வடமேல் மாகாண ஆளுநர் முஹம்மட் முஸம்மிலுக்கு எதிராக சிங்கள பெளத்த மக்களை தூண்டிவிட நாம் எந்த முயற்சிகளையும் முன்னெடுக்கவில்லை. எம்மை குற்றம்சாட்டி எவரும் பிரச்சினைகளை உருவாக்க வேண்டாமென பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
இந்த ஆட்சியாளர்களுக்கு சிறுபான்மை மக்கள் வாக்களிக்கவில்லை என்பதற்காக சிறுபான்மை மக்களுக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்க்க எவரும் முயற்சிக்கக்கூடாது. தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவை எவ்வாறு பெறுவது என்பதை பற்றி சிந்தித்து அவர்களுடன் பயணிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வடமேல் மாகாண ஆளுநர் முஹம்மட் முஸம்மிலும் நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டார், இவரது நியமனத்தையடுத்து சிங்கள மக்கள் தேரர்கள் சிலருடன் இணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை செய்யவுள்ளதாகவும் அதற்கு பொதுபல சேனா தலைமை தாங்குவதாகவும் குறிப்பிடப்பட்ட நிலையில் நேற்றைய தினம் செய்தியாளர் சந்திப்பில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மற்றும் ஆளுநர் முஹம்மட் முஸம்மிலும் கலந்துகொண்டனர். செய்தியாளர் சந்திப்பில் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கூறுகையில்,
கடந்த காலங்களில் வேறு நபர்கள் குற்றங்களை செய்துவிட்டு பழியை பொதுபலசேனா மீதே சுமத்தினர். வழக்கு தொடர்ந்தனர். நாம் பொறுமையாக அனைத்தையும் தாங்கிக்கொண்டோம். இப்போது புதிய ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். சிங்கள பெரும்பான்மை வாக்குகளில் அவர் வெற்றிபெற்றார். சிங்கள பெளத்த வாக்குகளில் மாத்திரம் வெற்றிபெற முடியாது, அது நடக்காதெனக் கூறியவர்களின் கருத்துக்களை பொய்ப்பித்து வெற்றிபெற்றார். ஆனால் அவர் வெறுமனே சிங்கள பெளத்த மக்களின் தலைவர் மட்டுமல்ல. அவர் ஏனைய சகல இனங்களுக்கும் ஜனாதிபதி. இந்த நாட்டில் பெரும்பான்மை முஸ்லிம் மக்களின் ஆதரவு அவருக்கு கிடைக்கவில்லை.
அதனால் நாம் முஸ்லிம் சமூகத்துடன் முரண்பட அவசியம் இல்லை. நாம் எப்போதும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு எதிராக செயற்பட்ட நபர்கள். ஏனைய அப்பாவி முஸ்லிம் மக்களை நாம் எதிர்க்கவில்லை. வாக்களிக்கவில்லை என்பதற்காக சிறுபான்மை மக்களுக்கு எதிராக செயற்பட முடியாது.
அநாவசிய முரண்பாடுகளை ஏற்படுத்த நாம் தயாரில்லை. நம்பிக்கையை ஏற்படுத்தினால் மட்டுமே நாட்டினை கொண்டு நடத்தமுடியும். ஆகவே மக்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டுமென்றால் இனங்களுக்கிடையில் நம்பிக்கையை உருவாக்க வேண்டும். அதற்கான நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும். சிறுபான்மை மக்கள் ஏன் எம்மை ஆதரிக்க மறுக்கின்றனர் என்பதை ஆராய்ந்து அதனை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜபக் ஷ வினருக்கு இந்த தேர்தலில் மட்டுமல்ல, கடந்த 2005 ஆம் ஆண்டிலிருந்து சிறுபான்மை மக்களின் வாக்குகள் கிடைக்கவில்லை. அது ஏன் என்பதைக் கண்டறிய வேண்டும்.
இன்று திடமான ஜனாதிபதி ஒருவர் கிடைக்கப்பெற்றுள்ளார். இவரின் மூலமாக சமூக ஒற்றுமையுடன் நாட்டினை கட்டியெழுப்ப வேண்டும். யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு வெற்றி கிடைத்துள்ளது. நாடாக நாம் இதில் வெற்றி கொண்டுள்ளோம். சகல பிரிவினைவாத சதிகாரர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் தோற்கடித்துள்ளோம். ஆனால் இது தற்காலிக வெற்றி மட்டுமே. பிரிவினைவாதிகளின் தாக்குதல் எந்நேரத்திலும், எந்த முறையிலும் இடம்பெறலாம். ஆகவே, நாம் தொடர்ந்தும் அவதானமாக பெற்றுக்கொண்ட வெற்றியை தக்கவைக்க வேண்டும். இப்போதுதான் அரசாங்கம் உருவாகியுள்ளது. கடமைகளை சரியாக நிறைவேற்ற சிறிது காலம் கொடுக்க வேண்டும்.
அதேபோல் முஸ்லிம் மக்கள் இந்த ஆட்சியை நிராகரித்தமை உண்மையே. அதற்காக முஸ்லிம் மக்களை ஒதுக்கக்கூடாது. அது சர்வதேச ரீதியில் தவறான சித்திரிப்பை கொண்டுசெல்லும். எனவே, முரண்பாடுகள் ஏதுமிருப்பின் பிரச்சினைகளை தீர்க்கவேண்டும். தோற்றவர்களை அடிப்பதல்ல சிங்கள பெளத்த கொள்கை. அன்று தமிழ் மக்கள் ஏன் போராட ஆரம்பித்தனர் என்பதை சரியாக அறிந்துகொண்டு தீர்வுகளை வழங்கியிருந்தால் அதன் பின்னர் போராட்டமொன்று ஏற்பட்டிருக்காது. வாக்களிக்கவில்லை என்பதற்காக சிறுபான்மை மக்களை தண்டிக்கக் கூடாது.
முஸம்மில் அவர்களை ஆளுநராக நியமித்துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
எமது அமைப்பின் பெயரில் செய்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆனால் நாம் அதனை செய்யவில்லை. நாம் முஸ்லிம் மக்களை குழப்பவோ சிங்கள மக்களை குழப்பவோ எந்த முயற்சியையும் முன்னெடுக்கவில்லை. முஸம்மில் எப்படிப்பட்டவர் என்பது எமக்கு நன்றாகவே தெரியும். அவர் கடந்த காலங்களில் செய்த சேவைகளை நாம் பார்த்துள்ளோம். இப்போது வரையில் உருவாக்கப்பட்டுள்ள பிரச்சினைகள் தாராளமாகப் போதுமானது. இனியாவது பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரச்சினைகளின் பின்னால் சென்றால் எங்கு சென்று முடிவது. பிரச்சினைகளை உருவாக்க எவரும் முயற்சிக்கும் போதே அதனை தீர்க்கவேண்டும். எம்மை குற்றம்சாட்டி எவரும் பிரச்சினைகளை உருவாக்க வேண்டாம். அனைவரும் தவறவிட்ட இடங்களை சரிசெய்துகொள்ள வேண்டும். இனியும் குழப்பங்களை எவரும் முன்னெடுக்க வேண்டாம்.-Vidivelli