வடமேல் மாகாண ஆளுநராக ஏ.ஜே.எம். முஸம்மில் நியமிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக குருநாகல் நகரின் பல்வேறு பகுதிகளிலும் நேற்றைய தினம் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
” முஸ்லிம் ஆளுநர் எங்களுக்கு வேண்டாம். சிங்களவர்கள் நாம் வாக்களித்தது இவர்களிடம் மண்டியிடவா?” எனும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளே இவ்வாறு குருநாகல் நகரின் பல்வேறு பகுதிகளிலும் நேற்றிரவு ஒட்டப்பட்டுள்ளன.
புதிய ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக் ஷ பதவியேற்றதைத் தொடர்ந்து கடந்த வாரம் ஆறு மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். இதற்கமைய முன்னாள் மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில், வட மேல் மாகாணத்துக்கான புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் இன்றைய தினம் தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ள நிலையிலேயே இவ்வாறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இதேவேளை, வடமேல் மாகாண ஆளுநராக முஸம்மில் நியமிக்கப்பட்டமைக்கு தாம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என நேற்று முன்தினம் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் கொழும்பில் நடாத்திய ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார். இந்த ஊடக மாநாட்டில் ஆளுநர் முஸம்மிலும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli
- குருநாகல் நிருபர்