கடத்திச் சென்று தடுத்து வைக்கப்பட்டு பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் இலங்கையின் சுவிட்சர்லாந்து தூதரகப் பெண் அதிகாரி விவகாரம் உள்நாட்டில் மாத்திரமல்ல சர்வதேசத்திலும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
சுவிட்சர்லாந்து தூதரகத்தின் விசாப் பிரிவின் சிரேஷ்ட குடிவரவு குடியகல்வு அதிகாரி கானியா பெனிஸ்ட பிரான்சிஸே இவ்வாறு கடத்தப்பட்டு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் திகதி நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டு சுவிட்சர்லாந்து தூதரகத்தின் இரண்டாம் நிலை அதிகாரி ராகுல் இன்பெச் மூலம் முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது என்றாலும் டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி வரை குறித்த பெண் அதிகாரி தொடர்பில் எந்தத் தகவல்களையும் பொலிஸாரினால் பெற்றுக்கொள்ள முடியாமல் இருந்தது. இந்தக் காலப்பகுதியில் அப்பெண் தனது குடும்பத்தாருடன் சுவிட்சர்லாந்து தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையிலே கடந்த 8 ஆம் திகதி நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அப்பெண் சி.ஐ.டி. க்கு வாக்குமூலமளிக்க வந்துள்ளார் என நேற்று முன்தினம் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்ற விசாரணைகளின்போது அரச சட்டவாதி ஜனக பண்டார மன்றுக்குத் தெளிவுபடுத்தினார்.
சம்பவம் தொடர்பில் சுவிட்சர்லாந்து தூதரக இரண்டாம் நிலை அதிகாரி பொலிஸுக்கு எழுத்து மூலம் வழங்கியிருந்த முறைப்பாட்டில் ஐந்து நபர்கள் தனது தூதரக அதிகாரியைக் கடத்தியதாகவும் பாடசாலை பெற்றோர் கூட்டத்துக்கு சென்றபோது வெள்ளை காரில் வந்தோராலே கடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் கடத்தியவர்கள் இரண்டு மணிநேரம் தடுத்து வைத்து பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தியதாகவும் இலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு தப்பிச்சென்ற சி.ஐ.டி. யின் முன்னாள் பரிசோதகர் நிஷாந்த சில்வா தொடர்பில் விசாரித்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
முறைப்பாட்டுக்கமைய குறித்த பாடசாலையைச் சுற்றியுள்ள 6 சி.சி.ரி.வி. கமராக்களை சி.ஐ.டி. யினர் சோதனை செய்தபோதும் அவ்வாறான சம்பவம் இடம்பெற்றதற்கான எந்தத் தகவலும் வெளியாகவில்லை. இதனையடுத்து சி.ஐ.டி. யினர் குறித்த பெண்ணின் தொலைபேசி இலக்கத்தைப் பகுப்பாய்வு செய்தபோது கடத்தலுக்கு உள்ளானதாகக் கூறப்பட்ட நேரத்தில் ஹுபர் வாடகைக் கார் ஒன்றினை அவர் பதிவு செய்துள்ளமை தெரியவந்தது.
அதன்படி அவர் பம்பலப்பிட்டி பெல்மயூரா தொடர்மாடி குடியிருப்புக்குச் செல்வது சி.சி.ரி.வி. கமராக்களில் பதிவாகியுள்ளது. இந்நிலையிலேயே அவர் கடந்த 8 ஆம் திகதி வாக்கு மூலமளிக்க சி.ஐ.டி. க்கு அழைக்கப்பட்டார்.
8 ஆம் திகதி முதல் தொடராக நாட்கள் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். சட்ட வைத்திய அதிகாரியிடமும் முன்னிலைப்படுத்தப்பட்டார். என்றாலும் பாலியல் துன்புறுத்தல்களுக்கான அடையாளங்கள் அவரது உடலில் கண்டறியப்படவில்லை. அவர் தனது வாக்குமூலத்தில் வெள்ளை கார் உட்பட அனைத்து தகவல்களும் பொய் என நீதிமன்றில் ஒப்புக்கொண்டுள்ளார். தானே அத்தகவல்களை தூதரகத்துக்கு வழங்கியதாகவும் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் பெண் அதிகாரி அரசாங்கத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியமை, பொய்யான தகவல்களை வழங்கியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு கொழும்பு நீதிவான் நீதிமன்றில் நேற்று ஆஜர் செய்யப்பட்டார். அவர் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறிப்பிட்ட தூதரக பெண் அதிகாரி ஏன் இவ்வாறு செயற்பட்டார்? இதன் பின்னணியென்ன? இச் சம்பவத்துடன் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டுள்ளனரா? எனும் விபரங்கள் முழுமையாக ஆராயப்படவேண்டும்.
இச் சம்பவம் தொடர்பான தகவல்கள் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டிருக்கின்றமைக்கு காரணம் என்ன? அப்பெண் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளாரா? என்பதற்கு விடை தேடவேண்டியது அரசினதும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரதும் பொறுப்பாகும். சந்தேக நபரான பெண் இரண்டாவது தடவையாகவும் நாளை 19 ஆம் திகதி அங்கொடை மனநல வைத்திய பிரிவுக்கு முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். இதற்கான உத்தரவு நீதிவானினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் முழுமையான அறிக்கையினை நாடும் சர்வதேசமும் எதிர்பார்த்திருக்கிறது.-Vidivelli