நாடெங்குமுள்ள வெற்றுச் சுவர்கள் மற்றும் மதில்களை அழகுபடுத்தி அவற்றில் சித்திரங்கள் வரையப்பட்டுவரும் நிலையில் சித்திரங்கள் வரைவதில் சில கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படவுள்ளன.
கொழும்பு – கண்டி வீதியோரத்தில் வேவல் தெனிய – ரதாவவடுன் னயில் அமைந்துள்ள பள்ளிவாசலுடன் இணைந்துள்ள சுவரில்கடந்த வாரம் உருவப்படங்கள் வரையப்பட்டமைக்கு முஸ்லிம்களால் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.
இச்சம்பவம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ பிரதமரும், கலாசார அமைச்சருமான மஹிந்த ராஜபக் ஷ மற்றும் பிரதிபொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இதனையடுத்தே சில தினங்களில் பொலிஸ் திணைக்களத்தினால் வெற்றுச் சுவர்களில் சித்திரம் வரைவது தொடர்பில் சுற்று நிருபமொன்று வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு – கண்டி வீதியில் அமைந்துள்ள ரதாவடுன்ன பள்ளிவாசல் சுவரில் உருவப்படங்கள் வரையப்பட்டுள்ளமை தொடர்பில் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின் முஸ்லிம் பிரிவின் தலைவர் மில்பர் கபூரைத் தொடர்பு கொண்டபோது அவர் வெளிநாட்டு விஜயத்தில் இருக்கின்ற நிலையில் அவரது ஊடகப்பிரிவு இது தொடர்பான தகவல்களை வழங்கியது.
ஸ்ரீலங்கா பொது ஜனபெரமுனவின் முஸ்லிம் பிரிவின் தலைவர் மில்பர் கபூரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலிசப்ரியும் இவ்விவகாரத்தை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொலிஸ்மா அதிபரின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளனர். பொலிஸ் மா அதிபர் இது தொடர்பில் சுற்று நிருபம் ஒன்றினை வெளியிடவுள்ளார்.
இதன் அடிப்படையில் பள்ளிவாசல்கள் உட்பட எந்த மதத்தலங்களுக்கும் சொந்தமான வெற்றுக் சுவர்களிலும் தனியாருக்குச் சொந்தமான வெற்றுச் சுவர்கள் மதில்களிலும் அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்டே சித்திரம் வரைய முடியும். மதத்தலங்களின் சுவர்களில் குறிப்பாக பள்ளிவாசல் சுவர்களில் உருவப்படங்கள் வரைவது தவிர்க்கப்பட வேண்டும் என்று சுற்று நிருபம் வெளியிடப்படவுள்ளது.
சித்திரங்கள், போதைப்பொருள் ஒழிப்பு, டெங்கு ஒழிப்பு மற்றும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைய வேண்டுமென ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன என ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பள்ளிவாசல் சுவர்களில் அனுமதி பெறப்படாது. சித்திரங்கள் வரைவதற்கு முயற்சிக்கப்பட்டால் அது தொடர்பில் பொலிஸுக்கு அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிவாசல் நிர்வாகங்கள் இந்த ஆலோசனையைப் பின்பற்றுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பில் கலாசார அமைச்சரும், பிரதமருமான மஹிந்த ராஜபக் ஷவின் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பான ஆலோசகர் நகீப் மெளலானாவை தொடர்பு கொண்டு வினவியபோது ரதாவடுன்ன பள்ளிவாசல் சுவரில் பள்ளிவாசலின் அனுமதி பெற்றுக்கொள்ளாது உருவப்படங்கள் வரைந்துள்ளமை தொடர்பில் பிரதி பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகத் தெரிவித்தார்.
இது தொடர்பில் கலாசார அமைச்சின் செயலாளரை நேரில் சந்திக்கவுள்ளதாகவும் கூறினார்.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ. பரீல்