எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலின் பின்பு பொதுபலசேனா அமைப்பைக் கலைத்து விடப் போவதாக அவ் அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
நேற்று ராஜகிரியவிலுள்ள பொதுபலசேனா அமைப்பின் காரியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,
சிறுபான்மை மக்களான தமிழ், முஸ்லிம்களின் வாக்குகள் இன்றி எமது நாட்டில் அரசாங்கம் ஒன்றினை அமைக்க முடியாது, ஜனாதிபதி ஒருவரையும் தெரிவு செய்ய முடியாது என்ற மாயையான நிலைப்பாடு இதுவரைகாலம் இருந்து வந்தது. ஆனால் இந்த ஜனாதிபதி தேர்தலுடன் முறியடிக்கப்பட்டுவிட்டது. கட்டுக்கதையாக மாறிவிட்டது.
தற்போது எமது நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவம் ஒன்று கிடைத்துள்ளது. எமது நாட்டையும் நாட்டு மக்களையும் அடிப்படைவாதிகளிடமிருந்து பாதுகாக்கக்கூடிய ஒரு தலைமைத்துவத்தையே நாம் எதிர்பார்த்தோம். பொதுத் தேர்தலின் பின்பு தகுதிவாய்ந்த அமைச்சரவையுடன், நேரான ஊழலற்ற பயணத்தை மேற்கொள்ள முடியும். அதற்கான தலைமைத்துவத்தை நாட்டு மக்கள் தெரிவு செய்திருக்கிறார்கள்.
நாட்டில் அடிப்படைவாதிகளுக்கும், இனவாதிகளுக்கும் இடமளிக்கப்படக் கூடாது. பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அடிப்படைவாதிகளிடமிருந்து நாட்டு மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படும் என்பதில் நம்பிக்கை இருக்கிறது.
இதனால் எமது அமைப்பு அவசியமில்லை என நாங்கள் நம்புகிறோம். நாங்கள் தேர்தல் முடிவு குறித்து மிகவும் மகிழ்கிறோம். 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். 20 வருடகாலமாக இந்து சமுத்திரத்தில் கண்ணீர் சிந்தும் நாடாக மாறியிருந்த எமது நாடு மீண்டும் இந்து சமுத்திரத்தில் ஓர் முத்தாக மாற்றம் பெறுவதற்கு சிங்களவர்கள் ஒன்றுபட வேண்டும் என்ற எமது கொள்கையை இதுவரை காலம் நாம் நாட்டு மக்களுக்கு வலியுறுத்தி வந்தோம்.
இப்போது சிங்களவர்களுக்கென்று ஒரு தலைவர் இருக்கிறார். இப்போது எமக்கு போராட்டங்கள் நடத்த வேண்டிய தேவை இருக்காது. நாட்டில் சட்டத்தை அமுல்படுத்துவதே எமக்குப் பிரச்சினையாக இருந்தது. சட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தால் சிதைவுக்குள்ளாகியுள்ள தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்ப முடியும்.
சிறுபான்மை வாக்குகள் இன்றி எமது நாட்டில் அரசாங்கமொன்றினை அமைக்க முடியாது என்ற மாயை இருந்தது. ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் பின்பு அந்தக் கருத்து முறியடிக்கப்பட்டுவிட்டது. இன்று நல்லதோர் சிறந்த தலைமைத்துவம் கிடைத்துள்ளது. பொதுத் தேர்தலின் பின்பு திறமையான புதிய அமைச்சர்களுடன் புதிய பயணத்தை எம்மால் ஆரம்பிக்க முடியும்.
நாட்டை வழிநடாத்த சிறந்த தலைமைத்துவம் கிடைத்துள்ளது. அதனால் இதன்பிறகு எமது அமைப்பு தேவையற்றது எனக் கருதுகிறோம். எனவே பொதுத் தேர்தலின் பின்பு எமது அமைப்பைக் கலைத்து விடத் தீர்மானித்துள்ளோம் என்றார்.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்