2020 ஆம் ஆண்டின் ஹஜ் ஏற்பாடுகள் மற்றும் கோட்டா தொடர்பான சவூதி ஹஜ் அமைச்சருடனான கலந்துரையாடலுக்கு இலங்கையிலிருந்து தூதுக் குழுவொன்றினை சவூதி அரேபியாவுக்கு அனுப்பி வைப்பதில்லை என கலாசார அமைச்சு தீர்மானித்திருக்கிறது.
ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பான சவூதி ஹஜ் அமைச்சருடனான கலந்துரையாடலில் பங்கு கொள்ளுமாறு சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அஸ்மிதாசிம் மற்றும் கொன்சியுலர் நாயகம் ஏ.டபிள்யூ.ஏ. சலாம் ஆகியோர் கலாசார அமைச்சினால் வேண்டப்பட்டுள்ளனர். அதற்கான கடிதங்கள் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
2020 ஹஜ் தொடர்பாக இலங்கைக்கு கோட்டா வழங்கல் மற்றும் ஏற்பாடுகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சமுகமளிக்குமாறு சவூதி ஹஜ் அமைச்சு ஏற்கனவே இலங்கைக்கு கடிதம் அனுப்பியிருந்தது. அதற்காக எதிர்வரும் 19 ஆம் திகதி ஒதுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைவாக இலங்கையிலிருந்து முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.மலிக், ஹஜ் முகவர் ஒருவர் மற்றும் கலாசார அமைச்சின் அதிகாரியொருவர் என மூவர் பயணிக்க இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே இலங்கையிலிருந்து தூதுக் குழுவொன்று சவூதி அரேபியாவுக்கு செல்லத் தேவையில்லை எனவும் அந்த பேச்சுவார்த்தையில் தூதுவரும், கொன்சியுலர் நாயகமும் கலந்து கொண்டால் போதுமானது என கலாசார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதுவரை காலம் ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பான பேச்சுவார்த்தையில் இலங்கை தூதுக் குழு கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு வருடமும் இலங்கையிலிருந்து 3 – 5 க்கும் இடைப்பட்டவர்களைக் கொண்ட குழுவொன்று பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு வந்துள்ளனர். இவர்களது விமான பயணச்சீட்டு மாத்திரமே அரசாங்கத்தினால் பெற்றுக் கொடுக்கப்படும். சவூதியில் குழு தங்கியிருக்கும் காலத்தில் தங்குமிட வசதி, உணவு, போக்குவரத்து என்பவற்றை சவூதி ஹஜ் அமைச்சே வழங்கும்.
சவூதியில் ஹஜ் அமைச்சருடனும் ஏனைய அதிகாரிகளுடனும் ஹஜ் கோட்டா, சவூதியில் ஹஜ் கடமையின் போது போக்குவரத்து வசதிகள், குர்பான் ஏற்பாடுகள், இலங்கை ஹாஜிகளுக்கான தங்குமிட வசதிகள், முஅல்லிம் ஏற்பாடுகள் என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட வேண்டியுள்ளது.
இந்நிலையில் இந்த விடயங்களில் சவூதியிலுள்ள இலங்கை தூதுவராலும் கொன்சியுலர் நாயகத்தினாலும் முழுமையான கவனத்தைச் செலுத்த முடியுமா என்று ஹஜ் முகவர்களால் வினவப்படுகிறது.
இதேவேளை அரச ஹஜ் குழு தனது பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில் இதுவரை ஹஜ் குழுவொன்று நியமிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்