தொப்பி மற்றும் காலணிகள் அணிவது முஸ்லிம் சமூகத்தின் மரபுரிமை, அதனைக் காப்பது தொழிலை விட மேன்மையானது என உலகிற்கு எடுத்துக்காட்டிய அவரது துணிவு மிக்க செயல் அனைத்து முஸ்லிம்களாலும் பாராட்டப்பட்டு “துருக்கித்தொப்பி வழக்கறிஞர்” என அழைக்கப்பட்டார்.
(தகவல்: எம்.பீ.எம். ஜலீல் ஓய்வுபெற்ற பிரதிப்பொது முகாமையாளர் இலங்கை வங்கி)
வழக்கறிஞர் காதி எஸ்.எம். அபூபக்கர் ஜே.பி., யூ.எம்
இவர் 1890 செப்டெம்பரில் யாழ்ப்பாணத்தில் பிறந்தார். 1919 இல் சட்டக்கல்வியில்சித்தியடைந்து புரக்டராகச் சத்தியப்பிரமாணம் செய்தார். 1936 இல் யாழ். நகரசபைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1940 இல் யாழ். நகரசபையின் உப தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். இலங்கை முஸ்லிம் லீக்கின் கிளை ஒன்றை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து அதன் தலைவராகவும் விளங்கினார். 1944 இல் இலங்கை முஸ்லிம் லீக்கின் கொழும்புக்கு வெளியிலான முதலாவது தேசியத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டு வரலாற்றில் இடம்பெற்றார். யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை, பருத்தித்துறைப் பகுதிகளின் முதலாவது காதியாராகவும்பணியாற்றினார்.
(நன்றி: அஸீஸ் பவுண்டேஷன் இணையத்தளம்)
யாழ். மேயர் காதி. எம்.எம். சுல்தான் ஜே.பி., யூ.எம்
யாழ். மத்திய கல்லூரியிலும், யாழ் இந்துக் கல்லூரியிலும் கல்வி பயின்று பின்னர் சட்டக் கல்லூரிக்கு சென்று வழக்கறிஞராகவும், பிரசித்த நொத்தாரிசாகவும் திகழ்ந்தார். 1950 ஆம் ஆண்டு மாநகர சபைக்கு போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டார். மிகவும் சிறுபான்மையினராகவே யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் வாழ்ந்த போதும் தமிழ்ப் பிரதிநிதிகளது அபிமானத்தைப் பெற்றிருந்த இவர், யாழ். மாநகர சபை வரலாற்றிலேயே முதல் முஸ்லிம் மேயராகத் தெரிவு செய்யப்பட்டார். 1955 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மாநகர சபை மற்றும் நகரசபைத் தலைவர்களுக்காக அகில இலங்கை முஸ்லிம் லீக் நடத்திய மகாநாட்டில் தமிழே முஸ்லிம்களின் தாய்மொழி, தமிழும் சிங்களமும் சம அந்தஸ்து பெறவேண்டும் என வலியுறுத்திப் பேசினார். எனினும் சிங்கள மொழியே அரச கரும மொழியாக வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்ட போது அத்தீர்மானத்தில் கையொப்பமிடாது வெளியேறினார். யாழ்ப்பாணம் திரும்பிய சுல்தானுக்கு யாழ் புகையிரத நிலையத்தில் யாழ் மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் பெருமளவு தமிழ் மக்கள் ஒன்று திரண்டு வரவேற்று தமிழ்மொழிக்காக வாதாடிய பெருந்தகை எனப் போற்றினர்.
(நன்றி: தினக்குரல் 23.08.2009 – யாழ். அஸீம்)
அறிஞர் ஏ.எம்.ஏ. அஸீஸ்
1911 ஒக்டோபர் 04 இல் யாழ்ப்பாணத்தில் பிறந்தார். 1933 இல் கொழும்பு பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் சிறப்புப் பட்டம் பெற்றார். 1934 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக புலமைப்பரிசில் கிடைத்துச் சென்றார். ஆனால் இதேசமயம் இலங்கை சிவில் சேவைப் (CCS) பரீட்சையில் சித்தியடைந்ததால் இலங்கை திரும்பினார். இதனால் இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட முதலாவது முஸ்லிம் சிவில் சேவையாளர் என்னும் பெருமையைப் பெற்றார். 1935 இல் மாத்தளையில் அரச சேவையை ஆரம்பித்தார். 1942 இல் விவசாயத்துறை அமைச்சராக இருந்த (இலங்கையின் முதல் பிரதம மந்திரி) டீ.எஸ். சேனாநாயக்க, அஸீஸை கல்முனைக்கு உதவி அரசாங்க அதிபராக நியமித்தார். அங்கு விவசாயத்துறைக்கு அளப்பரிய சேவையாற்றினார்.
1948 இல் கொழும்பு ஸாஹிரா கல்லூரியைப் பொறுப்பெடுத்து அதன் அதிபராகக் கடமையாற்றி இணையற்ற சேவையாற்றினார். 1952 இல் பாராளுமன்ற மேலவையாகிய செனட் சபைக்கு செனட்டராக நியமனம் பெற்றார். 1956 இல் கொண்டு வரப்பட்ட தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்து வாக்களித்ததுடன் முஸ்லிம்களின் தாய்மொழி தமிழ்மொழியே என வலியுறுத்தினார். இவர் இலங்கை பொதுசேவை ஆணைக்குழுவின் (Public Service Commission) உறுப்பினராகவும் விளங்கினார். இருபதாம் நூற்றாண்டின் கல்வி தொடர்பானதும், சமூக மாற்றங்கள் தொடர்பானதும் சிந்தனையின் முன்னோடியாக செனட்டர்அஸீஸ் விளங்கினார்.
(தொகுப்பு: மஹ்ரூப் ஏ. காதர்)
டாக்டர். எம்.எச்.எம். அப்துல்காதர்
1908 இல் யாழ்ப்பாணத்தில் பிறந்தார். இலங்கை முஸ்லிம்களில் முதலாவது வைத்தியப் பட்டதாரிப் பட்டம் (MBBS) பெற்றவர் இவரே. அத்துடன் வைத்தியத்துறையில் D.Ph (London), D.T.M. & H (Eng), F.R.S.S. (London) ஆகிய மேற்படிப்புக்களையும் கற்ற முதல் இலங்கை முஸ்லிமாக இவர் திகழ்ந்தார். உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) திட்டத்தலைவராக, நோய்த்தடுப்பு வைத்திய நிபுணராக கென்யா போன்ற ஆபிரிக்க நாடுகளில் சிறப்புறச் சேவையாற்றினார்.
டாக்டர் மைமூன் லெப்பை
1920 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் பிறந்த இவரே இலங்கை முஸ்லிம் பெண்களுள் முதன்முதலில் வைத்தியப் பட்டதாரிப்பட்டம் (MBBS) பெற்றவர். அத்துடன் பெண் நோயியல் மற்றும் மகப்பேற்றியல் துறையிலும் ( Obstetrician & Gynecologist) சிறப்புப்பட்டம் பெற்ற முதலாவது இலங்கை முஸ்லிம் பெண்ணாக இவர் விளங்கினார்.
(தகவல்: ஏ.ஆர்.எம். உனைஸ் – பிரதி அதிபர்)
நீதியரசர் எம்.எம். அப்துல் காதர்
22.05.1920 இல் யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர், இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்ற (Appeal Court) நீதியரசர் குழாமின் தலைவர் பதவி வகித்த முதலாவது இலங்கை முஸ்லிம் ஆவார். கொழும்பு பல்கலைக்கழக பட்டதாரியான இவர், 1946 இல் அட்வகேட் ஆனார். நீதிவானாக நியமனம் பெற்றபின், மாவட்ட நீதிபதி, மேல் நீதிமன்ற நீதிபதி, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர், உயர்நீதிமன்ற நீதியரசர் பதவிகளுக்கு உயர்ந்தார். 1982 இல் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாமின் தலைவராக நியமனம் பெற்றார்.
(தகவல்: சட்டத்தரணி சகீன் ஏ.காதர் – மகன்)
அரசாங்க அதிபர் எம்.எம். மக்பூல்
20.04.1942 இல் யாழ்ப்பாணத்தில் சாதாரண குடும்பமொன்றில் பிறந்த இவர் பட்டதாரியாகி, ஆசிரியத் தொழிலில் இணைந்து, பின்னர் இலங்கை வங்கியில் பதவிநிலை உத்தியோகத்தராகச் சேர்ந்தார். 1968 இல் இலங்கை நிர்வாக சேவை பரீட்சையில் சித்தியடைந்து, நிர்வாக சேவையில் இணைந்ததுடன் பல்வேறு பிரதேசங்களில் பல்வேறு பதவிகளை வகித்ததுடன் 1984 இல் நிர்வாக சேவையின் தரம் 1 க்கு உயர்ந்து 1985 ஒக்டோபரில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரானார். சிறந்த நிர்வாகத் திறனும், உயர்ந்த ஆளுமையும் கொண்ட முஸ்லிம் அரசாங்க அதிபராக விளங்கிய இவரை 1988 இல் புலிகள் சுட்டுக் கொன்றனர். இவரே முஸ்லிம் புத்திஜீவிகள் வரிசையில் புலிகளால் கொல்லப்பட்ட முதலாவது அரசாங்க அதிபர்.
(தகவல்: யாழ் அஸீம்)
அமைச்சரவைச் செயலாளர் எம்.எஸ். ஆலிப்
யாழ்ப்பாணத்தில் சிறாப்பர் குடும்பத்தில் 1924 இல் பிறந்த ஆலிப் சிறந்த வழக்கறிஞராகவும், நகர நாடு திட்டமிடல் துறையில் MSc பட்டம் பெற்றவரும் ஆவார். இலங்கை முஸ்லிம்களுக்கென வட்டியற்ற தனியான வங்கிச்சேவை முறைமை பற்றிச் சிந்தித்து அதன் கருப்பொருளில் முதன் முதலாக “அமானா” வங்கி உருவாக வழிசெய்தார். முதலாவது இஸ்லாமிய பெண்கள் சர்வதேச பாடசாலையான “இல்மா” வை உருவாக்குவதிலும் பெரும்பங்காற்றி அதனை அறக்கட்டளையாக (Trust) அமைத்தவரும் இவரே. அமைச்சரவைக்கான செயலாளராகவும், அமைச்சரவை விவகாரங்களுக்கான பணிப்பாளராகவும் பதவிவகித்த முதல் முஸ்லிம் இவரே.
(தகவல்: எம்.பீ.எம். ஜலீல் ஓய்வுபெற்ற இலங்கை வங்கி உதவிப்பொது முகாமையாளர், நன்றி: மஹ்ரூப் ஏ.காதர்)
ஹாஜி அப்துல் லதீப் ஆலிம் (சீனித்தம்பி ஆலிம் சாஹிப்)
இந்தியாவின் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் மத்ரஸாவில் மார்க்கக்கல்வி கற்றார். இவர் அரபு மொழியில் பல நூல்களை யாத்தார். அவர்களிடம் “றவ்ழாஷரீப்”- என்னும் அரிய அரபுக்கிரந்தம் இருந்தது. இவர் காலமான பின்பு யாழ் மீரானியாக் கல்லூரியில்பாதுகாக்கப்பட்டிருந்த இதனை நீதியரசர் அப்துல் காதர் சிதைவடையும்’ நிலையிலிருந்து பாதுகாப்பதற்காக அரபு மொழியில் பரிச்சயமுள்ள உலமா ஒருவரிடம் கையெழுத்துப்பிரதியாக எழுதுமாறு கொடுத்து பின்னர் பேருவளை ஜாமிஆ நளீமிய்யாவுக்குக் கொடுப்பதற்குத் தீர்மானித்திருந்தார். அவ் உலமா வபாத்தானதும் அப்பிரதி பற்றிய விபரம் எதுவும் கிடைக்காத நிலை ஏற்பட்டது.
(தகவல்: எம்.எஸ்.ஏ. காதர்)
இலங்கை வானொலி புகழ் எம்.ஐ.எம். மீரான் முஹியித்தீன் ஆலிம்
அக்காலத்தில் இலங்கை வானொலியில் மார்க்க உபந்நியாசம் செய்த ஒரு சில இலங்கை உலமாக்களில் இவரும் ஒருவர். வெலிகாமம் பாரி அரபுக்கலாசாலையில் தனது மார்க்கக் கல்வியைப்பெற்று 1915 இல் ஆலிமாக வெளியேறி, மார்க்கச்சட்டங்களில் சிறப்புத்தேர்ச்சி பெற இந்தியா வேலூர் ஜமாலியா அரபுக் கல்லூரியில் இணைந்து கற்று 1919 இல் தாயகம் திரும்பினார். முஸ்லிம் மக்களிடையே பிளவுகள்பிரிவினைகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் ஆலிம்சா அப்பா அவர்கள் ஆழ்ந்த அக்கறை செலுத்திச் செயற்பட்டார்.
இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் திருக்குர்ஆன் விரிவுரையாளராக 1950 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு வரை மார்க்கப்பணி புரிந்தார். 1976 இல் சமாதான நீதிவானாக நியமிக்கப்பட்ட இவர், யாழ் மாவட்ட சர்வ மத சம்மேளனத்தின்பிரதிநிதியாகவும் விளங்கினார்.
அக்காலப் பகுதியில் மார்க்கப் பணி புரிந்த தப்லீக் ஜமாஅத்தின் அமீராகவும்,யாழ் மாவட்ட உலமா சபைத் தலைவராகவும் விளங்கினார்.
(உசாத்துணை: யாழ் முஸ்லிம் வரலாற்றுப் பார்வை – JMRO வெளியீடு )
இலக்கிய கர்த்தாக்கள்
பதுர்தீன் புலவர்
தமிழ்மொழியை வளர்ப்பதில் தமிழ் மக்களோடு முஸ்லிம்களும்பெரும் பங்காற்றினர். தமிழுக்குப் புகழ் மணம் சேர்த்த முஸ்லிம் புலவர்களுள் யாழ்ப்பாணம் பதுர்தீன் புலவர் முதன்மையானவர் ஆவார். இஸ்லாமியர் இயற்றிய தமிழ் இலக்கியங்களுள் முதன்மையானது உமறுப் புலவர் தந்த சீறாப்புராணமாகும். அடுத்ததான இஸ்லாமியத் தமிழிலக்கியமாக தமிழ் நல்லறிஞர்கள், பதுர்தீன் புலவர் இயற்றிய “முஹியித்தீன் புராணத்தையே’ குறிப்பிடுகின்றனர்.
(உசாத்துணை: உலக இஸ்லாமிய தமிழிலக்கிய மாநாடு சிறப்பு மலர் 2002. நன்றி: யாழ்அஸீம்)
அசனாலெப்பை புலவர்
ஈழத்திலிருந்து அறபுத்தமிழ் இலக்கியம் வளர்த்த தலைசிறந்த தமிழ் புலவர் யாழ்ப்பாணம் தந்த அசனாலெப்பை புலவராவார். நவரத்தினத் திருப்புகழ், முஹியித்தீன் ஆண்டகை பேரில் ஆசிரிய விருத்தம், பதாயிருப்பதிற்றுத் திருக்கந்தாதி, சாஹுல்ஹமீது ஆண்டகை பேரில் முனாஜாத்து என்பன இடம்பெறும்“புகழ்ப்பாவணி” என்னும் தொகுப்பை வெளியிட்டார். அறபுத் தமிழிலக்கியம் படைத்தோர் யாவரும் அசனாலெப்பைப் புலவரின் சாற்றுக்கவியை தத்தம் நூலுக்கணியாகக் கொண்டார்கள். அரபியில். நபிகள் நாயகம் பெயரிலும், முஹியித்தீன் அப்துல் காதர் ஆண்டகை பேரிலும், ஐத்றூஸ் தங்கள் பேரிலும், காதிரிய்யா தரீக்கா பேரிலும் பைத்துக்கள் இயற்றினார்.
(நன்றி: அறிஞர் ஏ.எம்.ஏ. அஸீஸ் தினகரன்.12.1963)
அப்துல்லா லெப்பை புலவர்
இவர் யாழ்ப்பாணம் அசனாலெப்பை புலவர், காதி அபூபக்கர் ஆகியோரது மைத்துனர்ஆவார். நல்வழிக் கவிதைகள், நல்வழித் திருநபிக் கவிதைகள், திருநபிப் புகழ். கீதம், குத்பு நாயகம் பாமாலை, ஷாஹுல்ஹமீது நாயகம் பாமாலை, ஆகிய கவிதை நூல்களை எழுதினார். இவர் எழுதிய நோன்பின் மாண்பு, கர்பலா, ஹிஜ்ரத் என்னும்சிறுநூல்கள் வாலிபர் சங்கங்களால் வெளியிடப்பட்டன.
(நன்றி: எம்.எம். அப்துல் குத்தூஸ் – ஓய்வு பெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் நாயகம்)
சுபைர் இளங்கீரன்
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுபைர் இளங்கீரன் ஈழத்தின் நாவல் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராவார். 1950 – 1978 காலப்பகுதியில்“நீதியே நீ கேள்”, “பைத்தியக்காரி”, “அவளுக்கு ஒரு வேலை வேண்டும்”, ’இங்கிருந்து எங்கே”, நீதிபதி”, “தென்றலும் புயலும்” முதலான 25 நாவல்களை எழுதியுள்ளார். “கருகிய மொட்டு”. “தாலிக்கொடி” அடங்கலாக 5 சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டார். “இலங்கையின் இரு மொழிகள்”, “பேராசிரியர் கைலாசபதி நினைவுகளும் கருத்துக்களும்“ ஆகிய கட்டுரைத் தொகுதிகளையும் வெளியிட்டார். “மகாபாரதி”:, “தடயம்”, “பாலஸ்தினம்” ஆகிய நாடகங்கள் தொகுப்பையும் வெளியிட்டார். இலங்கை வானொலியில்“மனித புராணம்” என்னும் நாடகம் ஒரு வருடத்துக்கு மேலாக ஒலிபரப்பப்பட்டது. “வாழப் பிறந்தவர்கள்” என்னும் நாடகம் இரண்டரை வருடங்களுக்கு மேலாகத் தொடர்ந்து ஒலிபரப்பப்பட்டது.
(தகவல்: எம்.ஜீ.பஷீர் – முன்னாள் யாழ் உதவி மேயர்)
நன்றி – “யாழ். முஸ்லிம்களின் பூர்வீகமும் வாழ்வியலும்” வெளியீடு – (முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்) தேசிய மீலாதுன்நபி 2017 – யாழ்ப்பாணம்.-Vidivelli
- தொகுப்பு:
ஏ.எம். முஹம்மத் ஸப்வான்,
சீனன்கோட்டை, பேருவளை.