இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக் ஷ நேற்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
நேற்று அநுராதபுரம் ருவன்வெலிசாய வளாகத்தில் ஜயசிறி மஹா போதிக்கு அருகில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.
பதவிப்பிரமாண நிகழ்வில் கலந்துகொண்டு புதிய ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகையில்; தான் வெளியிட்ட கொள்கைப் பிரகடனத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக உறுதியளித்திருக்கிறார். தான் நாட்டை நேசிப்பதாகவும், நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்வதற்கு பாரிய பொறுப்புள்ளதென்பதையும் ஏற்றுக்கொண்டுள்ளார். நாட்டின் இறைமையை மதிக்கும்படி அனைத்து சர்வதேச நாடுகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். அனைத்தின மக்களையும் சமமாக நடத்துவதாகவும், நாட்டில் நல்லிணக்கத்தையும், இன நல்லுறவையும் கட்டியெழுப்புவதாகவும் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதாகவும் கூறியுள்ளார்.
இதேவேளை “சிங்கள மக்களின் வாக்குகளின் அடிப்படையிலே நான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டேன். தமிழ், முஸ்லிம் மக்களிடம் எனக்கு ஆதரவு வழங்குமாறு கோரியிருந்தேன். ஆதரவு கிடைக்கவில்லை என்றாலும் நான் உங்கள் அனைவரினதும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளேன். நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு உங்களது பங்களிப்புத் தேவை. எனது பயணத்தில் தமிழர்களும், சிங்களவர்களும் பங்காளர்களாக வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஜனாதிபதி வேட்பாளர்கள் கலந்து கொண்ட நிகழ்விலும் புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ தான் வெளியிட்ட கொள்கை பிரகடனத்தை முழுமையாக நிறைவேற்றுவதாக உறுதியளித்திருந்தார்.
இதேவேளை, நீண்டகால இடைவெளிக்குள்ளாகியுள்ள மாகாண சபைத் தேர்தலை தாமதமில்லாமல் நடத்துவதற்கு முன்வர வேண்டும் என புதிய ஜனாதிபதிக்கு தேர்தல் ஆணைக்குவின் தலைவரினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் நாட்டினதும், நாட்டு மக்களினதும் பாதுகாப்பினை உறுதி செய்வதாகவும் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தையும் நல்லுறவையும் வளர்ப்பதாகவும் ஜனாதிபதியின் ஆரம்ப செயற்பாடுகள் அமையவேண்டும். மாகாண சபைத்தேர்தல் தொடர்பிலும் உடன் கவனம் செலுத்தப்படவேண்டும்.
முஸ்லிம்கள் தேர்தலில் தனக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ற அவரது மனப்பதிவினை இல்லாமற் செய்வதற்கு முஸ்லிம் அரசியல் தலைவர்கள் புதிய ஜனாதிபதியின் நாடு மற்றும் சமூகம் சார்ந்த செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி விடுத்துள்ள அறை கூவலுக்கு முஸ்லிம் அரசியல் தலைமைகள் செவி சாய்க்கவேண்டும். புதிய ஆட்சியாளர்களுடன் இணைந்து செயற்பட முஸ்லிம் தலைமைகள் முன்வர வேண்டுமென அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கை முஸ்லிம்கள் நல்லதொரு ஆட்சியாளரைத் தருமாறு பள்ளிவாசல்களில் பிரார்த்தனையில் ஈடுபட்டார்கள். சிலர் நோன்பும் நோற்றார்கள், அல்லாஹ் அந்தப் பிரார்த்தனைகளை அங்கீகரித்துள்ளான். நாம் அந்த முடிவுக்கு மதிப்பளிக்கவேண்டும். புதிய ஜனாதிபதி தனக்கு வாக்களிக்காத மக்களதும் ஜனாதிபதியாவார் என அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன் ஆகியோரும் புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்கள்.
‘உங்களது நிர்வாகத்தின் கீழ் அமைதி, ஒற்றுமை, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம், நல்லெண்ணம் என்பவற்றுக்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென’ அமைச்சர் ஹக்கீம் வேண்டியுள்ளார்.
உங்களது வெற்றியில் பங்கெடுக்காத சிறுபான்மை மக்களின் மனங்களை வென்றெடுத்து இனங்களுக்கு இடையில் இணைப்புப் பாலமாக இருக்க வேண்டும் எனவும் புதிய ஜனாதிபதியை அவர் வேண்டியுள்ளார்.
முன்னாள் வடமாகாண ஆளுநர் சி. விக்னேஸ்வரனும், புதிய ஜனாதிபதியை வாழ்த்தியுள்ளார். ஜனாதிபதித் தேர்தல் இந்நாட்டு மக்கள் இன ரீதியாக இரு துருவங்களாகப் பிரிந்திருப்பதை உணர்த்தியுள்ளமை இந்நாட்டில் இனப்பிரச்சினை ஒன்றிருப்பதை தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது என்பதையும் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மொத்தத்தில் புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ முஸ்லிம்களதும், தமிழர்களதும் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வேண்டும். முஸ்லிம்கள் இந்நாட்டில் சுதந்திரமாக அச்சமின்றி வாழும் சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதே சமூகத்தின் அபிலாஷையாக இருக்கிறது.-Vidivelli