2020 ஆம் ஆண்டில் ஹஜ் கடமையை மேற்கொள்வதற்கு இதுவரை சுமார் 2900 விண்ணப்பதாரிகளே தங்களது பயணத்தை 25 ஆயிரம் ரூபா மீள கையளிக்கப் படக்கூடிய பதிவுக் கட்டணத்தைச் செலுத்தி உறுதி செய்திருக்கிறார்கள் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திணைக்களம் சுமார் 4600 விண்ணப்பதாரிகளுக்கு தங்களது பயணத்தை உறுதி செய்யுமாறு கடிதங்களை அனுப்பிவைத்திருந்தது என்றாலும் 2900 பேரே தங்களது பயணத்தை உறுதி செய்துள்ளனர். எனவே 24 ஆயிரத்துக்கு மேற்பட்ட பதிவிலக்கங்களைக் கொண்ட சுமார் 1500 பேருக்கு திணைக்களம் பயணத்தை உறுதி செய்யுமாறு அடுத்தவாரம் கடிதங்களை அனுப்பி வைக்கவுள்ளது.
திணைக்களத்தின் மூலம் கடிதங்கள் கிடைக்கப்பெறும் ஹஜ் விண்ணப்பதாரிகள் இம்மாத இறுதிக்குள் தங்களது பயணத்தை மீள கையளிக்கப்படக்கூடிய பதிவுக் கட்டணம் 25 ஆயிரம் ரூபாவைச் செலுத்தி உறுதி செய்யுமாறு வேண்டப்படுகின்றனர் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக் தெரிவித்தார். 2020 ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரிகர்கள், கிடைக்கப்பெறும் ஹஜ் கோட்டாவுக்கு அமைவாக பயணத்தை உறுதி செய்துள்ள ஹஜ் விண்ணப்பதாரிகளின் பதிவிலக்க வரிசைப்படி தெரிவு செய்யப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்