நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தெற்கின் சிங்கள பௌத்தர்களில் பெரும்பான்மையானவர்கள் கோத்தாபய ராஜபக் ஷவிற்கு வாக்களித்திருந்த அதே நேரம் வடக்கின் தமிழர்களும் கிழக்கின் முஸ்லிம்களும் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்திருந்தனர். இலங்கையில் மூன்று இனங்களும் இனம், மதம் என்ற அடிப்படையில் பிரிந்து குழுக்களாகச் செயற்பட்டிருக்கின்றனர் என்பதனை மேற்படி தேர்தல் முடிவுகளின் மூலமாக அறிந்துகொள்ளமுடிகின்றது.
குறித்த போட்டியில் தமிழ் மற்றும் முஸ்லிம் இனத்தவர்களைத் தோற்கடித்து தமது அரசியல் ரீதியிலான வெற்றியினை சிங்கள பௌத்த மக்கள் அடைந்துகொண்டனர். இதனை வேறு விதமாகக் கூறுவதானால், தமிழ், முஸ்லிம்கள் சிங்கள பௌத்தரான சஜித் பிரேமதாசவை வெற்றியடையச் செய்வதற்காக முயற்சித்ததுடன் சிங்கள பௌத்தர்கள் அந்த முயற்சியைச் தோல்வியடையச் செய்து இன்னுமொரு பௌத்தரான கோத்தாபய ராஜபக் ஷவை வெற்றியடையச் செய்திருக்கின்றனர் என்பதாகவும் குறிப்பிடலாம். இந்த ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள் ஊடாக இலங்கையின் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுடைய அரசியலின் போக்கினை தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகின்றது.
தமிழ் முஸ்லிம்கள் மத்தியில் தமது எதிர்காலம் குறித்த அச்ச நிலை காணப்பட்டது என்பது யாவரும் அறிந்த விடயமாகும். அத்துடன் சிங்கள பௌத்தர்கள் மத்தியிலும் தமது இனம், மதம் என்பவற்றின் இருப்பினை அடிப்படையாகக்கொண்ட அச்ச நிலைமை இருந்திருக்கின்றது என்பது இந்தத் தேர்தல் முடிவுகள் ஊடாகக் கண்டுகொள்ள முடிகின்றது.
தமிழர், முஸ்லிம்கள் மத்தியிலிருந்த அச்ச உணர்வு என்பது ஏற்றுக்கொள்ள முடியுமான விடயமான போதிலும் சிங்கள பௌத்தர்கள் தமக்குள் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற பயம் என்பது எந்தவகையிலும் நியாயம் கற்பிக்க முடியாத ஒன்றாகக் குறிப்பிடவேண்டும். தேர்தல் நடைபெறும் காலப்பகுதியாகும்போது புலிப்பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு பத்து வருடங்கள் கடந்துவிட்டன. அத்துடன் புலிகள் மீண்டும் தலைதூக்கலாம் என்பதாக கதைகள் கூறப்பட்ட போதிலும் அவைகள் உண்மையானதாகக் கருத முடிவதில்லை.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்பது எந்த விதமான பாகுபாடுகளுமின்றி நாட்டின் அனைத்து மக்களையும் பாதிப்புக்கு உள்ளாவதற்குக் காரணமாக அமைந்த போதிலும் குறித்த செயற்பாடுகள் அனைத்துமே அடியோடு முற்றுமுழுதாகவே முறியடிக்கப்பட்டன. அத்துடன் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக் கூடிய எந்த விதமான செயற்பாடுகளும் இடம்பெறவில்லை. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட அனைத்து அபேட்சகர்களுக்கும் வடக்கு –கிழக்கு உட்பட நாட்டின் எந்தப் பகுதிக்கும் சென்று மரண பயமின்றி தமது தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடக்கூடிய நிலை காணப்பட்டது. புதிய ஜனாதிபதி பதவியைப் பெறுப்பேற்றதும் தனது பயணங்களின்போது பாதைகளை மூடுவதில்லை எனவும் இரண்டே பாதுகாப்பு வாகனங்கள் மாத்திரமே தனது பயணங்களுக்காகப் பயன்படுத்தப்படும் என்ற அடிப்படையில் தனது கொள்கைகளை அமைத்துக்கொண்டதானது நாட்டின் பாதுகாப்பு சிறந்த நிலையில் இருக்கின்றது என்பதற்கான எடுத்துக்காட்டாகும் என்பதுடன். நாடு பாதுகாப்பான நிலையில் இருக்கின்றது என்பதனை ஜனாதிபதி மிகவும் தெளிவாகவே அறிந்திருந்த காரணத்தினாலேயே அவ்வாறான முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
குழுக்களாக செயற்படல்
ஜனநாயக அரசியலமைப்பொன்றில் எந்த ஒரு சமூகக் குழுவினரும் நாட்டு மக்களின் நலன்களை நோக்காகக் கொண்டு கூட்டாகத் தேர்தல் நடவடிக்கைகளில் செயற்படுவதற்கான சுதந்திரம் காணப்படுகின்றது. இந்த ஜனாதிபதித் தேர்தலின்போது வடக்கின் தமிழர்கள் நாட்டைப் பிரித்தாளும் செயற்பாடுகளை மேற்கொள்கின்ற தமிழர் ஒருவருக்கு தமது வாக்குகளை வழங்கவில்லை. மாறாக, அவர்கள் சிங்கள பௌத்தரான ஒருவருக்கே தமது வாக்குகளை வழங்கி யிருக்கின்றனர். முஸ்லிம்களும் நாட்டைப் பிரித்தாளும் செயற்பாடுகளை மேற்கொள்கின்ற முஸ்லிம் ஒருவருக்காக தமது வாக்குகளை வழங்கவில்லை. மாறாக, அவர்களும் ஒரு சிங்கள பௌத்தரான சஜித் பிரேமதாசவுக்கே தமது வாக்குகளை வழங்கியிருக்கின்றனர். இலங்கையைப் பொறுத்தவரை தமிழ் அல்லது முஸ்லிம் இனத்தவர் தேர்தலில் போட்டியிட்டு ஜனாதிபதியாகத் தெரிவாகின்ற வாய்ப்பு காணப்படுவதற்கில்லை. தேர்தலில் போட்டியிடுகின்ற சிங்கள அபேட்சகர்களில் தமது பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கத்தக்க அடிப்படையில் தமக்குச் சாதமாக அமைவார் என எதிர்பார்க்கத்தக்க ஒருவருக்கு தமது ஆதரவினை வழங்குவது மாத்திரமே அவர்களால் செய்ய முடியுமான ஒன்றாக இருக்கின்றது. இதனை சட்டத்திற்கு முரணான ஒன்றாகவோ ஜனநாயகத்துக்கு எதிரான செயற்பாடாகவோ ஒரு போதுமே நோக்க முடியாது.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது பொது அபேட்சகர் ஒருவரை நிறுத்துவதன் ஊடாக ராஜபக் ஷ அரசாங்கத்தினை தோல்வியடையச் செய்யவேண்டும் என்ற முன்வொழிவொன்று பௌத்தர்கள் மத்தியில் நன்மதிப்பினைப் பெற்றிருந்த மாதுலுவாவே சோபித தேரரினால் முன்வைக்கப்பட்டது.
அவரது மேற்படி முன்மொழிவானது பௌத்த தேரர்களின் எதிர்ப்புக்கு உள்ளான ஒன்றாகவும் அமையவில்லை. அந்த ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ், முஸ்லிம்களின் வாக்குகள் மஹிந்த ராஜபக் ஷவின் தோல்வியில் பாரிய தாக்கம் செலுத்துவதாக அமைந்திருந்தது. அன்றைய தேர்தலில் தமிழ் மற்றும் முஸ்லிம்கள் பிரிவினைவாதத்தினை நோக்காகக் கொண்டு பொது அபேட்சகருக்கு தமது வாக்குகளை வழங்கவில்லை. அவர்களது நலன்களை மதிக்கின்ற ஒரு ஆட்சியினை நோக்காகக் கொண்டே அவர்கள் வாக்களித்தார்கள்.
நல்லாட்சி அரசாங்கம் என்பது தோல்வி கண்டதும் முட்டாள் தனமானதுமான ஒரு அரசாங்கமாக இருந்தது உண்மை என்ற போதிலும் எதிர்க்கட்சிகள் கூறுவது போன்று பாதுகாப்புப் படையினரை மின்சாரக் கதிரைக்கு அனுப்புகின்ற செயற்பாடுகளோ அல்லது பிரிவினைவாதச் செயற்பாடுகளோ அவர்களது ஆட்சிக்காலத்தில் இடம்பெறவில்லை. தமிழ் –முஸ்லிம் மக்களை அழுத்தங்களுக்கு உட்படுத்தாத அமைப்பில் மிருதுவான அடிப்படையிலான ஆட்சியே மேற்கொள்ளப்பட்டது. 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக் ஷவுக்கு வாக்களிக்காது சஜித் பிரேமதாசவுக்கு தமது வாக்குகளை வழங்கியது சஜித் பிரேமதாச குறித்த இரண்டு இனங்களினதும் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதாக வாக்குறுதியொன்றை வழங்கியிருந்தார் என்ற காரணத்துக்காகவோ அல்லது அதற்காக அவர்களுடன் இரகசிய ஒப்பந்தமொன்றை மேற்கொண்டார் என்பதற்காகவோ அல்ல, குறைந்தது தாம் அழுத்தங்களுக்கு உட்படாத அமைப்பில் மிருதுவான ஆட்சியொன்றை உருவாக்கிக்கொள்கின்ற நோக்கத்திலேயே அவர்கள் தமது ஆதரவினை வழங்குவதற்காக முன்வந்தனர்.
தீவிரவாதம்
மக்களது எண்ணப்பாடுகளில் தீவிரவாதம் என்பது அதிக தாக்கம் செலுத்தும் ஒன்றாக இருக்கின்ற காரணத்தினால் இலங்கையில் இருக்கின்ற ஏதாவது ஒரு இனத்தை தீவிரவாத இனத்தவர்கள் என்பதாக அடையாளப்படுத்த முடியுமா என்ற கேள்வி இங்கு ஆராயப்படுவது அவசியமானதாகும்.
தீவிரவாதம் என்பது சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற மூன்று இனங்களின் மூலமாகவும் ஏதே ஒரு சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது என்பதாக குறிப்பிட முடியும். அத்துடன் அது போன்ற ஒன்று மலைநாட்டின் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியிலிருந்து மாத்திரம்தான் இன்னும் உருவாகவில்லை.
தெற்கின் சிங்கள இன இளைஞர்கள் மூலமாக இரண்டு கலவரங்கள் உருவாகியிருக்கின்றன. 71 ஆம் ஆண்டு கலவரம் மிகக் குறுகிய காலப்பகுதியில் முறியடிக்கப்பட்ட ஒன்றாகக் குறிப்பிடலாம். ஆனால் அதன்னர் 16 ஆண்டுகள் கழிந்தபின் ஏற்பட்ட ஜே.வீ.பீ கலவரமானது 27 மாதங்கள் வரை நீடித்தது என்பதுடன் கலவரக்காரர்கள் ஆட்சியினைக் கைப்பற்றிவிடுவார்கள் என்ற நிலை அண்மிக்கும் தருணத்திலேயே அந்தக் கலவரம் முறியடிக்கப்பட்டது.
மேற்குறிப்பிட்ட இரண்டு கலவரங்களுடனும் விகாரைகளுக்கு நெருங்கிய தொடர்புகள் இருந்ததுடன் கலவரக்காரர்களின் ஆயுதங்களை மறைத்து வைக்கும் தளங்களாக விகாரைகள் காணப்பட்டன. 71 ஆம் ஆண்டு கலவரத்தின் போது 500 பிக்குகள் அளவில் கைதுசெய்யப்பட்டதுடன் இரண்டாவது கலவரத்தின் போது குறித்த கலவரத்துடன் தொடர்புபட்டனர் என்ற அடிப்படையில் 500 க்கும் அதிகமான பிக்குகள் கொல்லப்பட்டனர். கலவரக்காரர்களும் அவர்களை எதிர்த்த பிக்குகளை கொலைசெய்தனர். தெற்கில் ஜே.வீ.பீ கலவரங்களில் பௌத்த பிக்குகளில் ஒரு சிலர் ஈடுபட்டார்கள் என்பதற்காக பௌத்த மதத்தை தீவிரவாத அடிப்படையிலான ஒரு அமைப்பாக அடையாளப்படுத்த முடியாது என்பதுடன் சிங்கள இளைஞர்கள் இரண்டு கலவரங்களை உருவாக்கினர் என்பதற்காக சிங்கள இனத்தை தீவிரவாதத்துடன் தொடர்புடைய இனமாகவும் கருதமுடியாது.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் தோல்வியின் பின்னர் மஹிந்த ராஜபக் ஷவின் அரசியல் தலைமையகமாக அமைந்த நாரஹேன்பிட்ட அபயராமயிலேயே இரண்டாவது கலவரத்தின் ஆரம்பப்புள்ளியாகக் கருதப்படுகின்ற 1987 ஆம் ஆண்டு தடைசெய்யப்பட்ட மே தின கூட்டமானது ஜேவீபீ யினரால் மீண்டும் நாடாத்தப்பட்டது. மாதுலுவாவே சோபித தேரர் மற்றும் முருத்தெட்டுவத்தே ஆனந்த தேரர் ஆகியோரே அந்த தடைசெய்யப்பட்ட மே தினக் கூட்டத்தின் பிரதான பேச்சாளர்களாக இருந்தனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தின் விளைவாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பணியாளரான லெஸ்லி ஆனந்த லால் என்பவரும் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மாணவரான கிதசிறி மேவன் ரணவக என்பவரும் உயிரிழந்தனர்.
அந்தச் சந்தர்ப்பத்தில் மேற்படி இரண்டு பிக்குகளும் ஜேவீபீ க்கு ஆதரவு வழங்கினார்கள் என்பதற்காக அவர்கள் இருவரும் தீவிரவாதிகளாகக் கருதப்படவில்லை.
மொழித் தீவிரவாதம்
இது இலங்கையின் தமிழ் மக்களுக்கும் பொதுவானதாகும். இலங்கைத் தமிழ் மக்களின் கதையானது மிகவும் வேதனை தரக்கூடிய ஒன்றாகும் என்பதாகக் குறிப்பிடலாம். தமிழ் ஈழம் என்ற ஒன்றைப் பெற்றுக்கொள்வது என்ற அடிப்படை யிலான சிந்தனையை தமிழ் அரசியல் கட்சிகள் பெற்றுக் கொள்வதற்கு அன்றைய சிங்கள ஆட்சியாளர்களே காரணமாக இருந்திருக்கின்றனர். 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றுக்கொள்ளப்பட்ட போதிலும் நாட்டின் அனைத்து நடவடிக்கைகளும் ஆங்கில மொழியிலிலேயே நடைபெற்றுவந்தன. சிங்கள, தமிழ் மொழிகளைப் பேசும் மக்களுக்கு தபால், தந்திகள் கூட ஆங்கில மொழியிலேயே கிடைக்கப்பெற்றன. ஆங்கிலமொழி அறியாத தமிழ், சிங்கள மக்கள் தமக்குக் கிடைக்கும் தபால், தந்திகளை வாசித்தறிந்து கொள்வதற்காக ஆங்கிலம் தெரிந்த ஒருவரை நாடிச் செல்லவேண்டி யிருந்தது. ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருந்த நீண்ட காலப்பகுதியில் தாய் மொழிக்கிருந்த இரண்டாம் தர மதிப்பை இல்லாமலாக்கி தாய்மொழிக்கு உரிய மதிப்பினை வழங்குவது குறித்த தேவைப்பாடு சுதந்திரம் பெற்றது முதலே கலந்துரையாடப்பட்டுவந்தது. அதன் அடிப்படையில் அரச நடவடிக்கைகள் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் இடம்பெறவேண்டும் என்பதாக கலந்துரையாடப்பட்டு வந்தது. சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு தாய்மொழிகளுக்கும் அரச கருமமொழி என்ற அந்தஸ்து வழங்கப்படவேண்டும் என்பதாகவே 1956 ஆம் ஆண்டுவரை அனைத்து அரசியல் கட்சிகளினதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாக இருந்துவந்தது.
சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு தாய்மொழிகளுக்குப் பதிலாக சிங்களமொழிக்கு மாத்திரமே அரச கருமமொழி என்ற அந்தஸ்த்து வழங்கப்படவேண்டும் என்ற அடிப்படையிலான மொழித்தீவிரவாதம் 56 ஆம் ஆண்டு புரட்சிக்குக் கிட்டிய காலப்பகுதில் தோன்றியது. இந்தப் பற்றியெரியும் மொழித்தீவிரவாதத்திற்கு எண்ணெய் ஊற்றிய தலைவராக எஸ்.டளியு.ஆர்.டீ பண்டாரநாயக்க அவர்களைக் குறிப்பிடலாம். தனக்கு அதிகாரம் கிடைக்கப்பெறும் பட்சத்தில் அடுத்த 24 மணித்தியாலங்களில் சிங்கள மொழியை மாத்திரம் அரச கருமமொழியாக மாற்றுவதாக அவர் வாக்குறுதியளித்தார். அந்த வாக்குறுதியுடன் சிங்களம் மாத்திரம் என்ற விடயம் பாரிய தீப்பிழம்பாக மாற்றம்பெற்று நாட்டின் பல பக்கங்களுக்கும் பரவத்துவங்கியது. அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மாத்திரமன்றி ஐக்கிய தேசியக் கட்சிக்குக்கூட அதுவரை காலமும் அவர்களால் பின்பற்றப்பட்டு வந்த மொழிக் கொள்கையைக் கைவிட்டு சிங்களம் மாத்திரம் என்ற கொள்கையை பின்பற்றியாக வேண்டியநிலை ஏற்பட்டது.
அப்போதைய காலப்பகுதிகளில் இரண்டு தமிழ் அரசியல் கட்சிகள் காணப்பட்டாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலும் ஐக்கிய தேசியக் கட்சியிலும் தமிழ் அரசியல்வாதிகள் அங்கத்துவம் வகித்தனர். அந்த அடிப்படையில் இரண்டு கட்சிகளினதும் பிரதான செயற்குழுக்களில் தமிழ் அங்கத்தவர்கள் இருந்துவந்தனர். சிங்களம் மாத்திரம் என்ற கொள்கை அமுல்படுத்தப்பட்டதனைத் தொடர்ந்து இரண்டு கட்சிகளினதும் தமிழ் அங்கத்தவர்கள் கட்சிகளை விட்டுச் சென்றனர். இதன் விளைவாக பிரதான இரண்டு கட்சிகளும் தமிழ் அங்கத்துவம் அற்ற கட்சிகளாகிவிட்டன.
பிரச்சினைக்குள் தள்ளப்படல்
தாம் அதிகாரத்துக்கு வருமிடத்து 24 மணித்தியாலங்களில் சிங்கள மொழியை மாத்திரம் அரச மொழியாக்குவோம் என்று உறுதியளித்து 1956 ஆம் ஆண்டு அதிகாரத்தினைக் கைப்பற்றிய பண்டாரநாயக்க சிங்கள மொழிக்கு பிரதான இடத்தை வழங்குவதுடன் ஆகக் குறைந்தது தமிழ் மக்கள் செறிவாக வாழ்கின்ற வடக்கு, கிழக்கு பகுதிகளிலாவது தமிழ்மொழியில் தமது அரச பணிகளை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியிருப்பாராயின் இலங்கையின் நிலை மாத்திரமன்றி தமிழ் மக்களின் நிலைகூட சிறந்ததாக அமைந்திருக்க வாய்பிருந்தது.
உலகில் மிகப்பழைமை வாய்ந்த மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என்பதுடன் இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு தமிழ் மொழியின் மீது இருக்கும் பற்று சிங்கள மக்களுக்கு சிங்கள மொழியில் இருக்கும் பற்றினைவிட அதிகம் எனலாம். தமிழ் மக்கள் தமது மதத்தை விட மொழிக்கே முன்னுரிமை வழங்குபவர்களாக இருக்கின்றனர். நான் ராவய பத்திரிகையை விநியோகிக்கும் ஒருவருடன் வாகனமொன்றில் பயணிக்கும்போது அற்புதமான கதை ஒன்றை என்னிடம் கூறினார். அவர் ஒரு சிங்கள இனத்தவர் என்ற போதிலும் 1983 ஆம் ஆண்டு ஜுலைக் கலவரம் வரையில் மட்டக்களப்பு பகுதியிலேயே வாழ்ந்திருக்கின்றார். மட்டக்களப்பு பகுதிக்கான தமிழ்ப் பத்திரிகை விநியோகஸ்தராக அவரே இருந்திருக்கின்றார். இரவு நேரங்களில் பத்திரிகைகளை விநியோகிக்கும் போது சிங்களக் கடைகளுக்கான பத்திரிகைகளை அந்தந்தக் கடைகளின் அருகாமையில் சென்று பத்திரிகைக் கட்டுகளை கடைக்குள்ளே வீசிவிடுவதற்கு முடியுமான நிலை இருந்த போதிலும் தமிழ் பகுதிகளில் அவ்வாறு செய்ய முடிவதில்லை என்பதாகவும், கடை உரிமையாளர் நித்திரையில் இருந்தால் அவர்களை எழுப்பி பத்திரிகைக் கட்டுகளை அவர்களது கைகளிலேயே கொடுக்கவேண்டும் என்பதாகவும் பத்திரிகையை நிலத்தில் வீசுவதனை அவர்கள் மொழிக்குச் செய்கின்ற அகௌரவமாகக் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ் மொழி முற்று முழுதாகப் புறக்கணிக்கப்பட்டதானது தமிழர்கள் தன்மானம் இழந்தது போன்ற ஒன்றாகவே அவர்கள் கருதியிருப்பர். இந்த உரிமையைப் பெற்றுக்கொள்வதற்காக அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளின் அளவும் அதற்காக அவர்கள் செலவிட்ட சக்தியின் அளவும் மிக விசாலமானது.
அதற்காக பண்டாரநாயக்கவுடன் உடன்படிக்கை ஒன்றும் மேற்கொள்ளப்பட்டது. எனினும் அப்போதைய மொழிப் பற்றாளர்களின் எதிர்ப்பின் விளைவாக அவ்வுடன்படிக்கையைக் கிழித்தெறியும் நிலை பண்டாரநாயக்கவுக்கு எற்பட்டது. அதனைத் தொடர்ந்து 1960 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதி முதல் சிங்கள மொழி மாத்திரம் அரச மொழியாக நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்ட கொள்கைக்கு எதிராக பெடரல் கட்சி தொடரான சத்தியாக்கிரகம் ஒன்றை மேற்கொண்டது. மிகவுமே அமைதியான முறையில் மேற்கொள்ளப்பட்ட இந்த எதிர்ப்பின் விளைவாக வடக்கு, கிழக்கு பகுதிகளில் அரச பணி முற்றாக வீழ்ச்சிகண்டது. 50 நாட்களாகத் தொடர்ந்த இந்த சத்தியாக்கிரகத்தினை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக 4 கோரிக்கைகள் அவர்களால் முன்வைக்கப்பட்டன. அவைகள் வருமாறு.
1.தமிழ்மொழி வடக்கு –கிழக்கு மாகாணங்களின் அரச கரும மொழியாக அமைய வேண்டும்.
2.அந்த மொழியானது குறித்த இரண்டு மாகாணங்களினதும் நீதிமன்ற மொழியாகவும் அமையவேண்டும்
3.சிங்களமொழிக் கொள்கையின் காரணமாக அரச சேவையில் இருக்கின்ற தமிழ் மக்கள் முகம் கொடுக்கின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படவேண்டும்.
4. வடக்கு –கிழக்கு மாகாணம் தவிர்ந்த பகுதிகளில் வசிக்கின்ற தமிழ் மக்களினது மொழி உரிமைகள் குறித்து விளக்கம் தரப்படவேண்டும்.
ஈழம் என்பதற்குள் தள்ளப்படல்
அவர்கள் அன்று முன்வைத்த இந்தக் கோரிக்கைகளில் பிரிவினை வாதத்தின் நிழல் கூட இருப்பதாகக் கருதமுடியாது. மிகவுமே எளிமையான நிலையில் இருந்த இந்தப் பிரச்சினையை அப்போதே தீர்த்துவைப்பதான முயற்சிகள் மேற்கொண்டிருக்கப் படவேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக சிறிமாவோ பண்டாரநாயக்க அவசரகாலச் சட்டத்தினை அமுல்படுத்தி முப்படையினரை வடக்கு – கிழக்கு பிரதேசங்களுக்கு அனுப்பிவைத்தார். பெடரல் கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள், செனட் சபை உறுப்பினர்கள் மற்றும் அந்தக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் என்போர் கைது செய்யப்பட்டு பனாகொட இராணுவ முகாமில் 170 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.
இலங்கையில் மொழி குறித்து கையாளப்பட்ட கொள்கையானது தமிழ் மக்கள் மத்தியில் மாத்திரமன்றி சிங்கள மக்கள் மத்தியிலும் பாதகமான பிரதிபலன்களை உருவாக்குவதற்குக் காரணமாக அமைந்திருக்கின்றது. சிங்கப்பூரில் அரச கரும மொழியாக நான்கு மொழிகள் காணப்படுகின்றன. வட ஆபிரிக்காவில் 11 அரச கரும மொழிகள் காணப்படுகின்றன. சுவிட்சர்லாந்தில் 4 மொழிகள் காணப்படுவதுடன் அந்த நாட்டில் ரோமனேஷ் எனும் மொழியைப் பேசுவோர் மொத்த சனத்தொகையில் 1 வீதமானவர்களே காணப்படுகின்றனர். எனினும் 1938 முதல் அந்த மொழி கூட ஒரு அரச கரும மொழியாகவே காணப்படுகின்றது. இலங்கையில் சிங்களம் மாத்திரம் என்ற கொள்கை (அதன் பின்னர் தமிழ் மாணவர்களுக்கு மாத்திரம் என்ற அடிப்படையிலான பல்கலைக்கழகங்களில் பிரவேசிப்பதற்கான தரப்படுத்தல் கொள்கை) ஈழம் என்பதற்குள் தள்ளப்படுவதற்குக் காரணமாக அமைந்ததுடன் சிங்கள இளைஞர்கள் ஒரு மொழி மாத்திரம் என்ற வட்டத்துக்குள் அடைபட்டதால் பல மொழிகளைக் கற்பதற்கான வாய்ப்பிழந்து அவர்களது முன்னேற்றங்கள் கூட தடைப்படுவதாக அமைந்துவிட்டன.
சிங்கள ஆட்சியாளர்கள் மேற்கொண்ட இனவாதக் கொள்கைகள் காரணமாகவும், ஈழம் எனும் கொள்கையை ஏற்ற தமிழ் தலைவர்கள் ஊடாகவும் தமிழ் மக்களுக்கும் இலங்கை நாட்டுக்கும் பாரிய பாதிப்புக்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. எல்.ரிரி.ஈ போன்ற பயங்கரமான இனவாத இயக்கங்கள் தலைதூக்குவதற்கு இதுவே காரணமாக அமைந்திருக்கின்றது.
எல்.ரிரிஈ நாசகாரமானதாக அமைந்தது சிங்கள மக்களுக்கு மாத்திரமல்ல என்பதனை நாம் மறந்துவிடக் கூடாது. அந்த இயக்கத்தினால் கொல்லப்பட்ட தமிழ் மக்களது தொகை மிக அதிகம் என்பதுடன் தமிழ்த் தலைவர்களில் 99 வீதமானவர்கள் கொல்லப்பட்டதும் அந்த இயக்கத்தின் மூலமாகவன்றி பாதுகாப்புப் படையினர் மூலமாகவல்ல. எல்.ரிரி.ஈ இயக்கமானது தமிழ்ச் சமூகத்துக்கு மிகப் பாரிய அளவிலான கெடுதல்களை ஏற்படுத்தியிருக்கின்ற நிலையில் யுத்தத்தின் மூலமாக அந்த இயக்கம் தோல்வியடையச் செய்யப்பட்டதன் பின் தமிழ்ச் சமூகம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் நோக்கப்படாமல் சந்தேகக்கண் கொண்டு பார்க்கப்படுவ தானது நாட்டை இன்னும் பின்னோக்கி நகர்த்துவதாக அமையுமே தவிர அது நாட்டுக்கு நலன் சேர்ப்பதாக அமைந்துவிடாது.
நாட்டின் முஸ்லிம் மக்கள் தொடர்பாகவும் இதையே கூற முடிகின்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது தீவிரப்போக்கான ஒரு இளைஞர் குழுவின் நாசகாரச் செயல் என்பதுடன் அது முஸ்லிம் மக்களின் அனுசரணையுடன் இடம்பெற்ற ஒன்றாகக் கருதிவிட முடியாது.
துண்டுகளாகப் பிரிந்திருக்கின்ற தேசிய ஒற்றுமையினை ஒன்றுபடுத்துவதன் ஊடாக சமூகக் கட்டமைப்பினை கட்டியெழுப்புவதானது தீர்க்கப்படவேண்டிய நாட்டின் பிரச்சினைகளில் பிரதான இடத்தைப் பெறுகின்ற பிரச்சினையாகக் காணப்படுகின்றது. இந்தப் பிரதான பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாமல் நாட்டின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்படுகின்ற எந்த முயற்சியுமே வெற்றியளிக்கப் போவதில்லை.
2019 ஆம் ஆண்டு மாற்றத்தினை ஏற்படுத்தியவர்களிடம் இந்தக் கேள்விக்குத் தெளிவான பதில்கள் இருப்பதாகத் தெரியவில்லை. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட மற்றைய அபேட்சகர்களிடம் கூட இந்தக் கேள்விக்குத் தெளிவான பதில் இருக்கவில்லை.-Vidivelli
- விக்டர் ஐவன்
தமிழில்: ராஃபி சரிப்தீன்