புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ தலைமையிலான ஆட்சியில் மக்களுக்குப் பிரயோசனமளிக்கும் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்ற அதேநேரம், இந்த அராசங்கத்தின் மீதான நம்பிக்கையைக் கேள்விக்குட்படுத்துகின்ற நிகழ்வுகளும் தொடராக இடம்பெற்று வருதை அவதானிக்க முடிகிறது.
வரிகளுக்கு விலை குறைத்ததன் மூலம் அன்றாட பாவனைப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளமை வரவேற்புக்குரியதாகும். இருந்த போதிலும் இந்த விலை குறைப்பின் பலாபலன்கள் இன்னமும் மக்களைச் சென்றடையவில்லை என்ற குற்றச்சாட்டையும் ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளார். இதன் காரணமாகவே அவர் நேற்று முன்தினம் நாரஹேன்பிட்ட பொருளாதார மத்திய நிலையத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்டு அரிசி விலைகள் குறித்து ஆராய்ந்துள்ளார். அத்துடன் நிர்ணயிக்கப்பட்ட விலையிலும் பார்க்க அதிக விலையில் அரிசி விற்பனையில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி நேற்றைய தினம் பணிப்புரை விடுத்துள்ளார். அரசாங்க செலவினங்களைக் குறைக்கும் வகையில் அநாவசிய செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்களையும் ஜனாதிபதி வழங்கியுள்ளதுடன் தனது செயற்பாடுகளிலும் அவர் மிகுந்த எளிமையையே கடைப்பிடித்தும் வருகிறார்.
இவ்வாறான நல்ல திட்டங்கள் ஒருபுறமிருக்க, சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரியின் கடத்தல் விவகாரம், குற்றப் புலனாய்வுப் பிரிவின் உயரதிகாரிகளின் இடமாற்றங்கள், ஊடகங்கள் மீதான சில நடவடிக்கைகள், டாக்டர் ஷாபியின் விவகாரத்தை மீளவும் விசாரணைக்குட்படுத்துகின்றமை, முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் கைது போன்ற குறிப்பிடத்தக்க சில செயற்பாடுகள் அரசாங்கத்தின் மீது அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளன.
டாக்டர் ஷாபி விவகாரம் கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் முறையாக விசாரணைக்குட்படுத்தப்பட்டு அவர் நிரபராதி என நிரூபிக்கப்பட்ட விடயமாகும். பொது ஜன பெரமுன சார்பு வைத்தியர்களாலும் அரசியல்வாதிகளாலும் சில சிங்கள ஊடகங்களாலும் குறிப்பாக அதுரலியே ரதன தேரராலுமே இந்த விவகாரம் பூதாகரமாக்கப்பட்டிருந்தது. இருப்பினும் சி.ஐ.டி.யினர் டாக்டர் ஷாபியுடன் பணிபுரிந்த 69 தாதிகள், 26 வைத்தியர்கள், 14 சிற்றூழியர்கள் ஆகியோரிடமும் நூற்றுக் கணக்கான தாய்மாரிடமும் வாக்குமூலங்களைப் பதிவு செய்திருந்தனர். அவற்றை அடிப்படையாகக் கொண்டே குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முடியாத நிலையில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
டாக்டர் ஷாபி விவகாரம் பொது ஜன பெரமுனவிலுள்ள சில இனவாதிகளால் திட்டமிட்டு புனையப்பட்ட ஒன்று என்பதை அக் கட்சியின் முன்னணி செயற்பாட்டாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி, தேர்தல் காலத்தில் பகிரங்கமாகவே ஒப்புக் கொண்டிருந்தார். ஆனால் துரதிஷ்டவசமாக புதிய அராசங்கம் ஆட்சிக்கு வந்த பிற்பாடு இந்த விவகாரம் மீண்டும் பேசுபொருளாக்கப்பட்டு புதிதாக வாக்குமூலங்களைப் பெறவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கமைய புதிய சி.ஐ.டி. குழுவினர் கடந்த திங்கட்கிழமை குருநாகல் வைத்தியசாலைக்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பொதுத் தேர்தல் அண்மித்துள்ள நிலையில் மீண்டும் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்திரித்து பெளத்த மக்களின் வாக்குகளை சுவீகரிக்கும் திட்டத்தை சில அரசியல்வாதிகள் வெளிப்படையாகவே முன்னெடுக்க ஆரம்பித்துள்ளனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ச கூட கடந்த வாரம் ‘நாட்டில் இஸ்லாமிய பயங்கரவாதம் இருப்பதாக‘ தெரிவித்த கருத்தும் இதனடிப்படையிலேயே நோக்கப்பட வேண்டியதாகும். அதுபோன்றே ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழக விவகாரமும் ரதன தேரரால் தற்போது கிளறப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்க நெருங்க மேலும் முஸ்லிம்களை எதிரிகளாகச் சித்திரிக்கின்ற போலிக் கதைகள் பரப்பப்படும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
உண்மையில் புதிய அரசாங்கம் கடந்த தேர்தலில் தம்மை எதிர்த்து வாக்களித்த பெரும்பான்மையான முஸ்லிம்களின் மனதை வெல்வதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டுமே தவிர மீண்டும் மீண்டும் இனவாதப் பூச்சாண்டி காட்டி முஸ்லிம்களை ஓரம்கட்ட முயலக் கூடாது. அது ஒருபோதும் ஐக்கியப்பட்ட இலங்கையைக் கட்டியெழுப்ப உதவாது. இது விடயத்தில் பொது ஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பிரமுகர்கள் தலையிட்டு முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.-Vidivelli