சிங்கள மக்களே என்னை ஜனாதிபதியாக தெரிவு செய்தார்கள் தமிழ், முஸ்லிம் மக்கள் ஆதரவளிக்க வேண்டும்.
பதவிப்பிரமாணத்தையடுத்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அழைப்பு
”இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக வரலாற்று சிறப்புமிக்க ருவன்வெலிசாய வளாகத்தில் பதவியேற்றதன் பின்னர், துட்டகைமுனு மன்னனின் உருவச்சிலைக்கு அருகிலிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதையிட்டு பெருமகிழ்சியடைகின்றேன். சிங்கள மக்களின் ஆதரவிலேயே முழு அளவில் வெற்றிபெற்றுள்ளேன்” என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ தெரிவித்தார்.
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஆதரவைக் கோரியிருந்த போதிலும் எதிர்பார்த்தளவு அவர்களின் ஆதரவு கிடைக்கவில்லை. இருப்பினும், அனைத்து மக்களின் ஜனாதிபதி என்ற வகையில் எதிர்காலத்திலேனும் ஒன்றிணைந்து பயணிக்க வருமாறு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன் எனவும் குறிப்பிட்டார்.
அநுராதபுரம், -ருவன்வலிசாயவில் நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ தொடர்ந்தும் கூறுகையில்,
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும்போது சிங்கள மக்களின் ஆதரவுடன் வெற்றிபெற முடியும் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்தேன். எமது வெற்றியில் தமிழ், முஸ்லிம் மக்களும் பங்குகொள்ள வேண்டுமென்று அழைப்பு விடுத்தேன். ஆனால், எதிர்பார்த்தளவு அவர்களின் ஆதரவு கிடைக்கப் பெறவில்லை. இலங்கையர் என்ற அடிப்படையில் ஒன்றிணைந்து அனைவரும் செயற்படுவதற்கு மீண்டும் அழைப்பு விடுக்கின்றேன்.
கிடைக்கப் பெற்றுள்ள அமோக வெற்றிக்கு மகாநாயக்க தேரர்களின் ஆசிர்வாதமே பிரதானமாகக் காணப்படுகின்றது. இன்று நான் முப்படை தளபதியாகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் நாட்டு மக்கள் அனைவரது பாதுகாப்பையும் பொறுப்பேற்கின்றேன். அனைத்தின மக்களுக்கும் சிறந்த தலைவராக செயற்படுவேன். தெற்கில் பிறந்த நான் கொழும்பு ஆனந்தா கல்லூரியில் பௌத்த மதக் கோட்பாடுகளுக்கமைய கல்வி கற்றமையால் பௌத்த மதம் என்னுள் பிரிக்க முடியாத ஒன்றாகக் காணப்படுகின்றது.
பௌத்தமதக் கோட்பாடுகளும், கலாசாரங்களும் முழுமையாக பாதுகாக்கப்படும். அதற்கு முழுமையான என்றும் நிலையான அரச ஆதரவை வழங்குவேன். நாட்டில் வாழும் ஏனைய பிரஜைகளின் மதமும், அவர்களின் பாரம்பரிய தனித்துவமும் எவ்வித பாதிப்புமின்றிப் பாதுகாக்கப்படும்.
எனது பதவிக் காலத்திற்குள் பௌத்த மதத்தினை பாதுகாத்து அதனை தொடர்ந்து வளர்ச்சிபெறவும் ஒத்துழைப்பு வழங்கப்படுவதுடன், நெடுநாள் கலாசாரத்தைக் கொண்டுள்ள பௌத்த மதம் தொடர்ந்து மேம்படுத்தப்படும். வரலாற்று காலம் தொடக்கம் இலங்கையர் என்ற கொள்கையின் கீழ் வாழ்ந்த மற்றும் வாழும் மக்கள் தொடர்ந்து இலங்கையர்களாகவே மதிக்கப்படுவார்கள். அதில் எவ்விதம மாற்றமும் கிடையாது.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை எனக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு மனதார நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஸில் ராஜபக் ஷ மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் உட்பட நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியல் கலாசாரம், தேர்தல் காலத்தில் பிறருக்கு சேறுபூசாமை, பொலித்தீன் பாவனை நிராகரிப்பு, சுற்றுசூழல் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் அனைத்தும் வெற்றிகரமான முறையில் முன்னெடுத்து செல்லப்பட்டன. இவை அனைத்தும் இனிவரும் காலங்களில் தொடர்ந்து முறையாக முன்னெடுத்துச் செல்லப்படும்.
எதிர்பார்த்த இலக்கினை அடைந்து விட்டோம். இனி, தேசியம் என்ற அடிப்படையில் ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்ல வேண்டியது மாத்திரமே மிகுதியாக காணப்படுகின்றது.
சுபீட்சமான எதிர்காலம் என்ற தேர்தல் கொள்கைப் பிரகடனத்தை அடிப்படையாகக் கொண்டே மக்களாணையை பெற்றுள்ளேன். மக்களை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார முறைமை, குறிப்பிட்டதை போன்று 5வருட பதவிக் காலத்திற்குள் செயற்படுத்தப்படும்.
ஒருமித்த நாடு , இறையாண்மை, தேசிய பொருளாதாரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட அரச நிர்வா செயலொழுங்கு செயற்படுத்தப்படும். தேசிய பாதுகாப்பிற்கே எனது ஆட்சியில் முன்னுரிமை கொடுக்கப்படும என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது. கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார முறைமை நிகழ்காலத்தில் உருவாக்கப்பட்டு அவை எதிர்கால சந்ததியினருக்கும் சாதகமாக அமையும் விதத்தில் மாற்றியமைக்கப்படும்.
அனைத்து நாடுகளுடனான உறவுகளும் எவ்வித பாரபட்சமும் இன்றிய முறையில் முன்னெடுத்து செல்லப்படும். சர்வதேச பலம் வாய்ந்த நாடுகளின் அதிகாரப் போட்டிக்குள் நாம் பலியாக வேண்டிய தேவை எமக்கு கிடையாது. அனைத்து உலக நாடுகளுடனும் நடுநிலையான பக்கச்சார்பற்ற கொள்கையைப் பின்பற்றுவேன். அதேபோன்று நாட்டின் இறையாண்மை மற்றும் சுயாதீனத் தன்மைக்கு தாக்கம் செலுத்தும் எந்தவொரு விடயத்திற்கும் இடமளியேன். 21ஆம் நூற்றாண்டினை நோக்கிய இன்றைய வாழ்க்கை முறையில் இலங்கை மக்களும் சவால்களை எதிர்கொள்ளும் அரச நிர்வாகம் செயற்படுத்தப்படும்.
ஊழல் மோசடியற்ற அரச நிர்வாகம், சட்டத்தின் ஆட்சியின் பிரகாரமான சட்டக் கட்டமைப்பு ஆகியவை மீண்டும் முறையாகப் பலமாக கட்டியெழுப்பப்படும். தேசிய நிதி மோசடிகளுக்கு எந்நிலையிலும் இடமளிக்க முடியாது. இதற்கான முறையான மார்க்கங்களையும் இனி செயற்படுத்துவேன். அனைத்து துறைகளிலும் நவீன தொழிநுட்ப முறைமைகள் அமுல்படுத்தப்படும்.
நீதியானதும், நேர்மையானதுமான அரசாங்கத்தை முன்கொண்டு செல்வதற்குமான ஒத்துழைப்பினை அனைவரும் வழங்க வேண்டும். அனைத்து மக்களுக்காகவும் செயற்படுவதே ஜனாதிபதி பதவியின் கடமையாகக் காணப்படும்.
பொறுப்புக்களிலிருந்து ஒருபோதும் விடுபடவும் மாட்டேன். நிறைவுபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் எனக்கு ஆதரவு வழங்கிய மற்றும் ஆதரவு வழங்காமலிருந்த அனைத்து மக்களினதும் உரிமைகளையும் ஜனாதிபதி என்ற பதவி நிலையிலிருந்து முழுமையாகப் பாதுகாப்பேன்.
தேர்தல் கொள்கை பிரகடனத்தினை அடிப்படையாகக் கொண்ட திட்டங்கள் பலமாகக் கொண்டு செல்லப்படவுள்ளன. கண்முன் பல சவால்கள் காணப்படுகின்றன. அக்கறையிருந்தால் அனைத்து சவால்களையும் வெற்றிகொள்ள முடியும். நாட்டை முன்னேற்றுவதற்கான அனைத்து திட்டங்களும் கைவசம் உள்ளன.
இந்நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகிய நான் நாட்டு மக்களின் நன்மைக்காக எந்நிலையிலும் நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாக செயற்படுத்துவதற்கு ஒருபோதும் பின்வாங்க மாட்டேன். நாட்டு மக்களின் நலனுக்காக அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஒருபோதும் தயங்கமாட்டேன். கிடைக்கப்பெற்ற மக்களாணையை முறையாக செயற்படுத்த எனது கொள்கையை அடிப்படையாகக் கொண்ட அரசாங்கத்தை விரைவில் தோற்றுவிப்பேன்.
இது என் தாய்நாடு. என் நாட்டின் மீது எனக்கு முழுமையான உரிமை மற்றும் பற்று உண்டு. சுபீட்சமான எதிர்காலத்தை உடைய நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாட்டு மக்கள் அனைவரும் என்னுடன் ஒன்றுபட வேண்டும் என்றார்.-Vidivelli
- அநுராதபுரத்திலிருந்து இ. ஹஷான்