தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உபதலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என அறியப்படும் வினாயகமூர்த்தி முரளிதரன், முஸ்லிம்களை இலக்கு வைத்து வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்துக்கள் தொடர்பில் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் தலைமையகத்துக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர்களில் ஒருவரான பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் அனுப்பியுள்ள முறைப்பாட்டுக்கமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் பொறுப்பு பொலிஸ் தலைமையகத்தினால் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பாரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் உயரதிகாரி ஒருவர் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தல் வாக்குப் பதிவுகள் இடம்பெற முன்னர், கருணா அம்மான் வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்துக்களில், முஸ்லிம், தமிழ் மக்களிடையே சந்தேகங்களை தோற்றுவிக்கும் வகையில் கருத்துக்கள் வெளியிடப்பட்டதாக முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, தேர்தலின் போது, சஜித் வெற்றிபெற்றால் கிழக்கில் முஸ்லிம் தீவிரவாதிகளால் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாகுமென கருணா அம்மான் தெரிவிக்கும் காணொலி வெளியாகியிருந்தது. அந்த காணொலியும் விசாரணைக்காக விசாரணையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli
- எம்.எப்.எம்.பஸீர்