ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் ஹொரவப்பொத்தான பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட 10 பேரில் 9 பேர் கடந்த வியாழக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கெப்பித்திக்கொல்லாவ நீதிவான் நீதிமன்றில் நேற்றைய தினம் இவர்கள் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே மேற்படி 9 பேரும்தலா 5 இலட்சம் ரூபா கொண்ட இரு சரீரப் பிணையிலும் 15 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் கைது செய்யப்பட்டிருந்த மெளலவி நியாஸ் என்பவருக்கு மாத்திரம் நேற்றைய தினம் பிணை வழங்கப்படவில்லை.
சந்தேக நபர்களுக்கு எதிராக ஐ.சி.சி.பி.ஆர். சட்டத்தின் கீழ் வழக்கை கொண்டு நடாத்த போதிய சான்றுகள் இல்லையென்றும் முதலாவது சந்தேக நபரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கும் படியும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நீதிவானை வேண்டினர். இதற்கமைய முதலாவது சந்தேக நபரைத் தவிர ஏனையோர் கடந்த வியாழக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
மேற்படி 9 பேரில் ஒருவர் கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதியும் இருவர் மே 16 ஆம் திகதியும் ஐவர் மே 24 ஆம் திகதியும் மற்றுமொருவர் ஜூன் 1 ஆம் திகதியும் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களுக்கு எதிராக அடிப்படைவாத மதக் கொள்கைகளைப் பரப்பியமை, பயங்கரவாதிகளுடன் தொடர்பிலிருந்தமை உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. இந் நிலையில் குறித்த சந்தேக நபர்கள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்திடமிருந்து கிடைக்கப் பெற்ற அறிக்கைக்கு அமையவே இவர்கள் கடந்த வியாழக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் சார்பில் சட்டத்தரணிகளான சாதிக்குல் அமீன், மொஹமட் சரூக், நுஷ்ரா சறூக், முபீன் மற்றும் திலிசா திசாநாயக ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
மேற்படி சந்தேக நபர்கள் தொடர்பில் பொய்க் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி சிங்கள ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் ‘விடிவெள்ளி‘ பத்திரிகை கடந்த காலங்களில் கள ஆய்வுகளை மேற்கொண்டு உண்மைத் தகவல்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli