தமிழ் பேசும் மக்களின் வாக்குகளுக்கு இனவாத பரிமாணத்தைக் கற்பிப்பது நேர்மையற்றது
த.தே.கூ. தலைவர் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டுகிறார்.
ஜனாதிபதித் தேர்தலில் இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் வாக்களித்திருக்கும் முறைக்கு இனவாதப் பரிமாணத்தைக் கற்பிப்பது நேர்மையற்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருக்கிறார்.
தமிழ் பேசும் மக்கள் இந்த ஜனாதிபதித் தேர்தலில் இனவாத அடிப்படையில் வாக்களிப்பதற்கான தேவையும் எழவில்லை. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கும் கோத்தாபய ராஜபக் ஷவும், ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளரான சஜித் பிரேமதாசவும் சிங்கள பௌத்தர்களே. பொருளாதார விவகாரங்களைப் பொறுத்தவரையிலும்கூட அவர்களிருவரும் ஒரே மாதிரியான அணுகுமுறையைக் கொண்டவர்களே. ஆனால் சிறுபான்மையினத்தவரின் பிரச்சினைகளைப் பொறுத்தவரை சஜித் பிரேமதாச தேர்தல் பிரசாரங்களில் வரவேற்கக்கூடிய நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியிருந்தார் என்று சம்பந்தன் தெரிவித்திருக்கிறார்.
வடக்கு – கிழக்கு மாகாணங்கள் மற்றும் தலைநகர் கொழும்பு, மலையக தமிழர்கள் வாழும் பகுதிகளில் சஜித் பிரேமதாசவிற்குப் பெருமளவு வாக்குகள் கிடைத்திருப்பதை சுட்டிக்காட்டி, இலங்கை வரைபடத்தில் வர்ணத்தின் மூலமாக வேறுபடுத்தி சமூக ஊடகங்களில் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை இலங்கையின் இனப்பிளவை வெளிக்காட்டும் ஆணை அல்லது துருவமயப்பட்ட தீர்ப்பு என்று வர்ணித்து அபிப்பிராயங்கள் வெளியிடப்பட்ட வண்ணமுள்ளன.
தென்னிலங்கையில் அமோக செல்வாக்குக் கொண்டவரான கோத்தாபய ராஜபக் ஷவை நிராகரித்ததன் மூலம் இன அடிப்படையில் தமிழர்கள் வாக்களித்திருப்பதாகவும் சிலர் குற்றஞ்சாட்டினார்கள். இந்தக் கருத்துக்கள் எல்லாம் இணையத்தளங்களில் சூடான வாதப்பிரதிவாதங்களை மூளவைத்திருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. சமூக ஊடகங்களின் பதிவுகளில் இனவாத ரீதியான கருத்துப்பதிவுகள் பெருமளவில் இடம்பெறுவதாகவும் கவலை வெளியிடப்படுகின்றது. ‘தமிழ் மக்கள் இன அடிப்படையில் வாக்களிக்க விரும்பியிருந்தால் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனவாதத் தொனியுடனான கருத்துக்களை வெளியிட்ட தமிழ் வேட்பாளரான சிவாஜிலிங் கத்திற்கு அல்லவா வாக்களித்திருப்பார்கள்?’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கேள்வி எழுப்பினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்கும் அதன் நிலைப்பாட்டை வெளியிட்ட பிறகு, அக்கட்சி சஜித்துடன் உடன்படிக்கை ஒன்றைச் செய்திருப்பதாக கோத்தாபயவின் ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டினார்கள். ஆனால் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தேசிய பிரச்சினை தொடர்பாக முன்வைக்கப்பட்ட பல கொள்கைகள் மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதியாக அதிகாரத்திலிருந்த போது உறுதியளித்த விடயங்களிலிருந்து வேறுபட்டவை அல்ல. சஜித் பிரேமதாச உறுதியளித்த விடயங்கள் முன்னர் கேள்விப்படாதவையும் அல்ல என்று சம்பந்தன் கூறினார்.
கோத்தாபயவிற்கு மக்கள் அளித்திருக்கும் ஆணையை இனவாத அடிப்படையிலானதாகக் குறைத்து மதிப்பிடக்கூடாது என்பதும் முக்கியமானதாகும். இன்றைய அரசாங்கத்தின் செயற்பாடுகளால் ஏமாற்றமும், அதிருப்தியும் அடைந்த மக்கள் கோத்தாபயவிற்கு பெருமளவில் தமது ஆதரவை வெளிக்காட்டியிருக்கிறார்கள். வாழ்க்கைச்செலவு, ஊழல்மோசடி, உரமானியம், வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகளில் அரசாங்கம் முன்னர் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இவ்வாறாகப் பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்தியிருக்கின்றன என்று சம்பந்தன் விளக்கமளித்தார்.
‘மக்கள் தங்களது ஜனநாயகத் தெரிவுகளை செய்வதற்கான அருகதை உடையவர்கள். செல்லுபடியாகக் கூடியவகையில் அவர்கள் தமது வாக்குகளை அளிக்கும்போது அதனை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்’ என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ‘த இந்து’ பத்திரிகையின் கொழும்பு செய்தியாளர் மீரா ஸ்ரீனிவாசனுக்குக் கூறியிருக்கிறார்.-Vidivelli