ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை கடந்த வாரம் நியமிக்கப்பட்டது. 16 பேரைக் கொண்ட இந்த அமைச்சரவையில் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் சிறுபான்மையினர் சார்பில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.
இதற்கு மேலதிகமாக 35 இராஜாங்க அமைச்சர்களும் மூன்று பிரதி அமைச்சர்களும் கடந்த புதன்கிழமை (27) நியமிக்கப்பட்டனர். எனினும், இந்தப் புதிய அமைச்சர், இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் நியமனத்தில் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த எவரும் உள்ளடக்கப்படவில்லை.
கடந்த நவம்பர் 16ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடைந்த கோத்தாபய ராஜபக் ஷவிற்கு சிறுபான்மை சமூகங்களான தமிழ் மற்றும் முஸ்லிம்கள் வாக்காளிக்காத நிலையில், அவர்களை அரவணைத்தே தனது ஆட்சி அமையுமென புதிய ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவமின்றி அமைக்கப்பட்ட முதலாவது அமைச்சரவை இதுவென அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் இந்த விடயம் இன்று பேசு பொருளாக மாறியுள்ளது.
எனினும், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பாலான முஸ்லிம்கள் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவாக வாக்களித்த நிலையில் எவ்வாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ தலைமையிலான அரசாங்கத்தில் பதவிகளை எதிர்பார்க்க முடியும் எனவும் மற்றுமொரு தரப்பினர் கேள்வி எழுப்புகின்றனர்.
நாட்டின் முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ளும் ஒரு சபையே அமைச்சரவையாகும். பாரம்பரியமாக வாரத்தில் ஒரு தடவை ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை கூட்டங்கள் இடம்பெறுவது வழமையாகும். தேவையேற்படின் விசேட அமைச்சரவை கூட்டங்கள் ஜனாதிபதியினால் கூட்ட முடியும்.
நாட்டில் புதிய சட்டங்கள் எதையும் அறிமுகப்படுத்துவதென்றால் அமைச்சரவையின் தீர்மானத்தின் பிற்பாடே அந்த சட்டமூலங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியும். இவ்வாறு முக்கியத்துவமிக்க இந்த அதியுயர் சபையில் முஸ்லிம் பிரதிநித்துவம் இல்லாமல் இருப்பது இலங்கை வாழ் முஸ்லிம்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
முஸ்லிம்கள் பெருவாரியாக சஜித் பிரேமதாசவை ஆதரித்துள்ளமை தொகுதி அடிப்படையிலான தேர்தல் முடிவிலிருந்து ஊகித்துக்கொள்ள முடியும். எனினும், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிறு பகுதியினர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவிற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனாலேயே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பேருவளை, ஹாரிஸ்பத்துவ (அக்குறணை) மற்றும் வெலிகம ஆகிய தேர்தல் தொகுதிகளில் கோத்தாபய ராஜபக் ஷ வெற்றி பெற்றார்.
இதற்கு மேலதிகமாக அக்கரைப்பற்று மற்றும் சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் கோத்தாபய ராஜபக் ஷவின் வெற்றிக்காக உழைத்தமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக் ஷவிற்கு ஆதரவளித்தது. இதற்கிணங்க அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான பைசர் முஸ்தபா மற்றும் காதர் மஸ்தான் ஆகியோர் கோத்தாபய ராஜபக் ஷவிற்கு ஆதரவாக பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதனால் அமைச்சர்கள் நியமனத்தின்போது இவர்கள் இருவருக்கும் பதவிகள் வழங்கப்படலாமென எதிர்பார்க்கப்பட்ட போதும் அது இடம்பெறவில்லை. இது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினரான காதர் மஸ்தான் பிபிசி தமிழிற்கு கருத்து தெரிவிக்கையில்,
“முஸ்லிம் ஒருவருக்கு அமைச்சுப் பதவியொன்றும் வழங்கப்படவில்லை என்பதை முஸ்லிம் சமூகமும், முஸ்லிம் நாடுகளும் பார்த்துக் கொண்டிருக்கின்றன. அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர் ஆகிய பதவிகளில் முஸ்லிம் ஒருவர் கட்டாயம் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.
இருந்தபோதும் அனுபவத்தில் மூத்தவர்கள் என்ற அடிப்படையில்தான் அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. நானும் இந்த தடவைதான் பாராளுமன்றத்துக்கு தெரிவானவர். ஆளுந்தரப்பில் என்னை விடவும் பல மூத்தவர்கள் உள்ளனர். அதனால், ஆளுந் தரப்பில் முஸ்லிம்கள் இடம்பெறாமல் போயிருக்கக் கூடும்” என்றார்.
எனினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபாவுக்கு இந்த அமைச்சரவையில் முக்கிய பதவி வழங்கப்பட்டிருக்க வேண்டுமென முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருதரப்பினர் சமூக ஊடகங்களில் குரல்கொடுத்து வருகின்றனர்.
“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த பைஸர் முஸ்தபா ஏற்கனவே அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இருந்தவர். எனவே, அவரை அமைச்சரவையில் இந்த அரசாங்கம் இணைத்திருக்கலாம். ஆனால், இதனையெல்லாம் செய்யாமல் முஸ்லிம்களை இந்த ஆட்சியாளர்கள் பழிவாங்கியுள்ளதாகவே தெரிகிறது” என பாராளுமன்ற உறுப்பினரான பைசால் காசீம் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
இதேவளை, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவி வழங்கப்படாததால், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர் பதவிகள் தனக்கு வேண்டாமென பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா ஏற்கெனவே கூறியிருந்தார் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான காதர் மஸ்தான் சர்வதேச ஊடகமொன்றுக்கு குறிப்பிட்டிருக்கிறார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக அரசியலில் நுழைந்த பைசர் முஸ்தபா, ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக 2004ஆம் ஆண்டு கண்டி மாவட்டத்திலிருந்து பாராளுமன்றம் நுழைந்தார். எனினும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸிலிருந்து பிரிந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையைப் பெற்ற இவருக்குப் பிரதி அமைச்சர் பதவிகளும் வழங்கப்பட்டன.
2010ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் கண்டி மாவட்ட முஸ்லிம் மக்களின் வாக்குகளின் ஊடாகத் தெரிவான இவர், 2013ஆம் ஆண்டு காலப் பகுதியில் குறித்த மாவட்ட மக்களை கைவிட்டுவிட்டு தனது அரசியலை மத்திய கொழும்பில் ஆரம்பித்தார். குறித்த தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவாக செயற்பட்டமையினால் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.
தெல்தோட்டைக்கு தனியான பிரதேச சபை வழங்கப்பட வேண்டுமென இவர் கண்டி மாவட்ட எம்.பி.யாக இருக்கும்போது பாராளுமன்றத்தில் குரல் எழுப்பியிருந்தார். சாய்ந்தமருதுக்கு தனியான நகரசபை வழங்குவேன் என அங்கு இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் பகிரங்கமாக உறுதிமொழி வழங்கியிருந்தார். எனினும் இவர் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சராக செயற்பட்ட காலப் பகுதியில் குறித்த கோரிக்கைகளை அவர் நிறைவேற்றத் தவறிவிட்டார் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து நீடிக்கிறது.
உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சராக பைஸர் முஸ்தபா செயற்பட்ட போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சில சட்டமூலங்கள் தோற்கடிக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்க விடயமே. இது தவிர ஜனாதிபதி தேர்தல் அறிவித்ததன் பின்னர் ஒரு அழுத்தமான சூழலில் முஸ்லிம் தனியார் சட்டத்தை உடன் நிறைவேற்றவேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன்வைத்திருந்தார்.
கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அமைச்சரவையில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான சட்டங்கள் முன்வைக்கப்பட்டபோது முன்னாள் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், கபீர் ஹாசிம் மற்றும் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் போராடி முஸ்லிம் சமூகத்திற்குப் பல நன்மைகளை பெற்றுக்கொடுத்தமையை இங்கு ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது.
அதுபோன்ற முஸ்லிம் தலைவர்களே அமைச்சரவையில் அங்கம் வகிப்பது காலத்தின் தேவையாகும். இதேவேளை, அமைச்சர் பதவிகளுக்கு முஸ்லிம் ஒருவரையேனும் இந்த ஆட்சியாளர்கள் நியமிக்காமல் விட்டதன் மூலம், முஸ்லிம் சமூகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது” என முன்னாள் இராஜாங்க அமைச்சரான பைசல் காசிம் தெரிவித்தார்.
இதேவேளை, “அமைச்சரவையில் தமிழர்கள் இருவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ள நிலையில், முஸ்லிம் சமூகத்திலிருந்து ஒருவரேனும் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். கடந்த ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம்கள் இரண்டு தரப்பாகப் பிரிந்து வேட்பாளர்களுக்கு வாக்களித்திருந்தனர். ஆனால், அந்த இரண்டு தரப்புக்களும் பௌத்த சமயத்தைச் சேர்ந்த வேட்பாளர்களுக்குத்தான் வாக்களித்திருந்தனர். சஜித் பிரேமதாசவுக்கு நாங்கள் ஏன் வாக்களித்தோம் என்பதும், மற்றைய முஸ்லிம் தரப்பு கோத்தாபய ராஜபக் ஷவுக்கு ஏன் வாக்களித்தனர் என்பதும் அவரவரின் விருப்பமாகும். அதற்காக முஸ்லிம் சமூகத்தை ஆட்சியாளர்கள் பழிவாங்கக் கூடாது என்றும் பைசல் காசிம் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
மஹிந்த ராஜபக் ஷவின் முன்னைய ஆட்சியில் நடந்த சம்பவங்கள் முஸ்லிம்களுக்கு கசப்பை ஏற்படுத்திருந்தன. அதனால்தான் நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்களில் பெரும்பாலானோர் கோத்தாவுக்கு எதிராக வாக்களித்திருந்தனர். ஆனாலும் முஸ்லிம்களின் மனதிலுள்ள கசப்பை நீக்குவதற்கான சந்தர்ப்பம் இப்போது ராஜபக் ஷாக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
அதனை அவர்கள் செய்து, முஸ்லிம்களின் ஆதரவை வென்றெடுக்க வேண்டும்.ஆனால், இவ்வாறு முஸ்லிம்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்காமல் புறக்கணித்தால், அந்த சமூகத்தின் மனதில் ஏற்பட்டுள்ள கசப்பு மேலும் அதிகரிக்கவே செய்யும் என்பதே நிதர்சனமாகும்.
ராஜபக் ஷ குடும்பத்தினர் தொடர்பில் முஸ்லிம்களின் மனதிலுள்ள கசப்பை நீக்குவதற் கான நடவடிக்கைகளை அரசாங்கம் உனடியாக மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம் இலகுவில் பாரிய நன்மதிப்பை பெறமுடியும்.
குறிப்பாக விரைவில் நடைபெறுமென எதிர்பார்க்கப் படும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் மாகாண சபை தேர்தல் ஆகியவற்றில் முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளை பெற வேண்டிய தேவையொன்று பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன விற்குள்ளது.
இது தொடர்பிலான நடவடிக்கை யினை குறித்த கட்சியினால் முன்னெடுக்கப்பட வேண்டும். இதேவேளை, அமைச்சர் பதவி கள் வழங்கப்படவில்லை. என தெரிவித்து முஸ்லிம்கள் புதிய அரசாங்கத்தின் மீது அதிருப்தியடையத் தேவை யில்லை. பதவிகளின்றியும் பல்வேறு விடயங்களை சாதிக்க முடியும். இதனால் முஸ்லிம் சமூகம் ஒதுங்கியிருக்காமல், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ தலைமையிலான அரசாங்கத்துடன் எதிர்காலத்தில் எவ்வாறு இணைந்து செயற்படுவது என்பது தொடர்பில் கவனம் செலுத்துவது முஸ்லிம் சமூகத்தின் கட்டாயத் தேவையாகவுள்ளது.-Vidivelli
- றிப்தி அலி