சிங்கள ராவய அமைப்பு இதுவரை காலம் நாட்டில் முஸ்லிம், தமிழ் அடிப்படைவாதத்துக்கு எதிராக குரல் கொடுத்து வந்தது. எதிர்காலத்தில் அதற்கான தேவை ஏற்படாது என நாம் நினைக்கிறோம். எமது நாட்டுக்கு சிங்கள தலைவர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் நாட்டையும் சிங்களவர்களையும் அடிப்படைவாதிகளிடமிருந்து பாதுகாப்பார். அதனால் நாம் சிங்கள ராவய அமைப்பை எதிர்வரும் பொதுத் தேர்தலுக்குப் பின் கலைத்து விடத்தீர்மானித்திருக்கிறோம் என சிங்கள ராவயவின் தலைவர் மாகல் கந்தே சுகந்த தேரர் தெரிவித்தார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடக மாநாட்டிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இந்நாட்டில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியாது என்றிருந்த நிலையில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தவரே எமது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ. அவர் ஆளுமை மிக்கவர். அவர் பதவியேற்று சில மணி நேரங்களில் மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கைகள், நியமனங்கள் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இதுவோர் பௌத்த நாடு இந்நாட்டின் தலைவராக தகுதி வாய்ந்த பௌத்தர் ஒருவர் எமக்குக் கிடைத்துள்ளமை பெரும்பேறாகும்.
இந்நாட்டில் அடிப்படைவாதத்தை இல்லாமற்செய்து பௌத்தத்துக்கு முக்கியத்துவம் வழங்கி ஏனைய தமிழ், முஸ்லிம் மக்களையும் அவர் அரவணைத்துச் செல்வார் என்பதில் எமக்கு நம்பிக்கை இருக்கிறது.
இந்நாட்டில் ஒரே சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும். இந்நாடு பிளவுபடாமல் ஒரே நாடாக இருக்க வேண்டும் என்பதே எமது எண்ணக்கருவாகும். இதனை ஜனாதிபதி நிறைவேற்ற வேண்டும் என நாம் அவரைக் கோரியுள்ளோம்.
இதுவரை காலம் எமது கலாசாரம், எமது தொல்பொருள் பிரதேசங்கள், மிருக வதை தடுப்பு, ஹலால் ஒழிப்பு உட்பட பல விடயங்களை முன்வைத்து நாம் போராட்டங்கள் நடத்தினோம். இதன் பிறகு இவ்வாறான போராட்டங்களுக்கு அவசியமேற்படாது. அனைத்துக்கும் புதிய ஜனாதிபதி தீர்வு வழங்குவார். அதனால் எமது அழைப்பை கலைத்து விடத்தீர்மானித்துள்ளோம் என்றார்.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்