மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவில் வைத்தியரும் தாதியர்களும் விட்ட தவறினால் ஒரு சிறுமியின் உயிர் பறிக்கப்பட்ட செய்தி அனைவரையும் கவலையடையச் செய்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் காங்கேயனோடை எனும் பிரதேசம் அமைந்துள்ளது. இந்த காங்கேயனோடை பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய உவைஸ் பாத்திமா ஜப்ரா எனும் சிறுமியே வைத்தியரும் தாதியர்களும் விட்ட தவறினால் உயிரிழந்தவராவார்.
காங்கேயனோடை பத்ர் ஜும்ஆப் பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த பாத்திமா ஜப்ரா காங்கேயனோடை அல் அக்ஸா மகா வித்தியாலயத்தில் கல்விகற்று வந்தார்.
10 ஆம் தரம் படித்து 11 ஆம் தரத்துக்கு சித்தியடைந்த ஜப்ரா மூன்றாம் தவணைப் பரீட்சையையும் எழுதி சிறந்த பெறுபேற்றையும் பெற்றிருந்தார். 2004 டிசம்பர் 26 சுனாமி அடித்து மூன்று நாட்களில் பாத்திமா பிறந்திருந்தார். ஜப்ராவின் குடும்பத்தில் நான்கு பிள்ளைகள். ஜப்ரா குடும்பத்தில் இரண்டாவது பிள்ளை. ஜப்ராவின் குடும்பம் மிகவும் வறுமையானது. தந்தை கூலிக்கு ஓர் உணவகமான்றில் உபசரிப்பாளராக தொழில் புரிகின்றார்.
கடந்த வருடம் மாணவி ஜப்ராவின் தாடையில் சிறிய கட்டியொன்று ஏற்பட்டு, அசௌகரியங்களை உண்டு பண்ணியதால் முதலில் காத்தான்குடி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக தாய் அழைத்துச்சென்றதும், குறித்த கட்டி வித்தியாசமானதென அறிந்து உடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர். எனினும் அங்கும் இக்கட்டியின் தன்மையை கண்டறிய முடியவில்லை. பின்னர் உடனடியாக மகரகம வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்து, அங்கிருந்து கிடைக்கப்பெற்ற அறிக்கையின் பிரகாரம் ஜப்ராவுக்கு ஏற்பட்டிருப்பது புற்றுநோய் கட்டியென்பதோடு, இரத்தப்புற்றுநோயும் ஏற்பட்டிருப்பதாக அடையாளம் கண்டுள்ளனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை புற்றுநோய் சிகிச்சைப் பிரிவில் கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு, ஆபத்தான நிலையை கடந்து வந்த மாணவி ஜபரா கடந்த ஜூலை மாதம் வைத்தியசாலையிலிருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கும் போது அவரிடம் வழங்கப்பட்ட நோய் நிர்ணய அறிக்கை கொப்பியில், ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க் கிழமைகளில் இங்கு கிளினிக் வந்து இதில் எழுதியுள்ள மருந்துகளை பெறுவதுடன் ஊசி மருந்தினையும் ஏற்றிச் செல்லவேண்டும் என்றும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.
அதன்படி வாரந்தோறும் தனது தாயுடன், பெரியப்பாவின் ஆட்டோவில் கிளினிக் சென்று மருந்துகளை எடுத்துக் கொள்வதும், ஊசி மருந்துகளை போட்டுக்கொள்வதுமாக இருந்தார்.
கடந்த 03.12.2019 அன்றும் வழமை போல் மாணவி கிளினிக் சென்றார். அங்கு மாதாந்தம் இம் மாணவிக்கு 2 மில்லி கிராம் ஊசி மருந்தே தொடர்ந்து வழங்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் அன்றைய தினம் வைத்தியர் 20 மில்லி கிராம் மருந்தை மாணவி ஜப்ராவுக்கு வழங்குமாறு மாணவியின் வைத்திய அறிக்கையில் எழுதியுள்ளார்.
எழுதப்பட்ட மருந்தை பெறுவதற்காக குறித்த அறிக்கை வைத்தியசாலையின் மருந்தகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. மருந்தகத்தில் பிரதான மருந்து வழங்குநர் இருக்கத்தக்கதாக பயிற்சி மருந்தகர்கள் ஜப்ராவுக்கான மருந்தை தயாரித்துள்ளனர். அறிக்கையில் எழுதப்பட்டிருந்தவாறே 20 மில்லி கிராம் மருந்து தயாரிக்கப்பட்டு மீண்டும் மருந்து விடுதிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த 20 மில்லி மருந்தை ஜப்ராவுக்கு ஏற்ற முற்பட்ட நேரத்தில் மருந்தின் நிறம் வித்தியாசமாக இருந்ததால் ஜப்ரா மருந்தை ஏற்ற முற்பட்ட தாதியைப் பார்த்து, ‘‘மிஸ் இது கூடிய மருந்தாக இருக்கின்றது போல…வழமையாக தரும் மருந்து போலில்லையே‘‘ என்று கேட்டுள்ளார்.
இதையடுத்து குறித்த தாதி உத்தியோகத்தர் பிரதான தாதியிடம் சென்று அந்தப் பிள்ளை இது அதிகரித்த மருந்து என்று கூறுகின்றது என்று கேட்க பிரதான தாதி உத்தியோகத்தர் வைத்தியர் எழுதிய வைத்திய அறிக்கையில் 20 மில்லி என எழுதப்பட்டுள்ளதால் அவ்வாறே ஏற்றுங்கள் எனக் கூற தாதியும் ஜப்ராவுக்கான மருந்தை ஏற்றியுள்ளார்.
அதன் பின்னர் வீடு திரும்பிய மாணவி ஜப்ராவுக்கு உடல் நிலை மோசமடைவது போல் தெரியவர, உடன் புற்றுநோய் வைத்தியசாலை பிரிவுக்கு தொலைபேசி எடுத்து விடயத்தை தெரிவித்ததும், நேரம்பிந்தாமல் அவசரமாக வைத்தியசாலைக்கு வாருங்கள் எனக் கூறியுள்ளனர். இதனையடுத்து அவர் உடனடியாகவே வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இம் மாணவியின் உடல் நிலையை அவதானித்த வைத்தியரும் தாதியர்களும் பதற்ற மடையவே பின்னர் அங்கு வந்த இந்தப் பிரிவுக்குப் பொறுப்பான புற்று நோய் பெண் வைத்திய நிபுணர் 20 மில்லி எழுதிய வைத்தியரை கடிந்து கொண்டதாகவும் தெரியவருகின்றது.
மாணவி ஜப்ராவின் நிலைமை மோசமடைய இரத்த சுத்திகரிப்புக்காக கண்டி வைத்தியசாலைக்கு 03.12.2019 அன்றே கொண்டு செல்லப்பட்டு அங்கு இரத்த மாற்று சிகிச்சை செய்யப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு 06.12.2019 அன்று கொண்டு வரப்பட்டு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிரைக் காப்பாற்ற போராடினாலும் மாணவி ஜப்ராவின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
இறைவனின் நாட்டப்படி மாணவி ஜப்ரா திங்கட்கிழமை 09.12.2019 மாலை உயிரிழந்தார். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)
தவறை ஒப்புக் கொண்ட வைத்தியசாலை
இதையடுத்து அவசரமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நிருவாகம் விசாரணைகளை ஆரம்பித்தது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிசார் தொடர்ந்து விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.
சிறுமியின் உயிரிழப்பு மருந்து ஏற்றப்படும் போது நடந்த தவறுகாரணமாக நடந்தது தான் என்பதை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நிருவாகம் வெளிப்படையாக ஏற்றுக் கொண்டது.
‘‘புற்று நோயால் பாதிக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த காங்கேயனோடைச் சேர்ந்த 14 வயதுடைய பாத்திமா ஜப்ரா என்ற சிறுமிக்கு கடந்த 3 ஆம் திகதி புற்று நோய் மருந்து ஏற்றப்படும் போது நடந்த தவறுகாரணமாக பக்க விளைவுகள் ஏற்பட்டு அதற்குரிய சிகிச்சை பலனின்றி 09.12.2019 திங்கட்கிழமை மாலை உயிரிழந்துள்ளார்‘‘ என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கே.கலாரஞ்சனி ஊடகங்களுக்கு பகிரங்கமாக தெரிவித்தார்.
இது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு அறிவித்துள்ளதுடன் நடந்த தவறு தொடர்பில் ஆராய்வதற்கு ஆரம்பகட்ட விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த மாணவியின் உயிரிழப்பு தொடர்பில் சட்ட வைத்திய அறிக்கை பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் இந்த சிறுமியின் பெற்றோர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்தனர்.
இந்த முறைப்பாட்டையடுத்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஐ.எம்.றிஸ்வானின் கவனத்திற்கு பொலிசார் கொண்டு சென்றனர். இதையடுத்து சலடத்தை பிரேத பரிசோதனை செய்யுமாறு நீதிபதி ஐ.எம்.றிஸ்வான் உத்தரவிட்டதுடன் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டார்.
பின்னர் சடலம் மட்டக்களப்பு சட்ட வைத்திய அதிகாரி திருமதி எச்.பி.டி.குணசேகரவினால் நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதுடன் சாட்சியங்களை திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.நசீர் நெறிப்படுத்தினார்.
இதையடுத்து சிறுமியின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு நேற்று முன்தினம் அஸர் தொழுகையின் பின்னர் காங்கேயனோடை பத்ர் ஜும்ஆப்பள்ளிவாசலில் ஜனாசா தொழுகை நடாத்தப்பட்டு அங்குள்ள மையவாடியில் பெருந்திரளான மக்கள் கண்ணீர் மல்க நல்லடக்கம் செய்யப்பட்டது.
அரசியல் பிரமுகர்கள், முக்கியஸ்தர்கள் என பெருந்திரளான மக்கள் இந்த சிறுமியின் ஜனாசா தொழுகையிலும் நல்லடக்கத்திலும் கலந்து கொண்டனர்.
பிரேத பரிசோதனையின் பின்னர் குறித்த சிறுமியின் இரத்த மாதிரியை இரசாயனப் பரிசோதனைக்குட்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிசார் தொடர்ந்து விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.
நீதிமன்றத்திலும் பொலிஸார் இது தொடர்பில் வழக்கொன்றை பதிவு செய்துள்ளனர்.
இதில் முதல் பிழை 20 மில்லி என எழுதிய வைத்தியரையே சாரும். இரண்டாவது பிழை மருந்தக மருந்து வழங்குநரை சாரும். மூன்றாவது பிழை பிரதான தாதியையும், நான்காவது பிழை மருந்தை ஏற்றிய தாதியையும் சாரும். வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் என்பவர்கள் உயிரைக்காப்பாற்ற போராடுகின்றவர்கள். அவர்களின் பணி மகத்தானது. ஆனால் இவ்வாறான சம்பவங்கள் மிகப் பெரும் கவலையை ஏற்படுத்தி நிற்கின்றது.
வைத்தியசாலை நிருவாகம் தவறுதலாக நடந்து விட்டது என்று பிள்ளையின் பெற்றோரிடத்தில் மன்னிப்புக் கோரி விட்டு இலேசாக நகர்ந்து சென்று விடலாம்.
ஆனால் பிள்ளையின் பெற்றோரினதும் குடும்பத்தினதும் கண்ணீரும் கவலையும் மிகப் பரிதாபமாக உள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையைப் பொறுத்தவரைக்கும் அண்மைக்காலமாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருவதுடன் இவ்வாறான ஒரு சில உயிரிழப்பு சம்பவங்களும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. நீதிமன்றம் வரை சென்றுள்ள சம்பவங்களும் இங்கு பதிவாகியுள்ளன.
ஜப்ரா கல்வியிலும் இணைப்பாட விதான செயற்பாடுகளிலும் சிறந்த திறமைகளை வெ ளிக்காட்டிய ஒருவர். இம்முறை 10 ஆம் தரத்தில் மூன்றாம் தவணைப் பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்து புதிய கல்வி ஆண்டில் 11 தரத்தில் கல்வியைத் தொடர ஆசையோடு காத்திருந்தார்.
ஆனால் அல்லாஹ்வின் நாட்டம் வேறு. அவன் ஜப்ராவை தன்பால் அழைத்துக் கொண்டான். எல்லாம் வல்ல அல்லாஹ் சிறுமி ஜப்ராவுக்கு ஜென்னத்துல் பிர்தெளஸை வழங்குவானாக.-Vidivelli
- எம்.எஸ்.எம்.நூர்தீன்