ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்து அனைத்து மக்களும் இன, மத, பேதமற்று வாழக்கூடிய சூழலை உறுதிப்படுத்துவதற்காக முப்படையினரை கடமைகளில் ஈடுபடுத்துவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை கடந்தவாரம் வெளியிட்டார். இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்ததும் பல்வேறு தரப்பினரிடமிருந்து விமர்சனங்கள் வெளியிடப்பட்டன.
இந்நிலையில் நாட்டில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டு ஜனநாயகம் கேள்விக்குட்படுத்தப்படமாட்டாது என பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன உறுதியளித்துள்ளார். இது தொடர்பில் மக்கள் பீதியடையத் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதியின் மற்றுமொரு அதிரடி நடவடிக்கை, மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை உருவாக்கியுள்ளது. ஜனாதிபதி பொலிஸ் கட்டமைப்பில் மேற்கொண்ட இடமாற்றங்கள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன.
குற்றப் புலனாவுப் பிரிவு பணிப்பாளராகக் கடமையாற்றிய ஷானி அபேசேகர கடந்த வாரம் அப்பதவியிலிருந்தும் நீக்கப்பட்டு தெற்குப் பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அவர் இடம் மாற்றப்பட்டமைக்காக காரணத்தை ஜனாதிபதி நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா வலியுறுத்தியுள்ளார்.
‘மனித உரிமை மீறல்களுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு முன்னணிக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்குத் தலைமை தாங்கிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவின் இடமாற்றத்தின் பின்னணி அரசியலே’ என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கருத்து வெளியிட்டுள்ளார்.
‘சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவுக்கு என்ன நேர்ந்தது-? பொலிஸ் மா அதிபர் எதற்காக இத்தகைய அழுத்தங்களைப் பிரயோகிக்கிறார்?’ என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நீண்டகாலமாக குற்றப் புலனாய்வாளராகக் கடமையாற்றிய ஷானி அபேசேகர பல்வேறு பதவியுயர்வுகளைப் பெற்று 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அப்பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். நாட்டை உலுக்கிய பல்வேறு படுகொலைகள் மற்றும் காணாமலாக்கப்பட்டவர் தொடர்பான சம்பவங்களின் குற்ற விசாரணைகளை வழி நடத்தியவர் இவர். ஆட்சி மாற்றத்துடன் இவர் ஏன் இடமாற்றம் செய்யப்படவேண்டும்? அவர் தலைமை தாங்கிய விசாரணைகளுக்கு என்ன நடக்கப் போகிறது? என்பதே இப்போதும் கேள்வியாகும்.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் படுகொலை, ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை, வெள்ளை வேனில் 5 மாணவர்கள் உட்பட 11 பேர் கடத்திக் காணாமலாக்கப்பட்டமை, ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமலாக்கப்பட்டமை, ஊடகவியலாளர்களான உபாலி தென்னகோன், கீத் நொயார், நாமல் பெரேரா என்போர் மீதான தாக்குதல்கள், மத்திய வங்கி பிணைமுறி மோசடி, 4/21 தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள், டாக்டர் ஷாபி மீதான குற்றச்சாட்டுக்கள், ஜனாதிபதி கோத்தாபயவின் குடியுரிமை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களின் விசாரணைகளை இவரே தலைமை தாங்கி வழிநடத்தினார்.
இந்த விசாரணைகளுக்கு இனிமேல் என்ன நடக்கப்போகிறது?
‘ஷானி அபேசேகர நாட்டின் மிகச் சிறந்த அனுபவமுள்ள குற்றப் புலனாய்வு அதிகாரியாவார். ஆட்சியதிகாரம் யாருடைய கையில் இருந்தாலும் அவர் எப்போதும் சுயாதீனமாகவே பணியாற்றியிருக்கின்றார். நாட்டின் மேல்மட்ட அரசியல்வாதிகள் குறித்தும் அவர் நடவடிக்கை எடுத்திருக்கிறார் என அஜித் பி பெரேரா தெரிவித்திருக்கின்றமை அவரின் சுயாதீனத் தன்மையை வலியுறுத்துகிறது.
இதேவேளை, ஷானி அபேசேகரவைக் கைதுசெய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமெனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. தாய் நாட்டுக்கான தேசிய வீரர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சட்டத்தரணி மேஜர் அஜித் பிரசன்ன இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
மாவனெல்லை புத்தர் சிலை உடைப்புடன் ஆரம்பமான இஸ்லாமிய தீவிரவாத செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுத்துச்செல்ல இடமளிக்கப்பட்டன. உரிய வகையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. இதனாலேயே 4 /21 தாக்குதல்கள் இடம்பெற்றன. விசாரணைகளை ஒழுங்காக மேற்கொள்ளாத குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக இருந்த ஷானி அபேசேகரவே இதற்குப் பொறுப்புக்கூற வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
லசந்த, எக்னெலிகொட கொலை வழக்கு, கீத் நொயார் தாக்கப்பட்டமை, உபாலி தென்னகோன் தாக்கப்பட்டமை மற்றும் கடற்படையுடன் தொடர்புடைய வழக்கு விசாரணைகள் அனைத்திலும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவை குற்றவாளியாக சித்திரிக்க முயற்சிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எது எவ்வாறாக இருந்தாலும் பல்வேறு வழக்குகளில் பாதிக்கப்பட்டு நீதிக்காக பல வருடங்கள் ஏங்கி நிற்கும் மக்களுக்கு ஜனாதிபதி விரைவில் நீதிபெற்றுக்கொடுக்க வேண்டும். அவரது விரைவான நடவடிக்கைகளே அவர் மீதான நம்பிக்கையை மேலும் பலப்படுத்தும்.-Vidivelli