அரசியல் அநாதைகளின் தேவைகளுக்கு பெரும்பாலான மக்களின் அரசியல் அபிலாசைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது. மக்கள் விரும்புகின்ற மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்றால் ஐக்கிய தேசிய கட்சியில் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறல்லாது வெற்றி இலக்கை அடைய முடியாது என்று முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
தற்போதைய அரசியல் நெருக்கடிகள் மாற வேண்டுமாயின் நாங்களாகவே ஒரு தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும். இன்றைய நிலைமை ஒரு அனுபவம் என்றே குறிப்பிட வேண்டும். அரசியல் ரீதியில் சிறுபான்மை கட்சிகள் மற்றும் தலைமைத்துவங்கள் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அலரி மாளிகையின் கேட்போர் கூடத்தில் நேற்று புதன் கிழமை இடம் பெற்ற ஐ.தே.மு.வின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
அரசியல் ரீதியில் இன்று பாதை தடம் புரண்டுள்ளது. அரசியல் ரீதியில் அநாதைகளாக வந்தவர்கள் இன்று தமது அரசியல் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைத்துவிட்டனர்.
அரசியல் நெருக்கடிகளின் போது ஒரு தரப்பினர் தாம் கடந்து வந்த அரசியல் பாதையினை மறந்து விட்டனர். எதிர்கால அரசியல் இருப்பினை தக்கவைத்துக்கொள்ள நிறைவேற்று அதிகாரத்தின் பின்னால் செல்கின்றனர். பல காரணங்களை குறிப்பிட்டு தேர்தலை பிற்போட்டவர்கள் இன்று எம்மை விமர்சிக்கின்றனர். தேர்தலை உரிய காலத்தில் நடத்தாமையே இன்றைய அரசியல் நெருக்கடிக்கு காரணம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
சிறுபான்மை மக்கள் மற்றும் சிறுபான்மை அரசியல் தலைமைத்துவங்கள் இன்று விழிப்புடன் செயற்பட வேண்டும் . ஜனநாயக ரீதியில் ஒரு அரசாங்கம் அமைந்தால் மாத்திரமே சிறுபான்மை மக்கள் தொடர்ந்து எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும். ஐக்கிய தேசிய கட்சி நாட்டில் பலமிக்க கட்சியாக காணப்படுகின்றது. கட்சியில் சில மாற்றங்களை ஏற்படுத்தி சவால்களை எதிர்கொள்வோம் என்று கட்சியின் தலைமைத்துவத்திற்கு குறிப்பிட்டுள்ளோம்.
ஐக்கிய தேசிய கட்சியில் ஒரு பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தியே சவால்களை எதிர்கொள்ள வேண்டும். ஒரு தரப்பினரின் அரசியல் தேவைகளுக்காக பெரும்பான்மையான மக்கள் வழங்கிய மக்களாணையினை எவருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது என்றார்.
-Vidivelli