சுவர்களில் ஓவியம் வரையும்போது இஸ்லாமிய வரையறைகளை பேணுக
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அறிக்கை
வெற்றுச் சுவர்களை அலங்கரித்து சித்திரங்கள் வரையும்போது முஸ்லிம்கள் இஸ்லாமிய வரையறைகளைப் பேணி நடந்து கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த விடயம்தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு திட்டமிட்டு ஜம்இய்யாவின் கிளைகளும், மஸ்ஜித் நிருவாகமும், ஊர் தலைவர்களும் கரிசனை செலுத்துமாறும் ஜம்இய்யத்துல் உலமா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாறக் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாட்டின் ஜனாதிபதி உட்பட பலரின் பாராட்டுக்களுக்கு மத்தியில் நாட்டில் ஆங்காங்கே காணப்படும் வெற்றுச் சுவர்களை அலங்கரிக்கும் பணிகளை அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், சிவில் அமைப்புக்கள் உட்பட தனி நபர்களும் ஒன்றிணைந்து திட்டமிட்ட அடிப்படையில் சித்திரங்களை வரைந்து மெருகூட்டி வருவதை அவதானிக்க முடிகின்றது. இவ்வாறான செயற்றிட்டங்களை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வரவேற்கின்றது. இச்சித்திர வேலைப்பாடுகள் நாட்டின் அபிவிருத்தி, நன்னடத்தைக்கான வழிகாட்டல் போன்ற விடயங்களை உள்ளடக்கும் வண்ணம் அமைவதே இன்றைய தேவையாகும். நம் நாட்டு ஓவியர்களின் கலைத்திறன்களை வெளிப்படுத்துவதில் சகல இன மக்களும் விஷேடமாக, அனைத்து வாலிபர்களும் ஒத்துழைப்பதன் மூலம் நம் நாட்டில் ஒரு சுபீட்சமான எதிர்காலத்தை கண்டு கொள்ள முடியும் என்பது எமது எதிர்பார்ப்பாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.-Vidivelli