கட்டாரில் நிர்மாணிக்கப்பட்டு வரும் துருக்கியின் புதிய இராணுவத் தளம் பூரணப்படுத்தப்பட்டுள்ளதாக துருக்கிய ஜனாதிபதி றிசெப் தைய்யிப் அர்துகான் கடந்த திங்கட்கிழமை தெரிவித்தார்.
ஐந்தாவது துருக்கி – கட்டார் உயர்மட்ட தந்திரோபாயக் குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கடந்த திங்கட்கிழமை டோஹாவுக்கு வந்து சேர்ந்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் சவூதி அரேபியா தலைமையில் கட்டார் மீதான தடை விதிக்கப்பட்டதிலிருந்து சுமார் 5,000 படையினர் நிலைகொண்டுள்ள துருக்கிய இராணுவத் தளத்தில் இராணுவத்தினருடன் அவர் உரையாடினார். 100 துருக்கிய தாங்கிகளை கட்டார் கொள்வனவு செய்யவுள்ள நிலையிலேயே இவ்விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
துருக்கி – கட்டார் இணைந்த படையணி ஸ்திரத்தன்மை மற்றும் சமாதானத்திற்காக கட்டாருக்கு மாத்திரமல்லாது ஒட்டுமொத்த வளைகுடாப் பிராந்தியத்திற்கும் சேவையாற்றுகின்றதென புதிதாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ள இராணுவத் தளத்தில் இராணுவத்தினருடன் கலந்துரையாடிய பின்னர் தெரிவித்தார்.
ஏழாம் நூற்றாண்டில் இறைத் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களது படைகளுக்குத் தலைமைதாங்கிய இராணுவ ஜெனரல்களுள் ஒருவரான காலித் இப்னு வலீதின் பெயர் இப்படையணியின் நிலையத்திற்கு சூட்டப்பட்டுள்ளது. காலித் இப்னு வலீத் யுத்தத்தின்போது மிக வீரத்துடன் போரிட்டவராவார். அதனால்தான் அவருக்கு முஹம்மத் (ஸல்) அவர்கள் ‘அல்லாஹ்வின் உருவப்பட்ட வாள்’ என்ற பட்டப் பெயரை வழங்கினார்கள்.
இந்த இராணுவத் தளம் சகோதரத்துவம், நட்புறவு, ஆதரவு மற்றும் நாணயத்தின் அடையாளமாகும் என அர்துகான் வர்ணித்தார்.
அச்சுறுத்தல் மற்றும் ஆபத்து ஏற்படும்போது வரலாற்றில் ஒருபோதும் நாம் எமது நண்பர்களைக் கைவிட்டுச் சென்றது கிடையாது, இனியொருபோதும் அவ்வாறு செய்யவும் மாட்டோம் எனவும் அவர் தெரிவித்தார்.
கட்டார், பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாகவும் வளைகுடா ஒத்துழைப்பு நாடுகளின் அங்கத்தவர்களுடன் 2014 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையை மீறியதாகவும் குற்றம்சாட்டி கடந்த 2017 ஜுன் மாதம் 05 ஆம் திகதி சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் கட்டாருடனான இராஜதந்திர மற்றும் வர்த்தகத் தொடர்புகளை தரை, வான் மற்றும் கடல் மார்க்கங்களை தடை செய்ததன.
கட்டார், இந்நான்கு நாடுகளினதும் குற்றச்சாட்டுக்களை தொடர்ச்சியாக மறுத்து வருகின்றது.-Vidivelli