குருநாகல் கிராமங்களில் வன்முறைகள்: நாமல் குமாரவுக்கு விளக்கமறியல்
ஹெட்டிபொல நீதிமன்றில் நேற்று ஆஜர் செய்யப்பட்டபோது உத்தரவு
வட மேல் மாகாணத்தில் குறிப்பாக குருணாகல் மாவட்டம், குளியாபிட்டி மற்றும் நிக்கவரட்டி பகுதிகளில் முஸ்லிம் கிராமங்களை இலக்குவைத்து திட்டமிட்ட குழுக்கள் முன்னெடுத்த தொடர் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளில் கைது செய்யப்பட்டு சுமார் 7 மாதங்களாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட ஊழலுக்கு எதிரான படையணியின் நடவடிக்கை பணிப்பாளர் என அறியப்படும் அத்தநாயக்க முதியன்சலாகே நாமல் குமார எதிர்வரும் 26 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் அவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதப் படுகொலைகள் குறித்த விசாரணைப் பிரிவினர் ஹெட்டிபொல நீதிவான் எஸ்.எப். மஹ்பி முன்னிலையில் ஆஜர் செய்த போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து வட மேல் மாகாணத்தில், குருணாகல், வாரியபொல, நிக்கவரட்டிய, குளியாபிட்டிய, சிலாபம், பிங்கிரிய, தும்மலசூரிய, நாத்தாண்டிய உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம்களை இலக்குவைத்த தாக்குதல்கள் பல நடாத்தப்பட்டன. அவை தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தின் சிறப்பு பொலிஸ் குழுவினருக்கு விசாரணை அதிகாரம் பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவால் வழங்கப்பட்டது.
இந் நிலையில் குறித்த பொலிஸ் குழுக்களை வழிநடாத்திய அப்போதைய கொழும்பு தெற்கு பொலிஸ் அத்தியட்சகரும் தற்போதைய கொழும்பு மத்தி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஷாந்த டி சொய்ஸாவின் ஆலோசனைக்கு அமைய கடந்த மே 14 ஆம் திகதி நாமல் குமார கைது செய்யப்பட்டிருந்தார்.
வரக்காபொலை பொலிஸ் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட அவர் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டு வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார்.
இதனையடுத்து வெளிப்படுத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளை தொடர்ந்து அவர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.
இந் நிலையிலேயே பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அவரிடம் சி.ஐ.டி. விஷேட விசாரணைகளை முன்னெடுத்தது. அவ்விசாரணைகளின் பின்னரே நேற்று அவர் ஹெட்டிபொல நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.-Vidivelli
- எம்.எப்.எம்.பஸீர்