தேசிய கட்சிகளில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும்
பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவிப்பு
தேசியக் கட்சிகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவை என்பதை ஜனாதிபதித் தேர்தலும், அதற்குப் பிந்திய சம்பவங்களும் உணர்த்தியுள்ளன என்று திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.அத்துடன், மக்கள் கேட்கும் மாற்றங்களுக்கு ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை திருகோணமலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
தேசியக் கட்சிகளில் சிறுபான்மை பிரதிநிதிகள் அங்கம் வகிக்க வேண்டும் என்பதை நடைபெற்றுமுடிந்த ஜனாதிபதி தேர்தல் எமக்கு உணர்த்தியுள்ளது. அத்துடன், அதற்குப் பிந்திய சில சம்பவங்களும் இதனை தெட்டத்தெளிவாக எமக்கு காட்டி நிற்கிறது.
ஐக்கிய தேசியக் கட்சியாக இருக்கட்டும், சுதந்திரக் கட்சியாக இருக்கட்டும் அல்லது மக்கள் விடுதலை முன்னணியாகக்கூட இருக்கட்டும் ஏதாவதொரு தேசியக் கட்சியில் இணைந்திருப்பதன் மூலம் நமக்கு விமோசனம் இருக்கிறது. நாம் தனித்துச் செல்வதன் மூலம் பல்லின சமூகத்திலிருந்து பிரித்து தனித்து விடப்படுகின்றோம். இதனால் நமக்குப் பெரும் ஆபத்துகள் வந்திருக்கின்றன. இனிவரும் காலங்களில் அது தீவிரமாகலாம், எனவே, இதன்பிறகாவது தனிப்பாதையில் செல்லாது எல்லோருடனும் கலந்து எமது தனித்துவத்தை காத்தவர்களாக அரசியல் பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.-Vidivelli
- முள்ளிப்பொத்தானை நிருபர்