சூழலுக்கேற்பத் தன்னளவில் மாறி/மாற்றிக்கொள்ளாத உயிரிகள் அழியும். இது இயற்கையின் தேர்வு – Nature’s Selection எனப்படுகிறது. இது ஒவ்வொரு தனிமனிதனுக்கு மட்டுமல்லாது சமூகங்களுக்கும் பொருந்தும்.
இன்று எரிபற்று நிலையிலுள்ள சிங்கள பெளத்த பேரினவாதம் தன்னளவில் தோல்வி மனப்பான்மை, பொறாமை, காழ்ப்புணர்ச்சி, ஒத்திசைய முடியாமை, சிறுபான்மை எனும் அச்சம், அதனூடாகக் கட்டியெழுப்பப்பட்டுள்ள பாரிய சந்தேகம் என்பவற்றால் மண்டை குழம்பிப் போயுள்ளது.
இந்நிலையில் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் அளவுக்கதிகமாக சிங்கள பெளத்த பேரினவாதம் குறித்து அச்சப்பட வேண்டியதில்லை. ஆனால் அவதானமாக இருக்க வேண்டும்.
பலவீனமானவன்தான் அதிகமாக அடுத்தவரைப் பயங்காட்டுவான். தன்னைப்பற்றி அடுத்தவரிடம் பயத்தை ஏற்படுத்துவதன் மூலமாகவே தன்னைக் காத்துக்கொள்ள முயற்சி எடுக்கிறான்..
இந்நாட்டில் சிங்கள பெளத்தர்கள் 70% மாக இருந்த போதிலும் உலகளாவிய ரீதியில் அவர்கள் மிக மிகச் சொற்பமானவர்களே என்பதும் சிங்கள மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட இன்னொரு நாடு உலகப் படத்தில் வேறெங்குமே இல்லையென்பதும், போதாக்குறைக்கு அவர்கள் மிகவுமே அஞ்சி நடுங்கும் தமிழ் மக்கள் உலகளாவிய ஒரு பெரும் சமூகமென்பதும் வெறும் 25 கிலோமீட்டர் தொலைவில் கடலுக்கப்பால் இலங்கையைச் சப்பித் துப்பிவிடக் கூடிய அளவில் பாரியதொரு தமிழ்ச் சமூகம் இருப்பதும் சிங்களவரின் உள்ளங்களில் எப்போதுமே தீராத ஒரு பேரச்சத்தை விதைத்துள்ளது.
அவர்களை, அவர்களது இந்த உள்ளார்ந்த மனநோய்களே காலப்போக்கில் பலவீனப்படுத்திவிடும். நாம் இயல்பாக இருப்போம். ஆனால் கொஞ்சம் விழிப்பாக செயற்படுவோம்.
சுதந்திரத்திற்கு முற்பட்ட காலம்வரை இலங்கையில் சமூகங்களிடையே சிறு சிறு முறுகல்கள், சிக்கல்கள் காணப்பட்ட போதிலும் அவை ஓரினத்தை இன்னோரினம் அடக்கியழிக்கும் அளவுக்கு வலுப் பெற்றிருக்கவில்லை. காரணம், எல்லா இனங்களுமே பொதுவாக ஏதோவொரு வெளிச்சக்தியின் ஆதிக்கத்துள் இருந்தமையாகும்.
சுதந்திரம் கிடைக்கும்வரை இந்நாட்டில் சிங்கள மொழிக்கோ பெளத்த கலாசாரத்துக்கோ முக்கியத்துவமோ செல்வாக்கோ இருக்கவில்லை. எனவே ஒப்பீட்டளவில் நாட்டுக்குள் அமைதியே நிலவியது.
ஆனால், சுதந்திரத்தைத் தொடர்ந்துதான் ஒவ்வோர் இனத்துக்கும் தனது இருப்பு, பாதுகாப்பு, தனித்துவம், எதிர்காலம் குறித்த சிந்தனையும் அச்சமும் எழத் தொடங்கின.
சுதந்திரத்திற்கு மிகக்கிட்டிய காலப்பகுதி வரையிலும் நிலவிய ஆங்கிலேயர் ஆட்சியில் ஏனைய இனங்களை விடவும் தமிழர்கள் நல்ல நிலையில் இருந்தனர்.
அவர்களுக்கிருந்த ஆங்கில மொழியறிவும் ஏனைய கல்வித்தேர்ச்சிகளும் அந்த நிலைக்கு ஏதுவாக இருந்தன. அரச பணிகளிலும் வர்த்தகத்திலும் சிங்களவரை விடவும் தமிழர்களும் ஓரளவு முஸ்லிம்களும் நல்ல நிலையில் இருந்தனர்.
இந்நிலைமை சிங்கள பெளத்தரின் உள்ளங்களில் அப்போதிருந்தே ஏனைய சமூகங்கள் மீதான வெறுப்புணர்வையும் பொறாமையையும் விதைத்திருந்தது.
முஸ்லிம்கள் இயல்பாகவே தங்கள் மார்க்க விடயத்தில் அதிக ஈடுபாடும் பிடிப்பும் கொண்டிருந்ததால் அக்காலத்தில் ஆங்கிலேயர் தொடங்கியிருந்த மிஷனரிப் பாடசாலைகளில் பெருமளவில் சேர்ந்து படிக்கத் துணியவில்லை.
அங்கு படிக்கச் சென்றோரில் கணிசமானோர் கத்தோலிக்க மதத்தைத் தழுவும் போக்கொன்று நிலவியதும் உண்மைதான். தமிழர்கள் மிகப் பெருமளவிலும் சிங்களவர்கள் கணிசமாகவும் ஆங்கிலேயரின் மிஷனரிப் பாடசாலைகளில் சேர்ந்து ஆங்கிலத்தில் கற்றுவந்த போதிலும் முஸ்லிம்கள் மிகச் சொற்பமானோரே இவ்வாறு மிஷனரிப் பாடசாலைகளில் சேர்ந்திருந்தனர். “ஆங்கிலம் கற்பது ஹறாமானது” எனும் மனப்போக்குக்கூட அக்காலத்தில் முஸ்லிம்களிடையே நிலவியுள்ளது. இவ்வாறு அக்காலப் பகுதியில் முஸ்லிம்கள் கல்வித்துறையில் விட்ட கவனக்குறைவின் விளைவை இன்றுவரைக்கும் முஸ்லிம் சமூகம் அனுபவித்து வருகிறது.
ஒவ்வொரு சமூகமும் அதனதன் தனித்துவம், வாழும் சூழலின் அடிப்படையிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, வட மாகாணத் தமிழர்களின் வாழிடம் மிகப்பெரும்பாலும் பசுமைகுறைந்த, வறண்ட நிலப் பகுதியாலானது. மழையும் செழுமையும் குறைவு. சிறு சிறு தோட்டங்களில் விவசாயத்தின் மூலமாகவே ஜீவனோபாயம் நடத்தியவர்கள்.
அவர்களுக்கிருந்த ஒரே தெரிவு கல்வியினூடாக வாழ்வை வளப்படுத்திக்கொள்வதே. எனவே, அவர்கள் தமது தனித்துவ அடையாளங்களை அதிகம் அலட்டிக் கொள்ளாமல் மிஷனரிகளில் இணைந்து ஆங்கிலமும் ஏனைய துறைகளையும் கற்றுத் தேறினர். இன்று வரைக்கும் மருத்துவம், பொறியியல், நிர்வாகம் உட்பட ஏனைய எல்லா அரச பணிகளிலும் அவர்கள் முன்னிலை வகிப்பதற்கு இந்தப் பின்னணியே காரணமாயிற்று.
ஆரிய தொடர்புகொண்ட, இந்தியாவிலிருந்து இலங்கை வந்த ஒருசில சிங்களக் குடும்பங்கள் தவிர்ந்த ஏனைய சிங்களவர்கள் பொதுவாக கூட்டம் கூட்டமாக உள்நாட்டுக்குள் நிலையாக வசித்து வந்தனர். அவர்கள் பெரும்பாலும் நெல் முதலிய விவசாயத்தையே பிரதான ஜீவனோபாயமாகக் கொண்டிருந்தனர். ஏனைய சமூகங்களோடு பெரிதாகத் தொடர்புகளைக் கொண்டிருக்கவில்லை. ஆங்கிலேய ஆளும் தரப்போடு தொடர்புகளைக் கொண்டிருந்த மிகச் சில சிங்களக் குடும்பங்களே சிங்கள சமூகத்தில் மேலாதிக்கம் கொண்டிருந்தன. பண்டாரநாயக்கா, விக்ரமசிங்க, ராஜபக் ஷ போன்ற குடும்பங்களின் அரசியல் ஆதிக்கம் இவ்வாறுதான் அன்றுமுதல் இன்றுவரை தொடர்ந்து வருகின்றன.
பொதுவாக சிங்களவரின் பெளதீக ரீதியான வளர்ச்சிக் குறைவுக்கு அவர்களது பெளத்த சமய சிந்தனைப் போக்கும் ஒரு காரணமாகும். “சர்வம் துக்க மயம்”, நிலையாமை, துறவு மனப்பான்மை என்பன இயல்பாகவே அவர்களது பெளதீக வாழ்வின் முன்னேற்றத்தின் தொய்வு நிலைக்கு வழிவகுத்தன.
அன்று முதல் இன்று வரை சிங்கள பெளத்த மேலாதிக்கக் குடும்பங்களுக்கு உண்மையிலேயே பெளத்த சமயத்தின் மீது பற்றோ ஈடுபாடோ இல்லை. அவர்கள் பெளத்த சமயத்தை வெறுமனே தமது அதிகாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஆயுதமாக மட்டுமே பயன்படுத்திக் கொண்டனர். அவர்கள் உள்ளபடிக்கு கத்தோலிக்க சிந்தனையையே உள்மனதில் ஆராதித்து வந்தனர்; வருகின்றனர்.
இந்நாட்டு முஸ்லிம்கள் முற்றுமுழுதாக அரபு நாடுகளிலிருந்தோ அல்லது வேறிடங்களிலிருந்தோ குடியேறியவர்கள் அல்லர். முஸ்லிம்கள் ஆரம்பகாலம் முதலே இந்த மண்ணின் மைந்தர்களே. அவர்கள் யவனர், யோனகர் என அடையாளப் படுத்தப்பட்டிருந்தனர். அவர்களது ஆரம்பகால மொழியாகத் தமிழே இருந்துள்ளது. காலப்போக்கில் உலகளாவிய ரீதியில் அரேபியரது கடல் பயணங்களின் தொடரில் அரேபியர் இலங்கையிலும் குடியேறி உள்ளனர்.
இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தோன்றி வளர்ந்த அரேபிய தீபகற்பம் பெரும்பாலும் பாலைவனமாகவே இருந்தது. விவசாயம், வேறு உற்பத்திகள் எதுவுமே பெருமளவில் இருக்கவில்லை. அவர்களது ஜீவனோபாயம் முழுக்க முழுக்க வியாபாரத்தோடு சம்பந்தப்பட்டது. அயல் பிரதேசங்களுக்கும் கடல் தாண்டியும் பயணித்து வியாபார நடவடிக்கைகளையே மேற்கொள்ள வேண்டிய தேவை அவர்களுக்கிருந்தன.
வர்த்தகமென்பது சில விஷேட குணாம்சங்களைக் கொண்டது. நல்லதொரு வர்த்தகர் பல மொழிகளில் தேர்ச்சி, நல்ல மக்கள் தொடர்பாடல், எப்போதும் விழிப்பு நிலையிலிருப்பது, நன்னடத்தை, நம்பிக்கை, நாணயம், வாய்மை, நேர்மை, கவர்ச்சியான தோற்றம், ஒரே இடத்தில் ஒடுங்கிக் கிடக்காமை, சதா பயணித்தல், இன மத மொழி பேதங்களுக்கு அப்பால் எல்லோருடனும் சகஜமான உறவுகளை வளர்த்துக் கொள்ளல் போன்ற பண்புகளைக் கொண்டிருத்தல் வேண்டும்.
இவ்வத்தனை பண்புகளும் அரேபியரிடையே நிறைந்து காணப்பட்டன. கடல் பயணங்களின் தேவை காரணமாக திசைகளை அறிந்துகொள்ளவும் காலநிலை மாற்றங்களைக் கணித்துக் கொள்ளவும் வானசாஸ்திரம், எண்கணிதம், மருத்துவம், பன்மொழிப் புலமை, நாடுகளின் ராஜாக்களுடனான தொடர்புகளைப் பேணுவதற்கான ராஜதந்திரம் எனப் பல்வேறு துறைகளில் அக்கால அரேபியர் உலகளவில் புகழ்பெற்றிருந்தனர்.
எல்லாமே பொய், உலக வாழ்வின் சுகங்கள், உல்லாசங்களிலிருந்து எவ்வளவு விடுபட்டு வாழமுடியுமோ அவ்வளவு விரைவாக மோட்சத்தை – பிறவாமைப் பேற்றை அடையமுடியும் எனும் வாழ்க்கை மீதான அவநம்பிக்கையை, வெறுப்பைப் போதிக்கும் பெளத்த சமயத்துக்கும் இஸ்லாமிய சிந்தனைக்கும் இடையில் மிகப்பாரிய வேறுபாடுகள் உள்ளன.
வணக்க வழிபாடுகளைப் போலவே இவ்வுலகை வளப்படுத்துவதையும் ஒரு வணக்கமாகவே இஸ்லாம் வலியுறுத்தி நிற்கிறது. மனிதனின் இயற்கையான எல்லா உணர்வுகளையும் ஏற்று, மதிப்பளிக்கும் இஸ்லாம் மனிதன் நியாயமான வழிகளில் வாழ்வின் சகல உல்லாசங்களையும் அனுபவித்து இன்புறுமாறு தூண்டி நிற்கிறது. நபிகளாருக்கு மிகவும் பிடித்தமான விடயங்களாகப் பெண் சுகம், நறுமணம் மற்றும் தொழுகை என்பன குறிப்பிடப்பட்டுள்ளன. ஓர் ஆன்மீகத் தலைவருக்குப் பிடித்தமான விடயங்களாகப் பெண் சுகமும் நறுமணமும் குறிப்பிடப்பட்டுள்ளமை கவனிக்கத்தக்கதாகும்.
உலகில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திய புகழ்பெற்ற நூறு மனிதர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய கத்தோலிக்கரும் வரலாற்று ஆய்வாளருமான மைக்கல் எச். ஹார்ட், தனது “The 100” நூலில் முஹம்மது நபி அவர்களுக்கு முதலாம் இடத்தைக் கொடுத்திருப்பதற்கு அவரே சொல்லியுள்ள காரணங்களுள் இதுவும் ஒன்றாகும்.
தனது சொத்துக்கள் சூறையாடப்படும்போது அவற்றைப் பாதுகாத்துக் கொள்வதற்கான முயற்சியில் ஒருவர் மரணத்தைத் தழுவுதலும் ஒரு புனிதப் போரிலான உயிர்துறப்புக்கு ஒப்பானதாக இஸ்லாம் கருதுகிறது. அநியாயமாகத் தாக்கப்பட்டால் அதற்குப் பழிக்குப்பழி வாங்குவதில் உங்களுக்கு வாழ்விருக்கிறது எனச் சொல்லி மனிதனைத் துணிச்சல் மிக்கவனாக மாற்றுகிறது இஸ்லாம். ஒரு முஸ்லிம் கோழையாக இருக்க முடியாது எனப் போதிக்கிறது இஸ்லாம். தொழுகையை நிறைவேற்றி முடித்ததும் பூமியில் பரந்து சென்று உங்கள் வாழ்வைத் தேடிக் கொள்ளுங்கள் என்கிறது இஸ்லாம்.
இத்தகைய உயிர்ப்புமிக்க பண்புகளைக் கொண்ட அரேபியரே இலங்கையிலும் சிறிது சிறிதாகக் குடியேறினர். அவர்கள் நாடுபிடிக்கும் நோக்கில் இங்கு வரவில்லை. இந்த நாட்டைக் கைப்பற்றி ஆட்சி செய்ய அவர்கள் வரவில்லை. அத்தகைய எந்தவிதமான முயற்சிகளையும் வரலாற்றில் ஒருபோதும் முஸ்லிம்கள் இந்த நாட்டில் முன்னெடுக்கவில்லை. கிறிஸ்தவ மிஷனரிகளைப் போல மதமாற்றம் செய்வது முஸ்லிம்களின் நோக்கமாக ஒருபோதுமே இருந்ததில்லை. “உங்களுக்கு உங்கள் மார்க்கம், எனக்கு எனது மார்க்கம்” என்பதே இஸ்லாத்தின் கோட்பாடாகும்.
எண்ணூறு ஆண்டுகள் இந்தியாவை முஸ்லிம்கள் ஆட்சி செய்திருந்த போதிலும் அந்த நாட்டில் இன்றும்கூட முஸ்லிம்களின் சதவீதம் வெறும் 20% மட்டுமே உள்ளது. ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி மதமாற்றம் செய்ய நினைத்திருந்தால் இன்று முஸ்லிம்கள் தான் இந்தியாவில் பெரும்பான்மையினராக இருந்திருக்க வேண்டும்.
ஆரம்பகால அரேபியர்கள் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களில்தான் குடியேறினர். ஏற்றுமதி இறக்குமதி வர்த்தக நடவடிக்கைகளின் தேவை காரணமாக அவர்கள் அவ்வாறு கரையோரப் பகுதிகளில் வசிக்கத் தொடங்கினர். இலங்கையின் கிழக்கு, மேற்கு, வடமேல், தென் மாகாணங்களில் முஸ்லிம்கள் செறிவாக வாழ்வதன் பின்னணி இதுதான்.
கரையோரப் பகுதிகளில் வாழ்ந்துவந்த அரேபிய முஸ்லிம்கள் தாம் வெளிநாடுகளிலிருந்து கொண்டுவந்திருந்த பொருட்களை உள்நாட்டுப் பிரதேசங்களில் விற்பனை செய்வதற்காகவும் உள்நாட்டுப் பிரதேசங்களில் கிடைத்த பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காகவும் முஸ்லிம்கள் தொடர்ந்து பயணங்களை மேற்கொண்டனர்.
முஸ்லிம்கள் தமது வாழ்வில் ஐவேளையும் தொழுகையைத் தவறாது நிறைவேற்றும் பழக்கம் கொண்டவர்கள். எனவே தமது பயணங்களின்போதும் இடையிடையே தரித்து நின்று தொழுகைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் தமது பண்டங்களை சுமந்துசெல்லும் குதிரை, கழுதைகளை மேய்ச்சல் செய்யவும் ஓய்வெடுக்கவும் சில இடங்களைத் தயார்செய்து கொண்டனர். இத்தகைய தேவைகளின் நிமித்தமாகவே நாடு முழுதும் பயணத் தடங்களும் பள்ளிவாசல்களும் சிறு சிறு குடியிருப்புகளும் ஏற்படலாயின.
சிங்களவரும் தமிழரும் நாட்டில் சிற்சில பகுதிகளில் மட்டும் செறிவாக வாழும்போது முஸ்லிம்கள் நாடு முழுதும் ஐதாகப் பரந்து வாழ்கின்றனர். எந்தப் பிரதான நகரத்திலும் முஸ்லிம்கள் வாழ்வதும் பள்ளிவாசல்கள் காணப்படுவதும் இதனாலேயாகும்.
புத்த கோயில்களும் இந்து, கத்தோலிக்க ஆலயங்களும் ஒப்பீட்டளவில் குறைவாகவும் குடியிருப்புப் பகுதிகளுக்கு வெளியில் அமைந்திருப்பதற்கும் முஸ்லிம்களின் வணக்கஸ்தலங்கள் பிரதான பாதை ஓரங்களிலும் நகரங்களின் மத்தியிலும் அமைந்திருப்பதற்கும் பின்னணி இதுதான்.
எந்தவொரு முஸ்லிமும் எங்காவது ஓரிடத்தில் வசிக்கத் தொடங்கியதும் அடுத்து அவர் செய்வது தனக்கான ஒரு வழிபாட்டிடத்தை அமைத்துக் கொள்வதாகும். தனது வீட்டைவிடவும் பள்ளிவாசல் சிறப்பாக அமைய வேண்டுமென ஒவ்வொரு முஸ்லிமும் உள்ளூர ஆசைப்படுவார். எனவேதான் முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் எப்போதுமே எடுப்பாகவும் அழகாகவும் கம்பீரமாகவும் தோற்றமளிக்கின்றன.
இன்று முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் மீது மாற்றுச் சமூகத்தார் ஒருவித வெறுப்பும் காழ்ப்புணர்வும் கொண்டிருப்பதற்குப் பள்ளிவாசல்களின் இத்தகைய மகோன்னதத் தோற்றங்களும் ஒரு காரணமாகும். ஆனால், இனியும் இவ்வாறு பள்ளிவாசல்களைப் படாடோபமாக நிர்மாணிப்பது குறித்து நாம் மீள்பரிசீலனை செய்ய வேண்டிய தேவை உருவாகியுள்ளது.
முஸ்லிம்கள் அடிப்படையில் வர்த்தக சமூகத்தார் என்பதனாலும் இந்நாட்டில் அவர்கள் எண்ணிக்கையில் குறைந்த சமூகத்தார் என்பதாலும் அவர்களிடையே பல சிறப்பியல்புகள் காணப்பட்டன.
எண்ணிக்கையில் குறைவானவர்கள் என்பதால் எப்போதுமே அடுத்த சமூகங்களுக்கு எவ்வகையிலும் இடையூறுகள் ஏற்பட்டுவிடாமல் கவனமாக நடந்துகொண்டனர்.
தமக்கு ஏதாயினும் அநீதிகள், இடையூறுகள் ஏற்பட்டாலும்கூட மிகுந்த பொறுமை, விட்டுக்கொடுப்பு, சகிப்புத்தன்மையோடு நடந்துகொண்டனர். ஏனைய சமூகங்களோடு எப்படியும் இசைந்தே வாழவேண்டுமென்பதாலும், அவர்களுடன் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தேவை இருந்ததாலும் அவர்களது சிங்கள, ஆங்கில, தமிழ் மொழிகளைக் கற்றுத் தேர்ச்சியுற்றனர். ஒப்பீட்டளவில் தமிழர், சிங்களவரை விடவும் முஸ்லிம்களின் மும்மொழி அறிவு இலங்கையில் சிறப்பாகக் காணப்படுவதன் பின்னணி இதுதான். தமது வர்த்தக நடவடிக்கைகளை விருத்தி செய்துகொள்வதற்காக முஸ்லிம்கள் பிற சமூகத்தாரோடு மிகுந்த மரியாதையோடும் கண்ணியத்தோடும் நடந்துகொண்டனர். பிற சமூகங்களின் உள்ளங்களை வெல்லக்கூடிய எல்லாவிதமான முயற்சிகளையும் அவர்கள் மேற்கொண்டனர். பிறருக்குத் தாராளமாக உதவினர்.
அரேபிய, சிவந்த, எடுப்பான அழகிய தோற்றத்திலும் ஒப்பீட்டளவில் உள்நாட்டு ஆண்களை விடவும் முஸ்லிம் ஆண்கள் இந்நாட்டுப் பெண்களின் உள்ளங்களை ஈர்த்தனர். வெளிநாட்டுப் பொருள்கள், நறுமணங்கள், புதுப்புது ஆடை அலங்காரங்கள், நவீன சாதனங்கள், பெண்களுக்கான ஆடை அணிகள், நகைகள், பட்டுப் புடவைகள், அனைத்துக்கும் மேலாக திடகாத்திரமான ஆண்மைத் தோற்றம் என மொத்தத்தில் அரேபிய வர்த்தக சமூகத்தார் இந்நாட்டுப் பெண்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டனர். இத்தகைய காரணிகளால் முஸ்லிம்களுக்கு இந்நாட்டில் சுதேசப் பெண்கள் வாழ்க்கைத் துணைவியர் ஆயினர்.
ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களோடும் அதிகாரிகளோடும் முஸ்லிம்கள் நல்ல தொடர்புகளை வளர்த்துக் கொண்டனர். மன்னர்களின் நம்பிக்கையைப் பெற்றுக் கொண்டனர். அரேபிய யூனானிய வைத்தியக் கலையிலும் போர் கலைகளிலும், பல மொழிகளிலும், நாடுகள் பற்றிய அறிவிலும், பல்வேறு சமையல் முறைகளிலும் தேர்ச்சியுற்றிருந்த அரேபிய முஸ்லிம்கள் மன்னர்களிடம் பெருமதிப்பைப் பெற்றுக் கொண்டனர். அமைச்சரவையிலும் வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் ராஜதந்திர உறவுகளிலும் மன்னனின் தனிப்பட்ட சமையல், மருத்துவம் மற்றும் பாதுகாப்புத் துறையிலும் முஸ்லிம்கள் முக்கிய இடங்களைப் பெற்றுக் கொண்டனர்.
முஸ்லிம்களின் சேவைகளைக் கெளரவித்து, மன்னர்கள் முஸ்லிம்களுக்குக் காணிகளை அன்பளிப்பு செய்து மதிப்போடு வாழச் செய்தனர். இவையெல்லாம் சேர்ந்து இதர சமூகத்தார் மத்தியில் முஸ்லிம்கள் மீது மெல்ல மெல்லப் பொறாமையையும் காழ்ப்புணர்வையும் வெறுப்பையும் உருவாக்கத் தொடங்கின.
வர்த்தக ரீதியாக ஓரளவு நல்ல நிலைக்கு வந்த முஸ்லிம்கள் படிப்படியாகத் தமக்கான பாடசாலைகள், மத்ரஸாக்களை அமைத்துக் கல்வித் துறையிலும் ஈடுபாடு காட்டத் தொடங்கினர். அடிப்படையிலேயே முஸ்லிம்கள் தமது மத நம்பிக்கைகள் தொடர்பில் மிகுந்த பிடிப்போடு இருந்ததன் பின்னணியில் முஸ்லிம்கள் தமது பெண்களின் கல்வித் துறையில் ஆரம்ப கட்டத்தில் போதிய அக்கறை காட்டவில்லை. அதன் விளைவை இன்றுவரை நமது சமூகம் அனுபவிக்கிறது. ஆயினும் அண்மைக்காலமாக முஸ்லிம் பெண்கள் கல்வித்துறையில் பிரகாசிக்கத் தொடங்கியுள்ளனர்.
வளர்ச்சி, முன்னேற்றம், நாகரிகம் எனும் பெயர்களில் சிங்கள, தமிழ்ச் சமூகங்கள் தமது பாரம்பரிய சமய, கலாசாரத் தனித்துவங்களிலிருந்து படிப்படியாக விடுபட்டுக் கரைந்தும் கலந்தும் போயிருந்தாலும் முஸ்லிம்கள் அவ்வாறான வேகமான கலாசார மாற்றங்களை உள்வாங்கிக் கொள்ளவில்லை.
இந்நாட்டுச் சிங்களவரும் தமிழரும் தத்தமது பெளத்த, இந்து, சைவ சமய – கலாசாரப் பின்னணிகளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டு, ஆங்கிலேயக் கல்வி விதைத்துச் சென்றுள்ள கத்தோலிக்க மத – மேலைத்தேயக் கலாசாரத்தின் தாக்கத்துக்குள்ளாகி விட்டுள்ளனர். ஆனால் முஸ்லிம்கள் இத்தகைய தாக்கங்களுக்குப் பெரியளவில் உள்ளாகவில்லை. இன்றுவரை முஸ்லிம்களின் கலாசாரக் கூறுகளும் அடையாளங்களும் தெளிவாக வெளிப்படுவதையும் அவை மாற்றுச் சமூகத்தாரின் கண்களை உறுத்துவதையும் நாம் காண்கிறோம்.-Vidivelli
- அஜாஸ் முஹம்மத்