துஆக்களை அல்லாஹ் அங்கீகரித்துள்ளான்.
புதிய ஆட்சியாளர்களுடன் இணைந்து செயற்பட முன்வர வேண்டும்; சட்டத்தரணி அலி சப்ரி
இலங்கை முஸ்லிம்கள் நல்லதொரு ஆட்சியாளரைத் தருமாறு பள்ளிவாசல்களில் பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். சிலர் நோன்பும் நோற்றனர். அல்லாஹ் அந்த பிரார்த்தனைகளை அங்கீகரித்து இன்று ஓர் ஆட்சியாளரை தந்துள்ளான். அல்லாஹ்வின் அந்த முடிவுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். பழைய கதைகளை பேசிக் கொண்டிருக்காமல் அல்லாஹ் மீது நம்பிக்கை வைத்து புதிய ஆட்சியாளர்களுடன் இணைந்து செயற்பட முஸ்லிம்கள் முன்வர வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணியும் பொது ஜன பெரமுன கட்சியின் சட்ட ஆலோசகருமான அலி சப்ரி ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தல் பெறுபேறுகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
இனவாத அரசியலை கைவிட்டுவிட்டு தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டும். இந்த நாட்டுக்கு நல்லதொரு எதிர்காலம் பிறந்துள்ளது. எல்லா மக்களின் நலன்களுக்காகவும் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளுக்காகவும் நாங்கள் குரல் கொடுக்க தயாராகவுள்ளோம்.
முஸ்லிம் சமூகத்திற்கு எங்களால் தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம். நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதன் மூலம் முஸ்லிம்களை மாத்திரமன்றி சகல மக்களையும் பாதுகாப்போம். இன்று (நேற்று) தேர்தல் திணைக்களத்தில் இடம்பெற்ற நிகழ்வில் புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச கூறியதைப் போன்று அவர் தனக்கு வாக்களித்த மக்களுக்கு மாத்திரமன்றி வாக்களிக்காத மக்களுக்கும் சேவையாற்றுவார் என்பதை நானும் உறுதிப்படுத்துகிறேன் என்றார்.-Vidivelli