அழகான இலங்கை தேசத்துக்குள் வாழும் அனைவரும் இலங்கையர் என்ற மகுடத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டுமென்பதை நடந்து முடிந்த 8ஆவது ஜனாதிபதித் தேர்தல் பெறுபேறுகள் உணர்த்தி நிற்கிறது.
ஏறக்குறைய 2 கோடி 30 இலட்சம் மக்கள் வாழும் இந்நாட்டில் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், கிறிஸ்தவர், மலாயர் என இனத்துவ அடையாளத்தோடு வாழ்ந்தாலும் பிறநாடுகளில் இலங்கையில் வாழும் அனைத்து இனத்தினரும் ‘ஸ்ரீலங்கன்’ என்றே அடையாளப்படுத்தப்படுகின்றனர் அல்லது அழைக்கப்படுகின்றனர்.
அப்படியானால், இலங்கைக்குள் இலங்கையர் என்று அழைக்கப்படாமல் ஏன் சிங்களவர் என்றும், இலங்கைத் தமிழர் என்றும், இந்திய வம்சாவளிகள் என்றும் இலங்கை சோனகர் அல்லது முஸ்லிம்கள் என்றும் இனப்பாகுபாட்டுடன் அடையாளப்படுத்த வேண்டும் என்ற கேள்விக்கு விடைகாண வேண்டிய தருணம் இப்போது உருவாகியிருக்கிறது.
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கத் தகைமை பெற்ற 15,992,96 வாக்காளர்களில் 13,387,951 வாக்காளர்கள் தங்களது ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இவர்களில் 6,924,255 வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவுக்கு அளித்து இந்நாட்டின் 7ஆவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக அவரை வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள்.
1982ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அனைத்து ஜனாதிபதிகளின் வெற்றியிலும் இந்நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் வாக்காளர்களின் வாக்குகள் அதிகளவில் செல்வாக்கு செலுத்தியிருந்தபோதிலும் நடந்துமுடிந்த இத்தேர்தலில்
தமிழ், முஸ்லிம் வாக்காளர்களின் வாக்குகள் ஜனாதிபதி கோத்தாபயவின் வெற்றியில் செல்வாக்கு செலுத்தவில்லை அல்லது மிகக்குறைந்தளவு செல்வாக்கே செலுத்தியிருக்கிறது. நாடுபூராகவுமிருந்து நான்கு, ஐந்து இலட்சத்துக்குட்பட்ட வாக்குகளே தமிழ், முஸ்லிம் வாக்காளர்களின் பக்கமிருந்து அளிக்கப்பட்டிருக்கின்றன.
ஆதலால், இந்நாட்டில் 70 வீதத்திற்கு மேற்பட்டு வாழும் பௌத்த சிங்கள மக்களே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் வெற்றியின் சொந்தக்காரர்கள். அதனால்தான் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ சிங்கள மக்களின் வாக்குகளே என்னை ஜனாதிபதியாக்கியது எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இருப்பினும், இந்நாட்டில் ஏறக்குறைய 30 வீதமாக வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள் தொகையின் வாக்காளர்கள் தரப்பிலிருந்து ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்ட ஹிஸ்புல்லாவுக்கு 38,214 வாக்குகளும், சிவாஜிலிங்கத்துக்கு 12,256 வாக்குகளும் அளிக்கப்பட்டிருக்கின்றன. ஏனைய வாக்காளர்களின் வாக்குகளில் பெரும்பான்மையிரின் வாக்குகள் ஜனாதிபதி கோத்தாபயவிலும் பார்க்க புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளருக்கு அளிக்கப்பட்டுள்ளன. இந்த வாக்களிப்பு வீதமானது இலங்கை மக்களை இரு துருவமாகப் புடம்போட்டுக் காட்டியிருக்கிறது.
இந்நிலையில், இந்நாட்டில் வாழும் 9.7 சதவீத முஸ்லிம்களின் சனத்தொகையில் மூன்றில் ஒரு வீதத்தினரே வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ளனர். ஏனைய இரண்டு வீதத்தினரும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழ்கின்றனர். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் முஸ்லிம்கள் அப்பிரதேசங்களில் வாழ்கின்ற ஏனைய சமுதாயங்களுடன் எவ்வாறு இன ஒற்றுமையோடு வாழவேண்டுமென சிந்திக்கிறார்களோ அவ்வாறே வடக்கு, கிழக்குக்கு வெளியே வாழ்கின்ற முஸ்லிம்கள் அப்பிரதேசங்களில் வாழ்கின்ற பிற சமூகங்களுடன் சமூகப் பிணைப்போடு வாழவேண்டுமென எண்ணுகின்றனர்.
வடக்கு, கிழக்கிற்குள்ளேயும் வெளியேயும் வாழும் இம்மக்களின் சமூக ஒற்றுமையை பல்வேறு காரணிகள் பிரிகோடுகளாக இருந்து பிரித்தாளுகின்றன. இந்த இனப்பாகுபாட்டை நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் பெறுபேறு புடம்போட்டிருக்கிறது. இந்நிலையில்தான், அனைவரும் இலங்கையர் என்ற அடிப்படையில் ஒன்றிணைந்து சுபீட்சமான தேசத்தைக் கட்யெழுப்ப செயற்பட வேண்டுமென்ற அழைப்பை புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ விடுத்திருக்கிறார்.
தேர்தல்களில் நம்பிக்கையின் அடிப்படையில் ஜனநாயக உரிமை வழங்கப்பட்டாலும் அதித நம்பிக்கை ஒரு தருணத்தில் நம்பிக்கைக்கு வெற்றியாகவும் மற்றுமொரு தருணத்தில் தோல்வியாகவும் அமையக்கூடும். நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவையும், சஜித் பிரேமதாசவையும் ஆதரித்து முஸ்லிம் அரசியல் தலைமைகளும், சிவில் அமைப்புக்களும் பிரசாரம் செய்த போதிலும் சஜித் பிரேமதாசவுக்கு அளிக்கப்பட்ட வாக்குகளிலும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் குறைவானது என்பதை தேர்தல் பெறுபேறுகள் கோடிட்டுக் காட்டுகின்றன.
இருப்பினும், கோத்தாபய ராஜபக் ஷ பெரும்பான்மை பௌத்த சிங்கள மக்களின் அதிகப்படியான வாக்குகளினால் வெற்றி பெற்றிருக்கிறார். வடக்கு, கிழக்கிலும், தென்னிலங்கையின் நுவரெலிய மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்கள் அனைத்திலும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ வெற்றியீட்டியிருப்பது 1982 முதல் 2015ஆம் ஆண்டு வரை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பெறுபேறுகளின் வரலாற்றைப் புரட்டிப் போட்டிருக்கிறது.
தேர்தல் பெறுபேறுகளின் வரலாற்று ரீதியான ஆய்வு, புள்ளிவிபரங்கள் ஊடான தமிழ், முஸ்லிம் வாக்காளர்களின் வெற்றிப் பங்களிப்புக் கணிப்பீடுகளை பொய்யாக்கியிருக்கிறது. இந்நாட்டின் ஜனாதிபதியை இந்நாட்டில் வாழும் பெரும்பான்மை மக்களினால் தெரிவுசெய்ய முடியுமென்ற செய்தியை உலகறியச் செய்திருக்கிறது.
அதனால்தான்., ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள மக்களின் ஆதரவினாலேயே நான் வெற்றி பெற்றுள்ளேன். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும்போது சிங்கள மக்களின் ஆதரவுடன் வெற்றிபெற முடியும் என்பதை முன்கூட்டியே அறிந்தேன். இருப்பினும், எமது வெற்றியில் தமிழ், முஸ்லிம் மக்களும் பங்காளர்களாக வேண்டுமென்று நான் அழைப்பு விடுத்தேன். ஆனால், எதிர்பார்த்தளவிற்கு அவர்களின் ஆதரவு கிடைக்கவில்லை. ஆனாலும், இலங்கையர் என்ற அடிப்படையில் என்னுடன் ஒன்றிணைந்து பணியாற்ற வருமாறு உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன் என்று தனது பதவிப்பிரமாணத்தின் பின்னர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ அழைப்பு விடுத்திருந்தார்.
தேர்தலில் தங்களது ஜனநாயக உரிமையை விரும்பும் வேட்பாளருக்கு அளித்தாலும், வெற்றிபெற்று ஆட்சிக்கு வரும் ஆட்சியாளருடன் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்ப ஒத்துழைப்பு வழங்குவது இலங்கையர் என்ற அடிப்படையில் ஒவ்வொரு பிரஜையினதும் தார்மீகப் பொறுப்பாகும். அந்த தார்மீகப் பொறுப்பு தென்னிலங்கையில் மாத்திரமின்றி வடக்கு, கிழக்கில் வாழும் அனைத்து முஸ்லிம்கள் மீதும் பொறுப்பாகவுள்ளது. ஏனெனில், நாம் இலங்கையர். இலங்கையர் என்ற மகுடத்தின் கீழ் ஆட்சியாளர்களுடன் முஸ்லிம்கள் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டியுள்ளது.
ஏனெனில், அந்நியர்களின் ஏகாதிபத்திய ஆட்சியிலிருந்து இந்நாட்டை மீட்டெடுப்பதற்குப் போராடிய அனைத்தின, மத அரசியல் தலைவர்களுடன் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் மக்களும் இணைந்து போராடியிருக்கிறார்கள். அது மாத்திரமின்றி, சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்தில் இந்நாட்டை ஆண்ட மன்னர்களின் ஆட்சியில் பல்வேறு பொறுப்புக்களுக்கும் பொறுப்பாளிகளாக இருந்துள்ளதுடன் அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாகவும் நாட்டுப்பற்றாளர்களாகவும் செயற்பட்டிருக்கிறார்கள்.
ஆனால், வரலாற்று ரீதியாகக் கட்டிக்காத்து வந்த நம்பிக்கை தற்போது தகர்த்தெறியப்பட்டிருக்கிறது. ஒரு இனம் மற்ற இனத்தின் மீதான சமூக அச்சத்தின் காரணமாக துருவமாக்கப்பட்டிருக்கிறது. இத்துருவநிலை மாற்றப்பட வேண்டும். மீண்டும் முஸ்லிம்கள் மீதான பெரும்பான்மையினரின் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும். அந்த நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டுமாயின் நமது முன்னோர்கள் இந்நாட்டுக்காகப் புரிந்த தியாகங்கள் புதுப்பிக்கப்படுவதோடு இழந்த நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான திட்டங்களும் வகுக்கப்பட வேண்டும். மேலும், புதிய ஜனாதிபதியினால் இந்நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்தில் நாட்டுப்பற்றுடன் இணைந்து பயணிக்கவும் வேண்டும்.
ஐரோப்பிய போத்துக்கீசர்களும், ஒல்லாந்தர்களும், ஆங்கிலேயர்களும் இந்நாட்டை ஆட்சி செய்வதற்கு முன்னரும் ஆட்சி செய்த காலத்திலும் இந்நாட்டில் வாழ்ந்த முஸ்லிம்களின் பங்களிப்புகள் அக்கால ஆட்சியாளர்களுக்கு அளப்பரியதாகவே இருந்துள்ளது. இராஜதந்திர துறையிலும், பாதுகாப்புத்துறையிலும், மருத்துவத்துறையிலும், வணிகத்துறையிலுமென பல்வேறு துறைகளில் அக்காலத்து ஆட்சியாளர்களுக்கு முஸ்லிம்கள் பங்களிப்பு செய்திருக்கிறர்கள்.
முஸ்லிம்கள் கடற் பயணத்திலும், பல மொழிகள் பேசுவதிலும், உள்நாட்டு, வெளிநாட்டு தொடர்பாடல்களிலுமெனப் பல்வேறு விடயங்களில் தேர்ச்சியும் அனுபவமும் பெற்றிருந்ததால் அத்தகையவர்கள் அக்காலத்து மன்னர்களின் தூதுவர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
கி.பி. 1258 இல் யாப்பகுவையை ஆண்ட முதலாம் புவனேகபாகு என்ற மன்னன் அக்காலத்திலிருந்த எகிப்தின் மம்லூக்கிய மன்னனுடனான வர்த்தக தொடர்பின் நிமித்தம் அபூ உஸ்மான் என்பவரை தூதுவராக அனுப்பி வைத்ததாகவும் கி.பி. 1762ஆம் ஆண்டளவில் கண்டி மன்னனாக இருந்த கீர்த்திஸ்ரீ இராஜசிங்கனை சந்திப்பதற்காக கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனியின் தூதுவராக ஜோன் பைபஸ் திருகோணமலைக்கு வந்திருந்தவேளை, அவரை வரவேற்று கண்டிக்கு அழைத்துவருவதற்காக மவுலா முகாந்திரம் என்பவரது புதல்வரான உதுமான் லெப்பை என்பவரை மன்னர் அனுப்பி வைத்திருந்ததாகவும் அதேபோல், போர்த்துக்கேயருக்கு எதிரான போராட்டத்தில் அவர்களை விரட்டியடித்து நாட்டைக் காப்பாற்றுவதற்காக கள்ளிக்கோட்டை சமோரினின் உதவியைப் பெற மாயாதுன்னை மன்னன் முஸ்லிம்களையே தூதுவராக அனுப்பி வைத்திருந்ததாகவும் வரலாறு கூறுகிறது.
தூதுவர்களாக மாத்திரமின்றி, மன்னர்களின் பாதுகாப்பு, வைத்தியம், வாணிபம் என பல்வேறு விடயங்களில் அக்காலத்து பௌத்த சிங்கள மன்னர்களின் விசுவாசத்துக்கும் நம்பிக்கைக்குரியவர்களாகவும் ஆளுமைமிக்கவர்களாகவும் முஸ்லிம்கள் வாழ்ந்து நாட்டுப் பற்றை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
அந்நியர்களின் காலனித்துவ ஆட்சிக் காலங்களின்போது, இந்நாடு பல சாதக பாதக விளைவுகளை அனுபவித்தது. சாதகமான விளைவுகளாக பொருளாதார விருத்தி, அரசியல் கட்டமைப்பு மாற்றம், போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டமை அவை தேவைக்கேற்ப விருத்தி செய்யப்பட்டமை, தொழிற்சாலைகள் நிறுவப்பட்டமை, கல்வி முன்னேற்றம் கண்டமை. பாடசாலைகள் உருவாக்கப்பட்டமை, சமூக முன்னேற்றமும் வாழ்க்கை முறைமையும் மாற்றம் கண்டமை போன்றவற்றைக் குறிப்பிட முடிவதுடன், பாதக விளைவுகளாக கலாசாரத்தில் மாற்றமும் அதன் பின்னரான சீரழிவுகளும், மதமாற்றம் மேற்கொள்ளப்பட்டமை, பொருளாதாரச் சுரண்டல், அடிமைப்படுத்தல் முதலான காலனித்துவத்தின் பாதக விளைவுகளையும் குறிப்பிடலாம்.
இந்நாட்டின் காற்றை சுதந்திரமாகச் சுவாசிக்க வேண்டும். தங்களைத் தாங்களே ஆளவேண்டும், மாற்றான் ஆட்சியில் நாம் மண்டியிட்டுக் கிடக்க முடியாது என்ற ஒன்றுபட்ட உணர்வின் வழியே சமூக ஒருமைப்பாடுகளோடு ஒன்றிணைந்து நாட்டுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுக்க உயிர், உடல், பொருள் கால நேரங்கள் அனைத்தையும் தியாகம் செய்து அந்நியரின் அடக்குமுறை, சுரண்டல் ஆட்சியிலிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் தேசபிதாக்கள் காப்பாற்றினார்கள்.
அவ்வாறு போராடி 1948ஆம் ஆண்டு இந்நாட்டுக்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்த சுதந்திர இலங்கைத் தேசத்தின் தேச பிதாக்களாக டீ.எஸ். சேனநாயக்க, எப்.ஆர் சேனநாயக்க, எஸ்.டப்ளியூ. ஆர். டீ. பண்டாரநாயக்க, சேர் பாரன் ஜயதிலக்க, ஈ.டப்ளியூ. பெரேரா, டி.ஆர் விஜேயவர்தன, ஜேம்ஸ் பீரிஸ், ஆதர் வி. டயஸ், அநகாரிக தர்மபால, சேர். பொன்னம்பலம் இராமநாதன், சேர். பொன்னம்பலம் அருணாசலம், சேர். முத்துக்குமாரசுவாமி, சேர். வைத்தியலிங்கம் துரைசுவாமி, டாக்டர் ஆனந்த குமாரசுவாமி, ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர், சி.வை. தாமோதரம்பிள்ளை ஆகிய பெரும்பான்மை சிங்களத் தலைவர்களுடனும் சகோதர தமிழ் தலைவர்களுடனும் இணைந்து முஸ்லிம்களின் தலைவர்களாக விளங்கிய டாக்டர் ரீ.பி.ஜாயா, சேர்.ராசிக் பரீட், அறிஞர் சித்தி சின்னலெப்பை, வாப்பிச்சி மரைக்கார், சேர் மாக்கான் மாக்கார் போன்றவர்கள் ஒன்றிணைந்து பெற்றெடுத்த தேச விடுதலைக்கான வரலாறுகள் பௌத்த சிங்கள மக்கள் மத்தியில் மீள ஒப்புவிக்கப்பட வேண்டும்.
அத்துடன், இந்நாட்டுக்காக பாரிளயவில் அன்றும், இன்றும் இந்நாட்டு முஸ்லிம்கள் தியாகங்கள் பல புரிந்திருக்கிறார்கள், புரிந்துகொண்டிருக்கிறார்கள்.
இருப்பினும், பெரும்பான்மை மக்கள் மத்தியில் சிறுபான்மை இன மக்கள் தொடர்பாக குறிப்பாக யுத்த வெற்றியின் பின்னர் முஸ்லிம்கள் தொடர்பான சமூக அச்சம் பெரும்பான்மை மக்கள் மத்தியில் அநியாயமாகத் தோற்றுவிக்கப்பட்டது. முஸ்லிம்கள் தொடர்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள சமூக அச்சம் களையப்பட வேண்டும். அதற்கு முஸ்லிம் அரசியல் தலைமைகளும், சிவில் அமைப்புக்களும், பெரும்பான்மை அரசியல் தலைமைகளுடனும் சிவில் அமைப்புக்களுடனும் இணைந்து பெரும்பான்மை சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. கடந்த காலங்களிலும் பல்வேறு மட்டங்களிலும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதிலும் அம்முயற்சி வெற்றியளிக்கவில்லை என்பதை இத்தேர்தல் பெறுபேறுகள் வெளிப்படுத்தியிருக்கின்றன.
இந்நிலையின் 7ஆவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் வெற்றியின் பின்னரான உரைகள் அவருக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத மக்கள் மத்தியில் அவரின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான நம்பிக்கையை வளர்த்திருக்கிறது.
“எனக்கு ஆதரவாகவும், எதிராகவும் வாக்களித்த நாட்டு மக்களுக்கு நானே ஜனாதிபதி. ஆகவே அனைத்து மக்களும் எதிர்பார்க்கும் சிறந்த அரச நிர்வாகத்தினை முன்னெடுத்துச் செல்வேன். அனைவரும் இலங்கையர் என்ற அடிப்படையில் பாரபட்சமின்றிய விதத்தில் செயற்படுத்தப்படுவார்கள் என்ற அவரது வெற்றியின் பின்னரான அறிவிப்பின் நம்பிக்கையின் அடிப்படையில் சுபீட்சமான இலங்கையைக் கட்டியெழுப்பும் புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் கோட்பாட்டின் வெற்றியில் பங்காளர்களாக மாறுவதற்கு அனைவரும் இலங்கையர் என்ற அடிப்படையில் இந்நாட்டு முஸ்லிம்கள் ஒன்றிணைந்து செயற்பட உறுதிகொள்ள வேண்டும்.-Vidivelli
- எம்.எம்.ஏ.ஸமட்