ஹஜ் கடமையை சாதாரண மக்களும் நிறைவேற்றும் வகையில் அதன் கட்டணங்களை ஒழுங்குபடுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ ஹஜ் குழுத்தலைவர் மர்ஜான் பளீல் தலைமையிலான குழுவினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவுக்கும் ஹஜ் குழுவினருக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை களுத்துறை லாயா ஹோட்டலில் இடம்பெற்றுள்ளது. இதன்போதே பிரதமர் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்ததாக ஹஜ் குழுவின் தலைவர் மர்ஜான் பளீல் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் விபரிக்கையில், எதிர்வரும் ஹஜ் கடமையை எந்தவித தடைகளுமின்றி மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ மற்றும் ஹஜ் குழுவின் அங்கத்தவர்களுக்குடையில் நேற்று இடம்பெற்றது. இதன்போது, ஹஜ் விவகாரம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் சவூதி அரசாங்கத்துடன் இணைந்து இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென பிரதமர் உறுதியாக தெரிவித்திருந்திருந்தார்.
ஹஜ் கடமையை சில முகவர்கள் வியாபாரமாக செய்து வருவதை தடுக்கும் வகையில் அரசாங்கம் புதிய முறையொன்றை இந்தமுறை கையாளவுள்ளது. சேவையாக மேற்கொள்ளவேண்டிய இக்கடமையை சிலர் இன்று வியாபாரமாக மாறியுள்ளதையும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
அத்துடன் கூடுதல் கட்டணங்களை அறவிட்டு மக்களை அசௌகரியத்துக்கு உள்ளாக்காமல், குறைந்த கட்டணத்தில் திருப்தியான சேவையை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்தார். மேலும் ஹஜ் கட்டணத்தை குறைத்து மக்களுக்கு சிறந்த சேவையொன்றை தனது அரசாங்கம் பெற்றுக்கொடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் தனது அதிகாரிகளுக்கு விசேட உத்தரவொன்றையும் பிறப்பித்துள்ளார்.
இதேவேளை, சவூதி அரேபியாவுக்கு நேற்று இரவு புறப்பட்டுச்சென்ற இலங்கை ஹஜ் குழுவினர், ஹஜ் விவகாரங்களுக்கு பொறுப்பான சவூதி அரேபிய அமைச்சர் உட்பட உயர் மட்ட அதிகாரிகளுடன் விசேட சந்திப்புகளையும் மேற்கொள்ளவுள்ளனர் என்றார்.-Vidivelli
- எம்.ஆர்.எம்.வஸீம்