இந்தியாவின் வட மாநிலமான உத்தர பிரதேசத்தில் அமைந்துள்ள பாபரி மஸ்ஜித் அமைந்திருந்த காணி தொடர்பில் வழங்கப்பட்ட தீர்ப்பு மீளாய்வு செய்யப்பட வேண்டுமெனக் கோரி இந்திய உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்யவுள்ளதாக இந்திய முஸ்லிம் குழுவொன்று அறிவித்துள்ளது.
புத்திஜீவிகள் மற்றும் அமைப்புக்ககளின் ஒன்றிணைந்த கட்டமைப்பான அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட சபை, குறித்த காணியின் உரித்துரிமை தொடர்பான முஸ்லிம்களின் கோரிக்கையை நிராகரித்துள்ளமைக்கு எதிராக குறித்த தீர்ப்பினை மீளாய்வு செய்யுமாறு கோரும் விண்ணப்பமொன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
16 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கட்டப்பட்ட பாபரி மஸ்ஜித் அமைந்திருந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம் ராமர் கோயில் கட்டுவதற்கு இந்துக்களிடம் கையளிக்கப்பட வேண்டுமென உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பள்ளிவாசலொன் றைக் கட்டுவதற்கு மத்திய அரசாங்கமோ அல்லது மாநில அரசாங்கமோ ஐந்து ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட பொருத்தமான காணியொன்றினை சுன்னி வக்ப் சபைக்கு வழங்க வேண்டும் எனவும் இந்திய உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தது.
ஐந்து நீதிபதிகள் கையொப்பமிட்டுள்ள தீர்ப்பு தொடர்பில் அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட சபையைப் பிரதிநிதித்துவப் படுத்தும் முஸ்லிம் தரப்பு அதிருப்தியினை வெளியிட்டிருந்தது.-Vidivelli