ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் ஒரு தரப்பினருக்கு வெற்றியை வழங்கியிருந்தாலும் மக்கள் தோல்வியையே சந்தித்துள்ளனர் என்றும் அதனை அவர்கள் விரைவில் உணர்ந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ள தேசிய மக்கள் சக்தி இயக்கம், மக்களுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்பட போவதாகவும் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் பின்னர் விசேட ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்த இயக்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் களமிறங்கிய கோத்தாபய ராஜபக் ஷ வெற்றி பெற்றுள்ளார். தேசிய மக்கள் சக்தி என்ற வகையில் எமக்கு கிடைக்கப் பெற்றுள்ள தேர்தல் பெறுபேறுகள் தொடர்பில் எம்மால் திருப்தி கொள்ள முடியாது. நாங்கள் எதிர்பார்த்த பெறுபேற்றை எங்களால் அடைய முடியாமல் போயுள்ளதை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம்.
தேசப்பற்றுள்ள, ஜனநாயகத்தை பிரதிபலிக்கும் அரசியல் முகாம் என்ற வகையில் தேசிய மக்கள் சக்தி இம்முறை தேர்தலின் போது மக்களை மையப்படுத்தி பாரிய செயற்திட்டத்தை முன்னெடுத்திருந்தது. அதற்கமைய இலங்கை தேர்தல் மேடைகளில் இதுவரையில் முன்னெடுக்கப்பட்டு வந்த சேறு பூசல்கள், வெறுக்கத்தக்க பேச்சுகள், சிறுபிள்ளைத் தனமான வாக்குறுதிகளை வழங்குவதை விடுத்து நாட்டில் நிரந்தரமான கொள்கையை கடைப்பிடிக்க நாம் நடவடிக்கை எடுத்தோம்.
இந்த நடவடிக்கையில் பெரும் எண்ணிக்கையானோரை அணிதிரட்ட எடுத்த நடவடிக்கையானது எமக்கு கிடைத்த நீண்டகால வெற்றியாகும்.ஜனாதிபதி தேர்தல் மேடைகளில் சில கட்சிகள் இன வாதத்தை பேசி ஒருவருக்கொருவரை பயமுறுத்தும் முயற்சிகளை முன்னெடுக்கையில், இனவாதத்தை விடுத்து அரசியல் மற்றும் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்த பிரசார மேடைகளில் எம்மால் முடிந்தது.
இந்நிலைமை எதிர்காலம் தொடர்பான நல்ல சமிக்ஞை. ஜனாதிபதி தேர்தலை பொறுத்தமட்டில் வட பகுதி மக்கள் மத்தியிலும் தென்பகுதி மக்கள் மத்தியிலும் பயத்தை உருவாக்கி மக்களை திசைதிருப்பி தமக்கு வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக இரண்டு அரசியல் கட்சிகளும் முயற்சித்தது என்பது தெளிவான விடயமாகும்.
கொள்கைகள் வாதப்பிரதிவாதங்களினூடாக மக்களை தெளிவுபடுத்தி அவர்களின் வாக்குகளை பெறுவதற்கு நாங்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் அக்கட்சிகளின் நடவடிக்கைகளினால் பயன்தராமல் போனது தெளிவாகியது.
எது எப்படியாயினும் இந்த தேர்தல் முடிவுகளின் படி வெற்றியடைந்த தரப்பினர் தங்களுடைய வெற்றி தொடர்பில் மகிழ்ச்சி கண்டாலும் , மக்கள் இதனால் தோல்வியையே கண்டுள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார அரசியல் செயற்பாடுகள் , கலாசார முரண்பாடுகள் தொடர்பில் தற்போது ஆட்சிக்கு வந்தவர்களிடம் எந்தவித தீர்மானமும் இல்லை.
தாம் இதுவரையும் வெற்றி பெறவில்லை என்பதையும் , இனிவரும் காலங்களில் வெற்றி பெற வேண்டும் என்றும் மக்கள் விரைவில் புரிந்து கொள்வார்கள். இவ்வாறான நிலையில் மக்கள் தொடர்பான எமது கடமையை தொடர்ந்தும் நாம் முன்னெடுப்போம்.
அதேவேளை தேர்தலின் போது எந்தவித அரசியல் இலாபத்தையும் எதிர்பாராமல் எம்மோடு கைக்கோர்த்து செயற்பட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதுடன், மக்கள் மத்தியில் நாம் களமிறக்கிய வேட்பாளர் தோல்வியடைந்திருந்தாலும் நாங்கள் சோர்வடையாமல் தொடர்ந்தும் எமது வெற்றிக்காக போராடுவோம்.-Vidivelli