குடியுரிமையற்றவர் என உறுதிப்படுத்தப்பட்டால் குறித்த வேற்பாளர் வெற்றி பெற்றாலும் நிராகரிக்கப்டுவார்.
சுயாதீன தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு: ஊடகங்களின் பக்கச்சார்பு குறித்தும் விசனம்
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் குடியுரிமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை சவாலுக்குட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தேர்தலில் தாக்கம் செலுத்தாது என்று சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வேட்பாளர் ஒருவரின் குடியுரிமை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த ஆணையாளர் கூறுகையில்:
கேள்வி: குறித்த சர்ச்சைக்குரிய வேட்பாளர் தனது வெளிநாட்டு குடியுரிமையை நீக்கியதற்கான ஆவணங்களை உங்களிடம் சமர்ப்பித்திருப்பதாகவும், அதனை நீங்கள் ஏற்றுக் கொண்டதாகவும் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவரது சட்டத்தரணியொருவர் கூறினார். எனினும் பிரபல ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் நீங்கள் அதை நிராகரித்திருக்கிறீர்கள். இவ்விடயத்தின் உண்மைத் தன்மையை தெளிவுபடுத்த முடியுமா?
பதில்: குறித்த வேட்பாளரின் பிரதிநிதிகள் சிலர் கடந்த ஆகஸ்ட் மாதம் என்னை சந்தித்திருந்தார்கள். அதன் போது வேட்பாளர் தனது வெளிநாட்டு பிரஜாவுரிமையை நீக்கிவிட்டார் எனக் கூறி சில ஆவணங்களை காண்பித்தார்கள். அதனை நானும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் சக உறுப்பினர்களும் பார்வையிட்டோம். அதன் பின்னர் அந்த ஆவணங்களை அவர்களிடமே கையளித்துவிட்டோம். அவற்றைப் பெற்றுக் கொள்வதற்கான அல்லது அதன் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துவதற்கான தேவையோ தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடையாது. காரணம் அரசியலமைப்பில் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான உறுப்புரையில் இவ்விடயம் தொடர்பில் குறிப்பிடப்படவில்லை. நாம் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களில் மாத்திரமே கவனம் செலுத்துவோம்.
மேலும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர் ஒருவரின் வேட்புமனு நிராகரிக்கப்படுவதற்கான காரணங்கள் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அவற்றில் தற்போது குறித்த வேட்பாளருக்கு காணப்படும் குடியுரிமை விவகாரம் தொடர்பில் எதுவும் கூறப்படவில்லை.
கேள்வி: நாட்டின் ஜனாதிபதியாக விரும்பும் வேட்பாளரின் தகுதிகள் பற்றி தேர்தல்கள் ஆணைக்குழு ஆராய வேண்டிய தேவை இல்லையா?
பதில்: அவ்வாறு கூற முடியாது. காரணம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் எவை என்பன பற்றியும் அவற்றை யார் உறுதிப்படுத்த வேண்டும் என்பது பற்றியும் தேர்தல்கள் ஆணைக்குழு உரிய தரப்பினருக்கு அறிவித்துள்ளது. அதற்கமைய வேட்பாளருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் பற்றி அங்கீகரிக்கப்பட்ட கட்சியொன்றின் செயலாளரே ஆணைக்குழுவுக்கு உறுதிப்படுத்த வேண்டும். அது எமது கடமையல்ல.
கேள்வி: அவ்வாறெனில் தேர்தலில் குறித்த சர்ச்சைக்குரிய வேட்பாளர் வெற்றி பெறும் பட்சத்தில், அதன் பின்னர் அவர் தனது வெளிநாட்டு குடியுரிமையை நீக்கிக் கொள்ளவில்லை என்பது தெரியவந்தால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை என்ன?
பதில்: அந்த வேட்பாளருடைய வெற்றி நிராகரிக்கப்படும்.
கேள்வி: அப்படியானால் மீண்டும் தேர்தல் நடத்தப்படுமா?
பதில்: அதனை அரசியலமைப்பை அடிப்படையாகக் கொண்டே அறிவிக்க முடியும்.
இதேவேளை, தேர்தல் ஏற்பாடுகள் குறித்தும் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இங்கு கருத்து வெளியிட்டார். அவர் தொடர்ந்து கூறுகையில், சர்வதேச வன்முறைகள் அற்ற தினமான நவம்பர் 16 ஆம் திகதி சனிக்கிழமை ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டிருக்கின்றன. ஜனாதிபதித் தேர்தலுக்காக சுமார் 750 கோடி செலவிடப்பட்டுள்ளது.
ஊடகங்கள் மீது விசனம்
மிக அதிகளவாக ஊடகங்கள் பக்கச்சார்பாக செயற்பட்ட தேர்தல் இதுவாகும். சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்புக்கு அமைய பக்கச் சார்பின்றி செயற்பட்ட ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். எனினும் அரச ஊடகங்கள் உட்பட ஏனைய பிரதான ஊடகங்கள் வெளிப்படையாகவே குறிப்பிட்ட வேட்பாளர்களுக்கு சார்பாகவே செயற்படுகின்றன. இவ்வாறு பக்கச் சார்பாக செயற்பட்ட ஊடகங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவால் இனங்காணப்பட்டுள்ளன.
இவ்வாறு இனங்காணப்பட்டுள்ள இரு பிரதான ஊடகங்களுக்கு எதிராக தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும். சில சந்தர்ப்பங்களில் அரசாங்க தகவல் திணைக்களத்துக்கு இவை தொடர்பில் அறிவித்து அவற்றுக்கு தேர்தல் முடிவுகளை அனுப்பாமல் இருப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கட்சி அல்லது பிரதான வேட்பாளர் தொடர்பான பாடல்களையும் ஒலி, ஒளிபரப்பப்படக் கூடாது.
அச்சு ஊடகங்கள்
இன்று (நேற்று) நடைபெற்ற அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் தொடர்பான செய்திகளை நாளை (இன்று) மாத்திரமே பிரசுரிக்க முடியும். மேலும் விளம்பரங்கள் அனைத்தும் தவிர்க்கப்பட வேண்டும்.
தனியார் வகுப்புக்கள் மீது முறைப்பாடு
சில பிரதேசங்களில் நடத்தப்படும் தனியார் வகுப்புக்களில் குறிப்பிட்ட வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு ஆசிரியர்கள் மாணவர்களிடம் கூறியதாக குரல் ஆதரத்துடன் பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். இவ்வாறு செயற்பட்ட ஆசிரியர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மதகுருமார்கள் மீது நடவடிக்கை
செவ்வாய்க்கிழமை போயா தினத்தன்று சில மதகுருமார்கள் சமய வழிபாடுகளின் பின்னர் செய்கின்ற உபதேசத்தில் அரசியல் பேசியதாகவும், குறிப்பிட்ட வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு கோரியதாகவும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இவ்வாறு மதங்களை வைத்து அரசியல் செய்வது ஏற்றுக் கொள்ள முடியாததாகும். எனினும் மதகுருமார் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு விரும்பவில்லை என்பதால் அந்த பொறுப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எனினும், இம்முறை இவ்வாறான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருந்த போதிலும் பல வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியிருந்த போதிலும் எவ்வித கொலை சம்பவங்களும் பதிவாகவில்லை என்பது சுட்டிக்காட்ட வேண்டிய விடயமாகும்.
கட்சி காரியாலயங்கள் மூடப்பட வேண்டும்
தேர்தல் தொகுதிகளில் வழமையாக செயற்படும் கட்சிக் காரியாலயங்களைத் தவிர தொகுதிகள், கிராமங்களில் அமைக்கப்பட்டிருக்கும் காரியாலயங்கள் அனைத்தும் வெள்ளிக்கிழமை மூடப்பட வேண்டும். இவ்வாறான காரியாலயங்களில் வைக்கப்பட்டிருக்கும் பதாதைகள் , ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகள் என்பன இன்றைய தினம் அப்புறப்படுத்தப்பட வேண்டும்.
மேலும் ஏதேனுமொரு பிரதேசத்தில் வாக்களிப்பு நிலையமொன்றிலிருந்து 500 மீற்றர் தூரத்துக்கு அருகில் வாக்களிப்பு நிலையமொன்று அமைந்திருந்தால் குறித்த தொகுதி காரியாலயமும் மூடப்பட வேண்டும்.
தேர்தல் பணிக்கு வருகை தராதோர் மீது நடவடிக்கை
முறையான காரணங்கள் இன்றி தேர்தல் பணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள அரச அதிகாரிகள் பணிக்கு சமுகமளிக்காவிட்டால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறானவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் மற்றும் கூடியது 3 வருட சிறைத் தண்டனை வழங்கப்படும்.
வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் வருகை
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அழைப்பிற்கேற்ப வெளிநாட்டிலிருந்து கண்காணிப்பாளர்கள் வருகை தந்திருக்கிறார்கள். உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்ட 12 பேரில் 8 பேர் வரை இது வரையில் வருகை தந்திருக்கிறார்கள். இந்தியாவிலிருந்து நால்வரும், மாலைதீவி லிருந்து மூவரும், இந்தோனேஷியாவிலிருந்து இருவரும், தென்னா பிரிக்காவிலிருந்து ஒருவரும் வருகை தந்திருக்கிறார்கள். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொதுநலவாய அமைப்புக்களிலிருந்தும் மேலும் பல கண்காணிப்பாளர்கள் வருகை தரவிருக்கின்றனர்.
சமூக வலைத்தளங்களிலும் விளம்பரங்கள் நீக்கப்பட வேண்டும்
சமூக வலைத்தளங்களில் சில பக்கங்களில் தேர்தல் தொடர்பான விளம்பரங்கள் ஒளிபரப்பப்படுகின்றன. அந்த விளம்பரங்களும் நீக்கப்பட வேண்டும். பேஸ் புக் அல்லது யூடியூப் உள்ளிட்ட ஏனைய சமூக வலைத்தளங்களில் கட்சி அல்லது வேட்பாளர் தொடர்பான சிறு காணொலிகளும் ஒளிபரப்பப்படுகின்றன. அவற்றையும் நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஆணைக்குழு கோரிக்கை விடுக்கிறது.-Vidivelli