ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவுக்கு பாகிஸ்தான் அரசும், அரசின் தலைமைத்துவமும் உணர்வுபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளதுடன் கோத்தாபய ராஜபக் ஷவின் தலைமையின் கீழ் இலங்கை வளமானதும், சமாதானதுமான தனது பயணத்தைத் தொடருமென நம்புவதாகவும் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் வெற்றி தொடர்பில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை ஜனநாயக குடியரசின் 7 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்கு நாம் வாழ்த்துத் தெரிவிக்கிறோம்.
சுதந்திரமானதும், நேர்மையானதும், சமாதானமுமான தேர்தல் ஒன்றினை நடத்தியமைக்காக தேர்தல் ஆணைக்குழுவையும் இலங்கை அரசாங்கத்தையும் நாம் பாராட்டுகின்றோம். பாகிஸ்தானின் தலைமைத்துவம் இலங்கையின் புதிய ஜனாதிபதியுடனும் அவரது குழுவினருடனும் பலமாக உள்ள உறவினை மேலும் பலப்படுத்திக் கொண்டு தொடர்புகளை முன்னெடுக்க விரும்புகிறது. இரு நாடுகளுக்குமிடையில் உறவுகளை மேலும் பலப்படுத்திக் கொள்ள எதிர்பார்க்கிறது.
பாகிஸ்தான் அரசு இரு நாடுகளுக்குமிடை யிலான சகோதர பிணைப்பை மேலும் அதிகரித்துக் கொள்ள விரும்புகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்