வாக்களிக்கும் போது மாத்திரம் முக அடையாளத்தை காண்பித்தால் போதுமானது
முகத்திரை அணிந்து வரிசையில் நிற்கலாம் என்கிறார் ஆணைக்குழுவின் தலைவர்.
வாக்குச் சாவடிகளுக்கு புர்கா, நிகாப் அணிந்து செல்வதற்கு எதுவித தடையுமில்லை. வாக்களிப்பு நிலைய அதிகாரிகளுக்கு தமது அடையாளத்தைக் காட்டுவதற்காக மட்டும் அந்த இடத்தில் அவற்றை அகற்றவேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்காக வரிசையில் நிற்கும்போதுகூட அவற்றை அகற்ற வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்தார்.
வாக்குச்சாவடிகளுக்கு புர்கா,நிக்காப் அணிந்துசெல்லமுடியாதென சில நாட்களாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் உலாவருவது தொடர்பில் சட்டத்தரணி வை.எல்.எஸ். ஹமீட், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவை தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
” இது வழமையான நடைமுறையாகும். எனவே, பிழையான செய்திகளை யாரும் பரப்பாதீர்கள். அதேநேரம், அவ்வாறு முகத்தை மறைக்காமல் வரமுடியுமானால் அது வரவேற்கத்தக்கது” என்றும் மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்தார்.-Vidivelli